பங்குச் சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க! ஷேரில் சம்பாதிக்க சிம்பிளான வழிகாட்டி



‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தில் தன்னை ஜாம்பவான் போல வரைய உத்தரவிடும் தொத்தல் மன்னன் புலிகேசி அதற்குச் சொல்லும் காரணம், ‘வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...’ என்பதுதான்!புலிகேசிக்கு மட்டுமல்ல... நமக்கும் வரலாறு முக்கியம். புலிகேசிக்கு அவருடைய வரலாறு எதிர்காலத்தில் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், நமக்கு எதிர்காலம் சிறப்பாக அமைய, கடந்தகால சந்தை வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சரி... அதை எங்கே, எப்படித் தெரிந்து கொள்வது... எப்படி பங்கு வாங்குவது பற்றி முடிவெடுப்பது என்பதுதானே உங்கள் கேள்வி..? அதை அளவிடுவதற்கும் தெரிந்து கொள்வதற்கும் பல வழிகள் இருக்கின்றன.வெளித்தோற்றத்துக்கு வெறும் பங்கு என்ற அளவில் தெரியும் இந்த விஷயத்துக்குள் ஏராளமான புள்ளிவிவரங்கள் புதைந்து கிடக்கின்றன. பங்குகளை வாங்கலாமா, கூடாதா என்பதைத் தீர்மானிக்க இவை உதவுகின்றன. இவற்றில் முதலாவது விஷயம் இ.பி.எஸ். அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தில், அந்த கம்பெனியின் ஒரு பங்கு ஈட்டிய வருமானம்!

இதை எப்படிக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான ஈஸியான ஃபார்முலா. ஒரு கம்பெனியின் நிகர லாபம் என்பது, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்குக் கிடைக்கும் லாபம். அந்தத் தொகையை எத்தனை முதலீட்டாளர்கள் இருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் லாபம் ஒரு முதலீட்டாளருக்கு, அதாவது ஒரு பங்குக்குக் கிடைக்கும் லாபம்.
ஒரு உதாரணம் சொல்வதாக இருந்தால், ஒரு கோடி பங்குகள் வைத்திருக்கும் ஒரு கம்பெனி ஒரு கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியிருந்தால், அந்தக் கம்பெனியின் இ.பி.எஸ். ஒரு ரூபாய்!

ஆனால், பொதுவாக கம்பெனிகள் தங்களுடைய ஒட்டுமொத்த லாபத்தையும் கணக்கில் காட்டி முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுப்பதில்லை. அப்படி பிரித்துக் கொடுக்கும் தொகைக்கு டிவிடெண்ட் என்று பெயர். அப்படி டிவிடெண்ட் போக மீதம் இருக்கும் லாபத் தொகை கம்பெனியின் மதிப்போடு சேர்ந்துதான் இருக்கும். அப்போது கம்பெனியின் மதிப்பும் அதிகமாக இருக்கும். அதுவும் பங்கின் மதிப்பைக் கணிக்க உதவியாக இருக்கும்.இதை வைத்துப் பார்க்கும்போது இ.பி.எஸ். குறைவாக இருக்கும் பங்கை வாங்காமல் தவிர்க்கலாம் என்பது உங்களுக்கே புரியும். இது பொதுவான விதி. அதேசமயம், இ.பி.எஸ். குறைவாக இருந்தாலும் அந்தக் கம்பெனியின் வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட அதிகமாக இருந்தால், வாங்குவதைப் பற்றிச் சிந்திக்கலாம்.

