தேசபக்தி டெபிட் கார்டு!





இரண்டாயிரம் ரூபாய்க்கு ஒரு மிக்ஸி வாங்குகிறீர்கள். உங்கள் டெபிட் கார்டை ஸ்வைப் செய்து வாங்கும்போது நீங்கள் தரும் பணத்தை எத்தனை பேர் பிரித்துக் கொள்கிறார்கள் என்று தெரியுமா?

நீங்கள் தரும் 2000 ரூபாயில், 1980 ரூபாய்தான் அந்தக் கடைக்காரர் அக்கவுன்ட்டுக்கு போகும். மீதி ஒரு சதவீதம் - அதாவது 20 ரூபாய் பரிவர்த்தனைக் கட்டணம். அந்தக் கடைக்காரர் கார்டைத் தேய்க்க ஒரு மெஷின் வைத்திருக்கிறாரே... அதை நிறுவிய வங்கிக்கு 8 ரூபாய். உங்களுக்கு டெபிட் கார்டு வழங்கிய வங்கிக்கு 12 ரூபாய் போகும். இந்த இரண்டு வங்கிகளும் தலா 2 ரூபாயை ‘பேமென்ட் கேட்வே’ நிறுவனத்துக்குத் தரும். உங்கள் டெபிட் கார்டில் விசா, மாஸ்டர் கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் என எழுதியிருக்குமே... அவைதான் ‘பேமென்ட் கேட்வே’ நிறுவனங்கள்.
வெறும் 2 ரூபாய் மேட்டர் இல்லை. இந்திய மக்கள்தொகை 120 கோடி. இதில் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை பல கோடி என்றால், தினம் தினம் ஒவ்வொரு மூலையிலும் கார்டு தேய்த்து பொருள் வாங்குகிறவர்கள் அத்தனை பேர் வழியாகவும் சுலபமாக கோடிகளை சம்பாதிக்கின்றன இந்த நிறுவனங்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் காசு கொடுத்து பொருள் வாங்குவதற்கும் கார்டு தேய்த்து வாங்குவதற்கும் வித்தியாசம் உண்டு. காசு கொடுத்து வாங்குபவர்களுக்கு தள்ளுபடி தருவார்கள். வங்கிகளுக்கு சர்வீஸ் சார்ஜ் தரத் தேவையில்லை என்பதால் இப்படி! நம்ம ஊரில் அப்படி இல்லை. இத்தனைக்கும் ஒவ்வொரு பொருளின் அதிகபட்ச சில்லரை விலையும், கார்டு தேய்த்து வாங்கும் கஸ்டமர்களுக்காக நிர்ணயித்ததே! நகைக்கடைகள், மருத்துவமனைகளில் கார்டு தேய்த்தால் சர்வீஸ் கட்டணம் நம்மிடமே வசூலிக்கிறார்கள்.

இந்த கார்டு வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துபவை விசாவும் மாஸ்டர்கார்டும்தான். இந்தியாவில் விசா கார்டுகள் 75 சதவீதம்; மாஸ்டர்கார்டு 25 சதவீதம். ஒரு வங்கியில் நாம் டெபிட் கார்டோ, கிரெடிட் கார்டோ வாங்கினாலும், பிற வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுக்கவும், எந்தக் கடையிலும் பொருட்களை வாங்கும் வசதி செய்து தருவதும் இந்த ‘பேமென்ட் கேட்வே’ நிறுவனங்களே!



