ஒரு நாளைக்கு 50 ஆயிரம் மீன்



‘‘பத்தினி சாபம் விட்டா பத்திக்கும், நல்லவங்க இருக்கிற இடத்தில மழை பெய்யும்ங்கிற தெல்லாம் சரியா, தவறாங்கிற ஆராய்ச்சி யெல்லாம் நமக்கு வேணாம். ஆனா நாங்க இந்தப்படத்தை ஆரம்பிச்ச நாளில இருந்து விடாம மழை எங்களைத் துரத்துச்சு...’’ என்று ஆரம்பித்தவர் முதல்முதலாக ஜீவா இரட்டை வேடங்களேற்கும் சில்வர்லைன் பிலிம் பேக்டரியின் ‘சிங்கம் புலி’ இயக்குநர் சாய்ரமணி.

‘‘மியூசிக் டைரக்டர் மணிசர்மா முதல் பாடலை முடிச்சதும், அதை ‘நாகரா’ டேப்பில் ஏத்தறதுக்காக ஒரு அசிஸ்டன்ட்டை அனுப்பினேன். அதை எடுத்து வந்தப்ப நல்ல மழையில அவர் மாட்டிக்கிட்டு டேப் நனைஞ்சு போய் பயன்படுத்த முடியாம போயிடுச்சு. ரெயின் கோட் சகிதம் இன்னொரு டேப்பை ரெக்கார்ட் பண்ணிட்டு ஷூட்டிங் போனா, முதல் நாள் ஷூட்டிங்கில் மழை. ஒருவழியா அதை எடுத்து முடிச்சுட்டு அடுத்த பாடலை ‘கோவா’வில ஷூட் பண்ணப்போனோம். அப்பதான் ‘லைலா’ புயல் ஆரம்பமானது. அங்கே நனைஞ்சு முடிச்சு பாங்காக் போனோம். அங்கேயும் விடாத அடைமழை. ‘இப்ப என்ன பண்ணுவே’ன்னு புயலைக் கேட்டு அடுத்து மஸ்கட் போனோம். கேள்விகேட்ட புயல் அங்கே உருமாறி பாலைவனப்புயலா அடிக்க, ஒருவழியா ஊர் வந்தோம். ஆடியோ ரிலீசுக்கும் ஒட்டின போஸ்டரெல்லாம் வழிஞ்சு வர்ற அளவுக்கு சென்னைல மழை. ஆனா வந்தவங்க எல்லாரும் இசை மழைல நனைஞ்சதா சொன்னப்ப அரங்கத்துக்குள்ளும் மழை அடிச்ச ஃபீலிங் இருந்தது...’’ என்று சிரித்த சாய்ரமணி தொடர்ந்தார்...

‘‘ஜீவா முதல் முதலா இதில ரெட்டை வேடங்கள்ல வர்றார். கதையைக் கேட்டுட்டு, ‘இது வளர்ந்த ஹீரோக்கள் பண்ண வேண்டிய கேரக்டர். நான் செய்தா அவ்வளவு பொருத்தமா இருக்காது...’ன்னார். ‘இந்த ப்ராஜக்ட் வெளியே வரும்போது நீங்க நினைக்கிற அளவுக்கு வளர்ந்திருப்பீங்க...’ன்னு நம்பிக்கையா சொல்லி சம்மதிக்க வச்சேன். அதேபோல இப்ப கே.வி.ஆனந்தோட ‘கோ’, கண்ணனோட ‘வந்தான் வென்றான்’, ஷங்கரோட ‘த்ரீ இடியட்ஸ்’னு அமைஞ்சு, பெரிய ஹீரோக்கள் லிஸ்ட்டுக்கு ஜீவா வந்துட்டார். இப்ப இந்தப்படம் வெளியாகறது ரொம்பப் பொருத்தமானதுதான்.

வழக்கமா ஒரே ஹீரோ ரெண்டு கேரக்டர்கள்ல நடிச்சா ஒருத்தன் வீரன், ஒருத்தன் கோழை; ஒருத்தன் நல்லவன், ஒருத்தவன் கெட்டவன்னு கான்ட்ராஸ்ட் இருக்கும். ஆனா அதெல்லாம் நம்ம படத்தில இல்லை. ஒருத்தர் மீன் விக்கிறவர், இன்னொருத்தர் லாயர். ஆனா, ரெண்டுபேரும் சம பலமானவங்க. அதை சரிசமமா காட்ட ‘சிங்கம் புலி’ன்னு டைட்டில் வச்சேன். அதேபோல ரெட்டை வேடத்தில ஒரு ஹீரோ நடிக்கும்போது இவர் இடத்தில அவர் மாறி வர்ற பிளே வரும். ஆனா இதில ஒருத்தர் இடத்துக்கு இன்னொருத்தர் போகமாட்டார்.
திவ்யா, சௌந்தர்யான்னு ஜீவாவுக்கு ரெண்டு ஜோடிகள். ஏற்கனவே எஸ்.எம்.எஸ் படத்தில ஜீவா & சந்தானத்தோட காம்பினேஷன் கலக்கலா வந்தது. இதில ரெண்டு ஜீவாவும் ஆனதால, ரெண்டுபேர்கிட்டயும் மாட்டிக்கிட்டு முழிக்கிற சந்தானத்தோட காமெடி கூடுதலா சிரிக்க வைக்கும். ஜீவாவோட ஒரு கேரக்டர் மீனவர்ங்கிறதால, அதுக்காக ஒரு மீன்மார்க்கெட் செட்டை கோவளத்தில போட்டோம். ஒரு நாளைக்கு 50 ஆயிரம் மீன்கள்னு வாங்கி ஷூட் செய்தோம். ஒரு நாளைக்கு மேல வச்சிருந்தா அது கெட்டுடும். அந்த துர்நாற்றத்தில நடிக்கிறது சாமானிய விஷயமில்லை. நடிக்கிற நேரம் தவிர திவ்யா கேரவனுக்குள்ளயே அடைஞ்சு கிடந்தாங்க. ஆனா ஜீவா நாள்முழுதும் அதையெல்லாம் தாங்கி நடிச்சார்.
இந்தப்படத்தில புதுசா செய்தி சொல்ல வரலை. கமர்ஷியலான காமெடி, ஆக்ஷன், கிளாமர்னு தியேட்டருக்கு வந்த ரசிகனை ஏமாற்றாம ஃபுல்மீல்ஸ் போட்டு அனுப்பறதுதான் என் நோக்கம்...’’ரிலீசன்னைக்கு மழை வருமான்னு ரமணன் சார்கிட்ட கேட்டுக்கோங்க..!
 வேணுஜி