வட இந்தியர்களை நாம் வாழவிடுகிறோமா?





ஒடிஷாவின் ஒரு வறண்ட கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் தமிழகத்துக்கு ரயிலேறியபோது 17 வயது. மூன்று வேளை உணவு, மாதம் ரூ.பத்தாயிரம் சம்பளம், தங்குமிடம், 6 மாதத்துக்கு ஒருமுறை ஊர் திரும்ப விடுமுறை. இப்படி வாக்குறுதிகளால் குளிர வைத்து அழைத்துவந்த கங்காணி, சென்னை வந்ததும் வேறொருவரிடம் ஒப்படைத்துவிட்டு சென்ற இடம் தெரியவில்லை. திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை, திருச்சி என கல், மண் சுமக்காத ஊரில்லை. இப்போது ஒரு சிமென்ட் கல் தயாரிக்கும் கம்பெனியில் வேலை. காலை 8 மணிக்கு இறங்கினால் இரவு 8 மணியாகிவிடுகிறது. 6 வருட உழைப்பு... தினமும் 150 ரூபாய் கூலி. உயிரைத் தவிர வேறெதுவும் மிச்சமில்லை..

ஓசுஷாந்துக்கு வயது 31. ஒடிஷாவின் சதாப்பள்ளியில் இருந்து 2 வருஷம் முன்பு ரயிலேறியவர். ‘குடும்பத்தில் வறுமை தீர்ந்து, தேனாறும் பாலாறும் ஓடும்’ என்ற ஆசை வார்த்தைதான் இவரையும் ரயிலேற வைத்தது. திருமண வயதில் நிற்கும் 3 சகோதரிகள்... கடனுக்குமேல் கடனாக வாங்கி சிறுத்துப்போன குடும்பத்தை மீட்கவேண்டிய நெருக்கடி... இதுவரைக்குமான உழைப்பில் ரூ.6 ஆயிரம் மிஞ்சியிருக்கிறது.

ஓபீகாரைச் சேர்ந்த ஜாவித்துக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டு, சொந்த ஊர் போய் உணவகம் திறக்கவேண்டும் என்பது கனவு. அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை உழைக்கிறார். இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றும் கனவில் கால்வாசி கூட தேறவில்லை.

இவர்களைப் போலவே வண்ணக் கனவுகளோடு தமிழகத்துக்கு ரயிலேறிய வட இந்தியத் தொழிலாளர்களின் வாழ்க்கை வறண்டு தான் கிடக்கிறது. மெட்ரோ ரயிலுக்கும், கல்லூரி கட்டுமானங்களுக்கும் அவர்களின் உயிர் உணவாகிக் கொண்டுதான் இருக்கிறது. அதிகாலை தொடங்கி, இரவு வரைக்கும் களைப்பற்று உழைக்கிற அவர்களுக்கு தொழில் பாதுகாப்பும் இல்லை. உயிர் பாதுகாப்பும் இல்லை.  

தமிழகமெங்கும் சுமார் 12 லட்சம் வட இந்தியத் தொழிலாளர்கள் இருக்கக்கூடும் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. அரசுத் தரப்பில் எந்தக் கணக்கும் இல்லை. அரசுப்பதிவேட்டில் இடம்பெறாத இந்த அபலைகளின் வாழ்க்கை, அந்தக்கால அடிமைத் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு சற்றும் குறைந்ததில்லை.

நேபாளத்திலும், பீகார், ஜார்கண்ட், உ.பி உள்ளிட்ட மாநிலங்களிலும் வறட்சியும், வேலையில்லாத் திண்டாட்டமும், உணவுப்பஞ்சமும் தலைவிரித்தாடுகின்றன. ஏழை மக்களின் வாழ்க்கை நவீன ஆண்டைகளின் பிடியில் இறுகிக் கிடக்கிறது. நாள்முழுதும் உழைத்தாலும் ஐம்பதோ, அறுபதோதான் கூலி. இதைப் பயன்படுத்திக் கொண்டு முன்பணம் கொடுத்து ஆசை காட்டி அங்குள்ள இளைஞர்களை இங்கே அழைத்து வருகிறார்கள். இதற்கென தமிழகம் முழுதும் நூற்றுக்கணக்கான ஏஜென்ட்கள் இருக்கிறார்கள். அவர்களின் நெட்வொர்க் இந்தியா முழுதும் விரிந்து கிடக்கிறது.
‘‘ஏஜென்ட்கள்ல ரெண்டு விதம் இருக்காங்க. அழைச்சுக்கிட்டு வர்ற தொழிலாளர்களை தங்களுக்குக் கீழேயே வச்சுக்கிட்டு வேலைகளை கான்ட்ராக்ட் எடுத்துச் செஞ்சு காசு பாக்குறவங்களும் உண்டு. வேறொரு ஏஜென்ட்கிட்ட வித்துட்டு பணத்தை வாங்கிட்டு எஸ்கேப் ஆகுறவங்களும் உண்டு. எத்தனை பேர் வர்றாங்க, என்ன வேலை செய்யிறாங்கன்னு யார்கிட்டயும் எந்த ரெக்கார்டும் இல்லை. அடிமை மாதிரி வச்சுக்கிட்டு உழைப்பையும், உயிரையும் சுரண்டுறாங்க. முறையான கூலியும் இல்லை. இதுபத்தி கேட்கவோ, இவர்களுக்காகப் பேசவோ யாருமில்லை. உயிரிழக்க நேர்ந்தா கிடைக்கவேண்டிய நஷ்டஈடு கூட இவங்களுக்குக் கிடைக்கிறதில்லை’’ என்கிறார் சி.ஐ.டி.யூ மாநில உதவிப் பொதுச்செயலாளர் கருமலையான்.