அதேபோல சிலசமயங்களில் இ.பி.எஸ். அதிகமாக இருந்தால்கூட அந்த கம்பெனியின் எதிர்கால வளர்ச்சி கேள்விக்குறியாக இருக்கும். அதைக் கண்டுபிடித்துக் கொண்டால் அந்த பங்கு பக்கம் தலைவைத்துப் படுக்காமல் இருந்துவிடலாம்.அடுத்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது பி.இ. விகிதம்.அது என்ன பி.இ. விகிதம்? ஒரு பங்கின் சந்தை விலைக்கும், அதன் இ.பி.எஸ்&சுக்கும் உள்ள விகிதம்தான் பி/இ விகிதம். . அதாவது பங்கு ஈட்டு விகிதம்! ஒரு பங்கு தற்போது சந்தையில் என்ன விலைக்குப் போகிறதோ அதை அந்த பங்கின் ஒரு பங்கு லாபத்தைக் கொண்டு வகுத்தால் கிடைக்கும் மதிப்பு. உதாரணத்தோடு சொல்வதாக இருந்தால், சந்தையில் ஒரு பங்கு 300 ரூபாய்க்கு வர்த்தகம் ஆவதாக வைத்துக் கொள்ளலாம். கடந்த ஓராண்டில் அதன் இ.பி.எஸ். 20 ரூபாய். அப்படியானால், அந்தப் பங்கின் பி.இ. விகிதம் (300/20) 15. அதாவது, தற்போது ஒரு ரூபாய் வருமானம் ஈட்டும் தகுதி உள்ள பங்குக்கு 15 ரூபாய் கொடுத்ததாக ஆகும். பங்கின் சந்தை விலை மற்றும் இ.பி.எஸ். மாறும்போது பி.இ. மாறிக்கொண்டே இருக்கும். அதிக விலை என்றால் தவிர்த்து விடலாம். குறைவாக இருக்கும்போது வாங்கலாம். இதுதான் எளிமையான கணக்கு.

இதிலேயும் சில விதிவிலக்குகள் உண்டு. விலை அதிகமாக இருந்தாலும், பி.இ. அதிகமாக இருந்தாலும் அந்த கம்பெனியின் வளர்ச்சி வேகமாக இருந்தால், தாராளமாக அந்தப் பங்கை வாங்கலாம்! இந்த இரண்டுக்கும் அடுத்து இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது.ஒரு கம்பெனிக்கு என்ன மதிப்பு என்று சொல்வதுதான் புத்தக மதிப்பு ( அதாவது, அந்த
கம்பெனியையே விலைக்கு வாங்க முடிவெடுத்தால் என்ன செய்வோம்? அதன் சொத்து மதிப்பு என்ன... எவ்வளவு கடன்... இயந்திரங்கள் இருந்தால் அதன் தேய்மானம் எவ்வளவு? இப்படி... பல விஷயங்களை ஆராய்ச்சி செய்து சொத்து மதிப்பிலிருந்து அதையெல்லாம் கழித்து எவ்வளவு தொகை கொடுத்து இந்த கம்பெனியை வாங்கலாம் என்று கணக்குப் போடுவோமே, அதுதான் புத்தக மதிப்பு! இதை நிகர சொத்து மதிப்பு என்றும் சொல்வார்கள்.

இந்த கணக்கீட்டில் சில விஷயங்கள் விடுபட்டுப் போயிருக்கலாம். அதனால் புத்தக மதிப்பு எல்லா விஷயங்களையும் சொல்லி விடாது. இ.பி.எஸ் கணக்கிடுவது போலவே மொத்த புத்தக மதிப்பை பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்து, ஒரு பங்குக்கான புத்தக மதிப்பையும் கணக்குப் பார்க்கலாம். இதுதான் ஃபார்முலா. இதிலேயும் வளர்ச்சி அதிகமுள்ள கம்பெனி என்றால் புத்தக விலை அதிகமாக இருந்தாலும் வாங்கலாம்... வளர்ச்சி குறைவு என்றால் தவிர்க்கலாம் என்ற விதிவிலக்கும் இருக்கிறது.இதையெல்லாம் பார்த்துவிட்டு முக்கியமான விஷயத்தில் கோட்டை விட்டு விடக்கூடாது... அது என்ன என்பதைப் பற்றி...காத்திருங்கள்... சொல்கிறேன்.
சி.முருகேஷ்பாபு