ஸ்வீட் மாமியார்!



பிழியப் பிழிய அழுது கொண்டிருந்த துளசி, இப்போது புன்னகை மன்னி! ‘‘கிட்டத்தட்ட ஒரு வருஷமா அழுது அழுது, என் கண்ணும் முகமும் மாறிப் போச்சு. ஷூட்டிங் ஸ்பாட் போனா, காபி குடுக்கறாங்களோ, இல்லையோ... முத வேலையா கிளிசரின் பாட்டிலைக் கொடுத்துடுவாங்க. ஒருவழியா அழுகைக்கு குட்பை சொல்லியாச்சு...’’ & நிம்மதிப் பெருமூச்சுடன் சொல்கிறார் ஸ்ருதி. அதாங்க சன் டிவியின் ‘தென்றல்’ நாயகி துளசி!

‘‘பார்க்கிறவங்கல்லாம் துளசினு கூப்பிட்டு, நிஜப்பேர் எனக்கே மறந்துடும் போல...’’ & வாய் விரியச் சிரிக்கிறவர் டாக்டராகி இருக்க வேண்டியவராம்!‘‘‘பசங்க’ படத்துல வர்ற மாதிரி படிக்கிற காலத்துலயே என் பேருக்கு முன்னால ‘டாக்டர்’னு எழுதி அழகு பார்த்தவ நான். பூர்வீகம் கேரளால ஒரு கிராமம். ஸ்டெதஸ்கோப்பும் சிரிஞ்சும்தான் எனக்கு விளையாட்டு பொம்மையே... வீட்டுக்கு ஒரே பொண்ணு. ‘மலையாள மனோரமா’ பத்திரிகைல வந்த என் போட்டோவை பார்த்துட்டு ஒரு மலையாளப் படத்துல நடிக்கக் கேட்டாங்க. ‘மம்முட்டி, மோகன்லால் கூடவெல்லாம் நடிக்கலாம்’னு சொந்தக்காரங்க உசுப்பேத்தி விட, பத்தாவதோட படிப்பை மூட்டை கட்டிட்டு நடிகையாயிட்டேன். முதல் படத்துல தங்கச்சி கேரக்டர்.

அடுத்தடுத்து நாலஞ்சு படங்கள்ல சின்னச் சின்ன கேரக்டர்ஸ்... அப்படியே நடிப்பாசை அதிகமாகி, டாக்டர் கனவை மறந்து சென்னைக்கு வந்தேன். ‘ஜெர்ரி’, ‘காதல்.காம்’, ‘மந்திரன்’னு தமிழ்லயும் நடிச்சேன். எதுவுமே பெரிசா கிளிக் ஆகலை. நல்ல வாய்ப்பு வரும்னு காத்திருந்தப்பதான் சீரியலுக்கு கேட்டாங்க. ‘தென்றலு’க்கு முன்னாடி நிறைய சீரியல்... மாட்டேன்னுட்டேன். அதென்னவோ ‘தென்றல்’ வந்தப்ப, என்னால மறுக்க முடியலை’’ என்கிற ஸ்ருதிக்கும் துளசிக்கும் வலிக்காமல் பேசுவது, வலியச் சென்று
உதவுவது என நிறையவே ஒற்றுமைகள்!
‘‘அழறதுதான் எனக்குக் கஷ்டமான வேலையே... என் கல்யாணத்துக்குப் பிறகு யாருமே வீட்ல சேர்க்காம விரட்டியடிக்கிற மாதிரி ஒரு சீன்... ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்திட்டிருந்த மக்கள், ‘யார் உன்னை வீட்ல சேர்க்காட்டி என்ன தாயி... எங்க வீட்டுக்கு வந்துடு’னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு சிரிப்பு வந்துருச்சு.

என் கணவரை வெட்டற சீனை கொளுத்தற வெயில்ல, நடுரோட்ல எடுத்தாங்க. செருப்புகூட இல்லாம, ரோட்ல விழுந்து, புரண்டு அழணும். சூடு தாங்காம, நிஜமாவே நான் அழ, அந்த சீன் எதிர்பார்த்ததைவிட சூப்பரா வந்திருச்சு’’ என்கிறவருக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் நெருக்கம் யார் தெரியுமா? துளசியை பாடாகப்படுத்தும் சித்தி சாதனாவும், வார்த்தைகளால் வறுத்தெடுக்கும் மாமியார் சாந்தி வில்லியம்ஸும்.‘‘திட்டறதுக்கு முன்னாடியே என்கிட்ட ரெண்டு பேரும், ‘உன்னைத் திட்டவே மனசு வரலம்மா. ஸாரி’ன்னு சொல்லிடுவாங்க. சீரியல்லதான் அவங்க கொடுமைக்காரங்க. நிஜ வாழ்க்கைல ரொம்ப ஸ்வீட்’’ & பாராட்டுப் பத்திரம் வாசித்தபடி தென்றலாகச் சிரிக்கிறார் ஸ்ருதி.
ஆர்.வைதேகி