குட்டிசுவர் சிந்தனைகள்






இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் கேர்ள்...

மேற்கு
வங்காளத்திற்கு போதிய நிதி தராட்டி,
பிரதமரை என்ன அடிக்கவா
முடியும்னு
திருவாய் மலர்ந்த மம்தாஜி!

இதுக்கும் நான்தான் கிடைச்சேனா!
வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்று வணக்கம் சொல்லும்போது முன்னால் நிற்பது அதுதான். வந்தவர்களை உபசரித்து டாட்டா காட்டி அனுப்பும்போது வெட்கப்பட்டு தள்ளி நிற்பதும் அதுதான். ஒருவருடன் மரியாதை நிமித்தம் கை குலுக்கும்போது கடைசியாய் குனிந்து பணிந்து நிற்பதும் அதுதான். வெட்கப்பட்டு சிரிக்கும்போது வாயில் வைப்பதும் அதைத்தான். உலகின் மிகப் பெரும் சுகமான காது குடையும் நேரத்தில் ஒத்தாசை செய்வது அதுதான். சிறு குழந்தைகள் பிடித்து நடக்கும்போது பூர்வஜென்ம புண்ணியம் அடைவதும் அதுதான். அது... சுண்டு விரல்!

போஸ்டர் ஒட்டுபவனின் முகம் ஒரு நாளும் போஸ்டரில் வருவதில்லை. போஸ்டரில் முகம் காட்டுபவன் ஒருபோதும் போஸ்டர் ஒட்டுவதில்லை. தனது கட்சியின் சின்னங்களை தொண்டர்கள் பச்சை குத்திக்கொள்வது போல எந்தத் தலைவனும் தங்கள் உடம்பில் தழும்பேற்றிக் கொள்வதில்லை. அன்பு மிகுதியால் காதலில் விழலாம்; காலில் விழலாமா? தொண்டர்கள் தலைவன், தலைவி கால்களில் விழுவது போல, எந்தத் தலைவனும் தொண்டனின் கால்களில் விழுவதில்லை. அரசியல் பேசுபவன் அரசியல்வாதி அல்ல, அரசியல் செய்பவன்தான் அரசியல்வாதி!

ஆல்தோட்ட பூபதி

காலேஜ் போகும் பக்கத்து வீட்டு பையன், பைக் துடைக்கும்போது பாடிக்கொண்டிருந்த பாடல்...
ஒரு மண்ணானாலும் லேடீஸ் ஹாஸ்டல் மண்ணாவேன்...
ஒரு மரமானாலும் லேடீஸ் காலேஜ் மரமாவேன்...
ஒரு றிணிழினானாலும் பத்தாம் வகுப்பு பத்மாவுக்கே றிணிழினாவேன்...
ஒரு ஸ்கேலானாலும் +2 சினேகாவுக்கே ஸ்கேலாவேன்...
ஒரு பொட்டானாலும் பொண்ணுங்க நெத்தியில் பொட்டாவேன்...
ஒரு துட்டானாலும் ப்ளவுஸ் பர்ஸுக்கு துட்டாவேன்...
கிழிஞ்சுது, இந்தியா 2020ல டெஃபனட்லி வல்லரசுதான்!

ஹோட்டலுக்கு
சாப்பிடப் போகும்போது...
*  எவ்வளவு ரூபாய்க்கு சாப்பிடலாம்னு முடிவு பண்ணி போறவங்க பேச்சிலர்.
*  என்னத்தை சாப்பிடலாம்னு முடிவு பண்ணி போறவங்க மிடில் கிளாஸ்.
*  எதையெல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு முடிவு பண்ணி போறவங்க லோயர் மிடில் கிளாஸ்.
*  எதையெல்லாம் இன்னைக்கு சாப்பிடலாம்னு போறவங்க அப்பர் மிடில் க்ளாஸ்.
*  இன்னைக்கு எந்த ஹோட்டலுக்கு போலாம் என்ற நினைப்போடு கிளம்பறவங்க ஹை கிளாஸ்.
*  அடுத்தவன் ஹோட்டலுக்குப் போறதைப் பத்தி இவ்வளவு ஆராய்ச்சி பண்றவன் டீ கிளாஸ்!