காலை 10 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணிக்கு கிளம்பிவிடும் உள்ளூர் கொத்தனாருக்கு ஒருநாளைக்கு 600 ரூபாய் கூலி என்றால், காலை 7 மணிக்கு தொடங்கி, இரவு 9 மணி வரைக்கும் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளிக்கு 300 ரூபாய். தொழிற்சங்கம், தகராறு என எந்தப் பிரச்னையும் கிடையாது. எந்த வேலையைச் சொன்னாலும் அமைதியாகச் செய்து முடிப்பார்கள். பணியின்போது கட்டுமானம் இடிந்து இறந்தால் கூட கேட்பார் இல்லை.

‘‘கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஒரு நல வாரியம் இருக்கு. இறந்தா இழப்பீடு, பென்ஷன்னு சில சலுகைகள் கிடைக்கும். ஆனா, அதுல சேரணும்னா ரேஷன் கார்டு வேணும். ஆபத்தான தொழில் செய்யிற தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் செய்யணும்னு விதி இருக்கு.. இவங்களை தொழிலாளர்களாகவே மதிக்கிறதில்லை’’ என்று வருந்துகிறார் கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சிங்காரவேல்.

புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வருபவரும், ஆய்வுகள் செய்தவருமான அ.மார்க்ஸ், மிகவும் வருத்தத்தோடு பேசுகிறார்.
‘‘வடமாநிலத் தொழிலாளர்கள் இங்கே அடிமைகளைப் போலவே நடத்தப்படுகிறார்கள். அவர்களின் குடியிருப்புகளே அதற்கு சாட்சி. நல்ல உணவு, குடிநீர் உள்பட எந்த வசதியும் இல்லை. பல மரணங்கள், விபத்துகள் வெளியிலேயே தெரிவதில்லை. வேலை நடக்கும் இடத்துக்குள்ளாகவே மறைக்கப்படுகின்றன. ஓசூரில் பணிபுரியும் புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றி நான் ஆய்வு செய்திருக்கிறேன். பல தொழிலாளர்களுக்கு கையில் சில விரல்கள் இல்லை. விபத்தில் உடைந்து விட்டன. இதுபற்றி ‘விரல்கள்’ என்ற பெயரில் ஒரு ஆவணப்படமே எடுக்கப்பட்டுள்ளது. விரலை இழந்த தொழிலாளர்களுக்கு எந்த இழப்பீடும் தருவதில்லை. குறிப்பிட்ட சில மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று கட்டு போட்டு வெளியில் அனுப்பி விடுவார்கள். அதன்பின் வேலையும் தருவதில்லை. நான் சந்தித்த ஒரு கான்ட்ராக்டர், தன்னிடம் 650 தொழிலாளர்கள் இருப்பதாகச் சொன்னார். அதன்மூலம் அவருக்கு எந்த உழைப்பும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் 2 லட்சம் ரூபாய் கமிஷன் கிடைக்கிறது. 1973ல் மாநிலம் விட்டு இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டப்படி, இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட மாநிலம் பதிவு செய்யவேண்டும். அடையாள அட்டை வழங்கவேண்டும். பணிப் பாதுகாப்பு, உயிர்ப்பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதை எந்த மாநிலமும் செயல்படுத்துவதில்லை. வேளச்சேரி வங்கிக்கொள்ளைக்குப் பிறகு போலீசார் அந்தப் பணியை மேற்கொண்டார்கள். அது வேறுவிதமான அச்சுறுத்தல். இதைச் செய்ய வேண்டியது தொழிலாளர் நலத்துறை, காவல்துறையல்ல!

தமிழகத்தில் சிலர் வடமாநில தொழிலாளர் பிரச்னையை வேறுமாதிரியாகப் புரிந்து கொள்கிறார்கள். குறிப்பாக, தமிழ் தேச அரசியல் செய்பவர்கள், இவர்களை தமிழக தொழிலாளர்களுக்கு எதிரிகளாக சித்தரிக்கிறார்கள். அந்த ‘சிவசேனை பாணி’ சரியல்ல. மும்பைக்குத் தொழில்நாடிச் சென்ற தமிழர்கள் பாதிக்கப்படும்போது நாம் கொதித்தெழுகிறோம். அந்தக் கண்கொண்டே வடமாநில தொழிலாளர் பிரச்னைகளையும் பார்க்க வேண்டும்’’ என்கிறார் மார்க்ஸ்.

ஊரை விட்டு, உறவை விட்டு, வறுமையை விரட்டுவதற்காக மாநிலம் கடந்து வரும் இவர்களை அரவணைத்து, அடிப்படை உரிமைகளை வழங்க வேண்டியது நமது கடமை. அவர்களின் பிணத்தின் மீது நகரங்களை வளர்ப்பது மனிதத்தன்மையல்ல. எல்லோருக்கும் உயிர் ஒன்றுதான்..!  
- வெ.நீலகண்டன்
படங்கள்: பாஸ்கர், ஆறுமுகம்