கச்சேரி



‘‘ஹலோ, நான் ராமய்யர் பேசறேன்...’’
‘‘அண்ணா... நமஸ்காரம்! அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் குளிரின் உச்சம். ஃப்ராங்பர்ட் விமான நிலையம் மூன்று நாள் மூடிட்டாங்க பனிக்கட்டி தொல்லையால...’’
‘‘ஆமா சுப்பண்ணா... இங்கேயும் 10 நாளா ஒரே மழை...’’
‘‘இந்த ஊரில எல்லாம் மழை, குளிர்னா எல்லாம் மூடிடுவா. சென்னையில சபாக்களில் மழையால கூட்டம் எப்படி?’’
‘‘ சுப்பண்ணா!  இங்க அடாது மழை பெய்தாலும் விடாது கச்சேரி நடக்கும். சபாக்காரா என்ன சொல்வானா... சில கச்சேரிகள் மழை, வெயில் எதுவா இருந்தாலும் ஒண்ணுதான்... அதே பத்துப்பேர்தான். அதனால பிரச்னை இல்ல. ஆனா, ரஞ்சனி, காயத்ரி கச்சேரி கொட்ற மழையிலும் ஹவுஸ்புல்!’’
‘‘ஏன்னா? சபான்னு ஏன் பேர் வந்தது?’’
‘‘சுப்பண்ணா! சங்கீதத்தில ஆதார ஸ்வரம், எது ‘ஸா’, ‘பா’தானே? அதுனாலதான் ‘சபா’ன்னு பேரு. கச்சேரி ‘பாஸா’ ஆனாதான் ‘சபா’க்கு லாபம்!’’
‘‘‘சபா’ஷ் ராமய்யர்வாள்!’’
‘‘நம்ம கச்சேரிக்கு வருவோம்... கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில் டிசம்பர் 4 அன்று ரஞ்சனி&காயத்ரி கச்சேரி. அவர்கள் மெய்மறந்து பாடுவதை ரசிகர்கள் கண்மூடி ரசித்தனர்...’’
‘‘அது சரி ஐயர்வாள்! இது தலைகீழாகி, பாடுபவர்கள் கண்ணே திறக்காமல் இருந்தால், ரசிகர்கள் படும் பாடு திண்டாட்டம்தானே?’’
‘‘ஓய்! மெய் மறந்து கண் மூடி பாடுவது வேறு... கண்ணே திறக்காமல் கடைசி வரைக்கும் பாடுவது ஒருவகை ‘காயக தோஷம்’தான் சுப்பண்ணா! சகோதரிகளின் கல்யாண வசந்தம் வீசி நாதலோலுடையாகி, ரசிகர் மனமெல்லாம் ப்ரும்மானந்தம் அடைந்தது...’’

‘‘ஐயர்வாள்! அதுதானே ‘நாதலோலுடை ப்ரும்மானந்த மந்தவே மனஸா’ கீர்த்தனையின் அர்த்தம். எனக்கும் தெலுங்கு தெரியும்!’’
‘‘ரொம்ப சந்தோஷம்! வயலின் வாசித்த மைசூர் ஸ்ரீகாந்த் கையிலும் பிரமாதமான சுநாதம். மிருதங்கம் வாசித்த மனோஜ்சிவா கை மிக அருமை. ஆனா, கஞ்சிரா வாசித்த கே.வி.கோபாலகிருஷ்ணன்தான், ‘ஒகபாரி விடகராதா’ என்று சத்தம் கேட்காமல் வாசித்துக் கொண்டிருந்தார். அடுத்து சகோதரிகள் பாடியது அந்தப் பாட்டுதான். ஆனா, ‘என்னை ஒருமுறை நோக்கலாகாதா?’ & என்னுடைய வாசிப்பு சத்தமே மைக்ல கேட்கவில்லை. அதைப்பற்றி யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை என்ற தொனி தெரிந்தது...
ரஞ்சனி ஆரம்பித்த சங்கராபரண ராகமும், பிறகு மேல் ஸ்வரத்தில் நின்று அனாயசமாக பாடிய காயத்ரியின் ஆலாபனையும் கேட்டபோது, ‘ச்யாமா சாஸ்திரி’ இயற்றிய ஸரோஜதளநேத்ரி கீர்த்தனையில், மீனாக்ஷியைப் பார்த்து ‘நிவலே தெய்வமு லோகமுலோ கலதா’ என்று ‘உனக்கு ஈடு இணை லோகத்தில் யாரு இருக்கான்’னு சொன்னது போல, ரஞ்சனி&காயத்ரியின் ராகத்துக்கு ஈடு இனி உண்டான்னு நெனைச்சபோது, அதே கீர்த்தனையை அவர்கள் எடுத்துப் பாடியது மிகவும் பொருத்தமாக இருந்தது...
சுப்பண்ணா! இதுக்கு அடுத்த கச்சேரி உன்னிகிருஷ்ணனோடது...’’