ஆனால் இந்த நிறுவனங்களின் நிபந்தனைகளும் கட்டணங்களும் இந்திய வங்கிகளை நெருக்கடியில் ஆழ்த்தின. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அதிக கட்டணம் வசூலிப்பது, வங்கிகளிடம் நுழைவுக் கட்டணம் வசூலிப்பது, குறைந்தபட்ச காலாண்டுத் தொகை, சச்சரவு ஏற்படும் பரிவர்த்தனைகளுக்கு அபராதம் என பெரிய வங்கிகளே சமயங்களில் திணறும் அளவுக்கு சூழ்நிலை. இவற்றின் ‘டேட்டா ப்ராசஸிங் மையம்’ அமெரிக்கா அல்லது சிங்கப்பூரில் இருக்கும். 200 ரூபாய்க்கு நடக்கும் வியாபாரத் தகவல்கூட அங்கு போய்விடும். இந்தியர்களின் செலவழிக்கும் பழக்கம் மற்றும் ரகசியங்கள் பற்றிய எந்தத் தகவலும் இந்திய வங்கிகளிடம் கிடையாது; ஆனால் இவர்களிடம் இருக்கிறது. இதை எப்படி அனுமதிப்பது?

சீனாவில் இப்படி ஒரு கேள்வி எழுந்தபோது ‘சீனா யூனியன் பே’ என்ற ‘பேமென்ட் கேட்வே’ நிறுவனத்தை ஆரம்பித்தது அரசு. இப்போது அங்கு பெருமளவு பரிவர்த்தனைகளைச் செய்வது இதன்மூலம்தான். இப்படி இந்தியாவிலும் ஒரு மாற்று நிறுவனத்தைத் துவக்கியிருக்கிறார்கள். அதுதான் ‘ரூபே’. இந்திய பொதுத்துறை வங்கிகள் இணைந்து, ரிசர்வ் வங்கியின் ஆசியோடு இதைத் துவக்கியிருக்கிறார்கள். இதன் மூலம் கார்டு பரிவர்த்தனைக்கான கட்டணம் நான்கில் ஒரு பங்காகக் குறைந்துவிடும்.

அது மட்டுமே மேட்டர் இல்லை... ‘பேமென்ட் கேட்வே’ அமைப்பில் இணைய ஒவ்வொரு வங்கியும் குறைந்தபட்சம் 25 லட்சம் ரூபாயை நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதனால் சின்னச்சின்ன கூட்டுறவு வங்கிகள் இந்த அமைப்பிலிருந்து தள்ளியே வைக்கப்பட்டன. ‘ரூபே’ நுழைவுக் கட்டணம் வசூலிப்பதில்லை. அதனால் கூட்டுறவு வங்கிகள் கூட தங்கள் கஸ்டமர்களுக்கு ‘டெபிட் கார்டு’ தருகின்றன. பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, ஆக்ஸிஸ் பாங்க், பாங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகளும் ‘ரூபே’ நெட்வொர்க்கில் இருப்பதால், அந்த ஏடிஎம்களிலும் பணம் எடுக்கலாம். விரைவில் பொதுத்துறை வங்கிகள் அனைத்துமே இந்த நெட்வொர்க்கில் வந்துவிடும் என்கிறார்கள்.

இப்போது இந்தியாவில் மட்டும் பயன்படும் டெபிட் கார்டுகளை வழங்கும் ‘ரூபே’ அமைப்பு, அடுத்த மாதம் சர்வதேச கார்டுகளை வெளியிடப் போகிறது. 2015 மார்ச் மாதத்தில் கிரெடிட் கார்டுகளும் புழக்கத்துக்கு வரும். நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அமைப்புதான் இந்தக் கார்டின் சூத்திரதாரி. ‘‘இந்தக் கார்டைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கினால், நாம் கொடுக்கும் பணமும் வெளிநாட்டுக்குப் போகாது; நாம் என்ன வாங்குகிறோம் என்ற தகவலும் ரகசியமும்கூட வெளியில் போகாது. நுழைவுக் கட்டணம் இல்லை, இதர கட்டணங்களும் குறைவு என்பதால் பல வங்கிகளும் எங்களோடு வருகிறார்கள். கிராமப்புற மக்கள் கார்டைப் பயன்படுத்தி பொருள் வாங்கத் தயங்கும் நிலைதான் இப்போது இருக்கிறது. இது விரைவில் மாறும்’’ என்கிறார் இந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஹோடா.
ஒருவகையில் இது தேசபக்தி டெபிட் கார்டு!
- அகஸ்டஸ்