வெள்ளம்... சேதம்... பாதிப்புகளுக்கு யார் கரணம்?



தண்ணீரில் தத்தளித்திருக்கிறது தமிழகம். கொட்டித் தீர்த்த கனமழையைக் கொண்டாட முடியாத டெல்டா விவசாயிகள், மூழ்கிய பயிர்களோடு உதவிக்காகக் காத்திருக்கிறார்கள். 200&க்கும் அதிகமானோரை பலியும் எடுத்திருக்கிறது இம்மழை. பெய்த மழை வாய்க்காலில் கலந்து, ஆற்றில் சேர்ந்து, கடலில் கலக்கும் என்ற இயற்கை மாறி ஊருக்குள் ஊடுருவுகிறது மழை வெள்ளம். பாரம்பரியமாக நாம் பாதுகாத்து வந்த பாசன முறை களவாடப்பட்டதன் விளைவே வெள்ள அழிவுகள் என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் இது தொடர்பாக கொட்டித் தீர்த்தார் இன்னொரு மழையாக...
‘‘காவிரி பாசனத்தை நம்பியிருக்கும் காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் தொடங்கி, ஏறக்குறைய எல்லா மாவட்டங்களிலுமே புயல் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 15 லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருப்பதாக அரசுக் குழு சுட்டிக் காட்டியிருக்கிறது. கால்நடை, வீடுகள், மனித உயிர்கள் என நீடித்துக் கொண்டிருக்கும் மழையால் ஏற்படும் இழப்பு வரலாறு காணாத அளவுக்கு இருக்கிறது.

நமக்கு நாமே வெட்டிக்கொண்ட குழிதான் இது. இயற்கையாக ஆண்டு முழுக்க பெய்யும் பருவமழை வேண்டும் என்றால் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்றபோது இருந்தது 23 சதவீதக் காடுகள். இப்போதோ வெறும் 8 சதவீத காடுகளே உள்ளன. பருவமழை என்று சொல்லப்படும் மழை பொய்த்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது நமக்குக் கிடைப்பதெல்லாம் புயலால் கிடைக்கும் மழையே தவிர, பருவமழை அல்ல. பருவநிலை மாற்றம் என்பது உலகம் தழுவிய பிரச்னை. அதன் ஒரு அங்கம்தான் நாமும். அதிக குளிர், அதிக வெப்பம். அதிக மழை, அதிக வறட்சி என்று இயற்கைக்கு முரணான ஒரு காலநிலையை உலகம் எதிர்கொண்டு வருகிறது’’ என்கிறார் நம்மாழ்வார்.

மழை வெள்ளச் சேதங்களில் இருந்து விவசாயிகள் மீள ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது. மத்திய அரசு இரண்டாயிரம் கோடி வெள்ள நிவாரணம் கொடுத்தால் மட்டுமே, வருகிற பொங்கலை விவசாயிகள் கொண்டாட முடியும். இப்போது அவர்கள் மழை வெள்ளத்தில் இழந்திருப்பது பொங்கலுக்கான அறுவடையைத்தான். ‘‘வெள்ளச் சேதங்களை மதிப்பிட அரசு நியமித்துள்ள குழுவில் உள்ள சுப்பாராவ், ‘எங்கெல்லாம் வடிகால் வசதி இருந்ததோ, அங்கெல்லாம் வெள்ளச் சேதங்கள் குறைவாக உள்ளது’ என்று சொல்லியிருக்கிறார். இதைத்தான் நான் கடந்த பல ஆண்டுகளாகப் பேசியும் எழுதியும் வருகிறேன். பாரம்பரியமாக நமது விவசாயமும் கிராம அமைப்பும் கண்மாய்கள், குளங்கள், வடிகால்கள் என்றுதான் அமைந்திருந்தன. ஏறக்குறைய 39 ஆயிரம் குளங்களும் கண்மாய்களும் தமிழகத்தில் உண்டு. 100 ஏக்கர் பரப்பளவுக்கு மேலுள்ள குளங்கள் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலும், அதற்குக் கீழான குளங்கள் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. இந்நிலையில், பெரும்பாலான குளங்கள் குப்பை கொட்டும் குப்பைத் தொட்டிகளாக மாறியதோடு, ஆக்கிரமிப்பாளர்களின் சொத்தாகவும் மாறிவிட்டன. பல மாவட்டங்களில் கலெக்டர் அலுவலக வளாகங்கள் பழைய ஏரிகளை மேடாக்கித்தான் உருவாகின. மதுரை உயர்நீதிமன்றம் மட்டுமல்ல... அரசுக் கட்டிடங்களே குளங்களின் மீதுதான் கட்டப்பட்டன... கட்டப்பட்டு வருகின்றன.

சென்னையில் மட்டும் 200 குளங்கள் இருந்தன. இப்போது ஒரு குளத்தையாவது முழுமையாகக் காண முடியுமா? நகரங்கள் விரிவடையும் ஒவ்வொரு காலத்திலும் அதற்கு முதலில் பலியாவது குளங்கள்தான். ஆற்றைச் சுரண்டி, காட்டை வெட்டி, மலையை வேட்டையாடி இயற்கை வளங்களையே பாழ்படுத்திவிட்டு, ‘வெள்ளம் ஊருக்குள் வருகிறது’ என்று வருத்தப்பட்டால், அது வராமல் என்ன செய்யும்? மண்ணையும் மக்களையும் பற்றி கவலைப்படாமல் எவரெல்லாம் அதைச் சுரண்டி தங்களை வளர்த்துக் கொண்டார்களோ, அவர்களே இதற்குப் பொறுப்பாளிகள்.

இனியாவது நமது இயற்கையை காப்பாற்றியாக வேண்டும். வெள்ளச் சேதங்களிலிருந்து விவசாயிகளையும் மக்களையும் மீட்க, அரசு உடனடியாக கிராமக்குழுக்களை ஏற்படுத்த வேண்டும். நீண்டகால நோக்கில் கண்மாய்கள், குளங்கள், வடிகால் ஓடைகள், ஆறுகள் அனைத்தையும் காக்கும் வகையில் அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும்’’ என்கிறார் நம்மாழ்வார்.
ஆம்... இயற்கையை நாம் தண்டித்தோம். இயற்கை இப்போது நம்மை தண்டித்துக் கொண்டிருக்கிறது.
டி.அருள்எழிலன்