‘‘ஆஹா! அவர் குரல் தேன் ஆயிற்றே...’’
‘‘ஆமாம்! அதனாலதான் ரசிகர் கூட்டம் எறும்பு போல மொய்ச்சுண்டுது. உன்னிகிருஷ்ணன் பாடின சாருகேசி ராகம் ரொம்ப உயர்தரம். அதுக்கு ஆர்.கே.ஸ்ரீராம்குமாரின் வயலின் இசை இரட்டைப்பாட்டு கேட்டது போல இருந்தது. பக்கத்து ஸீட்ல இருந்த ரசிகர் உடனே, ‘ஆஹா! ஆடமோடி கலதே பாட்டுதான் பாடப்போறார்’ என்றார். உன்னிகிருஷ்ணன் தானம் ஆரம்பிக்க, அதற்கு சதீஷ்குமார் மிருதங்கமும் சேர்ந்துகொண்டு வாசித்தது வெகு சிறப்பு. ‘காண ஆயிரம் கண் வேண்டும் பழனிமலைமுருகனை’ என்ற பல்லவிதான் அன்னிக்கு மெயின். கார்த்திக் கடம் மெருகூட்டியது...’’

‘‘ஐயர்வாள்! இந்தக் கச்சேரியை காண கண் கோடி இருந்திருக்கும்னு சொல்லும். எனக்குதான் கொடுத்து வைக்கவில்லை. சாருகேசி ராகம்னதும், ‘மன்மதலீலையை வென்றார் உண்டோ’ங்கற பாபநாசம் சிவன் பாடல் ஞாபகம் வருகிறது...’’
‘‘ஆமாம்! இது ‘ஹரிதாஸ்’ படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்...’’
‘‘ஐயர்வாள்! அந்தப் படம் 3 வருடம் வெற்றிகரமாக ஓடியதாமே...’’

‘‘ஓய்! அந்த மாதிரி பாட்டு எழுதறக்கும் பாடறதுக்கும் ஆள் இல்லாததுனால, இப்போதும் படம் ஓடுது... தியேட்டரை விட்டு சீக்கிரமா..!’’
‘‘சுப்பண்ணா! சாருலதா மணி ‘இசைப்பயணம்’ நிகழ்ச்சியில, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சபால, 5 ராகங்களை எடுத்துண்டு,
அதுல இருக்கிற கர்னாடக சங்கீத கீர்த்தனை களையும் சினிமாவில  வந்த பாடலையும் பாடி ரசிகர்களை கவர்ந்தார். திலங் ராகத்து ‘ஸ்ரீ கணேச சரணம்’ கீர்த்தனைய பாடி, அதே ராகத்துல ‘யதுநந்தன கோபால’ என்ற ‘மீரா’ படத்தில் வந்த பாட்ட பாடினார். அதோட சாருமதி, கல்யாணி, காபி, சிந்துபைரவி ராகத்துல பல பாடல்களை பாடிக் காட்டியது வித்தியாசமாதான் இருந்தது.’’
‘‘ஐயர்வாள்! இந்த மாதிரி வித்தியாசமான நிகழ்ச்சிகள் இருந்தா ரசிகர்கள் விரும்பத்தான் செய்யறா இல்லையா?’’

‘‘ஆமாம்! அதே மாதிரி இன்னொரு சிறப்பு நிகழ்ச்சியை தவில் வித்வான் ஒரு ஹரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் ‘ஸ்வராலயம்’ என்ற பெயரில் மீனாட்சி சுந்தரராஜன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமியில வழங்கினார்... இந்த நிகழ்ச்சியில, சிவராமகிருஷ்ணன் சிதார், ஸ்ரீராம் கீபோர்டு, கல்பனா வெங்கட் வயலின், கணேஷ்ராவ் தபலா, சங்கர் கடத்தோட பழனிவேலும் தவில் வாசித்து ரசிகர்களை பரவசமூட்டினார். இதுல என்ன விசேஷம்னா, தான் நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும், தவில் வாத்யம் எங்க இருக்கணுமோ, அங்க சைடுல உக்காந்துண்டு, மற்ற கலைஞர்களை நடுவில் உட்கார வைச்சு, நடத்தினார். அவரோட கையில பேசாத சொல்லே இல்ல. லயசுத்தம். அந்த நிகழ்ச்சியில வரமு ராகத்துல ஒரு பாட்டை அனைவரும் வாசிக்க, சங்கீர்ண சாபு தாளத்துல, அவ்வளவு லய வேலைப்பாடு செய்தார். பிறகு ஆதி தாளத்துல ஒரு தனி ஆவர்த்தனம்... சும்மா அரங்கமே அதிர்ந்தது!’’
‘‘ஐயர்வாள்! கூட்டணியா நிகழ்ச்சியை தயாரித்து வழங்குற சிறப்பு அவருக்கு ரொம்பவே தெரியும் போல இருக்கு. இப்ப கச்சேரியில சங்கீர்ண சாபு போன்ற தாளங்களை எல்லாம் காண முடிகிறதா?’’
‘‘உமக்கு மிச்ரசாபு, கண்டசாபு உள்பட அப்படியெல்லாம் தாளம் இருக்குன்னு தெரியணும்னா, எதாவது கர்நாடக இசை புக் வாங்கி தெரிஞ்சுக்கோ...”
மீண்டும்  சந்திப்போம்  அடுத்த வாரம்!
சங்கீத சமுத்திரன்