நிம்மதியா சாமி கும்பிட கோயிலுக்குப் போனா, சாமியே அரை இருட்டுல உட்கார்ந்து வேக்காடு தாங்காம வேதனையில இருந்தாரு. பாராளும் பகவானுக்கு பவர் கட் இருக்காதுன்னு நம்பி லைட்ட பார்த்தா, பாதி டியூப் லைட்டுக்கு ‘உபயம்: ராமசாமி, வடக்குபட்டி’ன்னு இருக்கு. சரி, ஃபேனைப் போடுவோம்னு போனா, அதுலயும் ‘உபயம்: கந்தசாமி, கிழக்குபட்டி’ன்னு இருக்கு. சாமிக்கு பின்னாடி இருந்த கண்ணாடியிலயும் ‘உபயம்: முனுசாமி, மேற்குபட்டி’. உண்டியல்ல ‘உபயம்: கண்ணுசாமி, தெக்குபட்டி’. சூடம் கொளுத்தற தட்டுல இருந்து தேங்காய் உடைக்கிற திட்டு வரை எல்லாத்துலயும் இவிங்க பேர போட்டுக்கிட்டு எப்படிடா சொல்றீங்க, ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ன்னு? உங்ககிட்ட ஒரு சந்தேகம் கேட்கணுண்டா, பெத்த புள்ளைய கல்யாணம் கட்டிக் கொடுக்கிறப்போ கூட முதுகுல உபயம்னு உங்க பேர பெயின்ட்டுல எழுதி அனுப்புவீங்களா?

கடந்த இரண்டு வாரமா, டிவிய போட்டாலும் சரி, தினசரிய பாத்தாலும் சரி, எப்.எம் கேட்டாலும் சரி, 360 டிகிரில எங்க பாத்தாலும் சரி டெலக்ஸ்பாண்டியன் விளம்பரம்தான். இவ்வளவு கெஞ்சி கேட்கிறாங்க, போகாம இருந்தா மரியாதையா இருக்காதுன்னு போயி பார்த்தேன். பிடிக்காத பாடத்திலிருந்தே டவுட் கேட்பேன், பிடித்த படத்திலிருந்து கேட்க மாட்டேனா?
அய்யா இயக்குனரே, அடிக்கடி டெலக்ஸ் பாண்டியன் ‘‘தீப்பெட்டிக்கு இரண்டு பக்கம் உரசுனாதான் பத்தும், எனக்கு எந்தப் பக்கம் உரசுனாலும் பத்திக்கும்’’னு சொல்றாரு. ஹீரோயின் மட்டும் அந்த உரசு உரசுறாங்களே... எப்படீங்கண்ணா?

ஹீரோ டிரெயின விட வேகமா ஓடுறாரு, பேசாம படத்துக்கு ‘டெலக்ஸ் பாண்டியன் எக்ஸ்பிரஸ்’னே பேரு வச்சிருக்கலாமே... மறந்துட்டீங்களாண்ணா?
அருவாளால ஜீப் டயர பதமா பொளந்தே பனைமர உயரத்துக்கு பறக்க விடுறாரே... ஏனுங்கண்ணா, புரொடக்ஷன்ல அம்புட்டு பழைய டயரா போட்டுக் குடுத்தாங்க?
வில்லனுங்க டெலக்ஸ் பாண்டியன வச்சு க்ளைமாக்ஸ்ல திளிளிஜி ஙிகிலிலி ஆடுறாங்களே... அவரு என்ன டெலக்ஸ் பாண்டியனா, இல்ல பால் பாண்டியனா?
படத்துல மட்டும் 25, 26 டாடா சுமோ, குவாலிஸ், ஸ்கார்பியோவ கவுத்தி விடுறாரே ஹீரோ... அவரு நல்லவரா? கெட்டவரா?


வாழ்க்கையில் குழந்தையாய் இருக்கும் காலகட்டம் ஒரு இனிமையான பூப்பந்தாட்டம். பள்ளி வாழ்வு ஒரு மயிலாட்டம். கல்லூரி வாழ்வு என்பது குத்தாட்டம். காதல்(கள்) வரும் காலம்தான் கைப்பந்தாட்டம். கல்யாணமான பின் நடப்பதென்னவோ கால்பந்தாட்டம். குழந்தை பிறப்பும் வளர்ப்பும் என்ன நடக்குமோ எப்படி இருக்குமோ என்று தெரியாத சீட்டாட்டம். தொழில் என்பது எந்தப் பக்கமும் சாயாமல் கவனமாய் ஆடும் கரகாட்டம். மொத்தத்தில் ஒட்டுமொத்த வாழ்க்கையோ நம் ஆசையையும் கனவையும் வைத்து விளையாடும் ஒரு சூதாட்டம். அதனால...
சும்மா பிரிச்சுப் போட்டு ஆடுங்க பாஸ்!