நான் என்ன சொன்னாலும் நம்பும் தமன்னா! கார்த்தி ஜிலீர்



‘ஒரு சூப்பரான தமிழ்ப் படத்தைப் பார்க்கும் போது, ‘அடடா... இதில நாம நடிக்காம விட்டுட்டமே’ன்னு தோணும். ஆனா... அப்படி ஒரு படத்தைத் தெலுங்கில பார்க்க நேர்ந்தது என்னோட அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும். ஒரு ஹீரோ எப்படியெல்லாம் மாஸ் ஆடியன்ஸை போய்ச்சேர வாய்ப்பிருக்கோ அப்படியெல்லாம் வளைச்சு வளைச்சு திரைக்கதை எழுதப்பட்ட படம் ‘விக்ரமார்க்குடு’. அதோட தமிழ் ரைட்ஸை வாங்கி களத்தில இறங்கிட்டோம்...’’ என்று கார்த்தி புளகாங்கிதப்பட்ட படம், ஸ்டூடியோ கிரீனின் ‘சிறுத்தை’.தன் ஐந்தாவது படமான ‘சிறுத்தை’யில் ரெட்டை வேடங்களில் வருவது அவருக்கு டபுள் புரமோஷன். ‘‘சின்ன வயசிலேர்ந்தே ‘போலீஸ் & திருடன்’ விளையாட்டுக்கு மவுசு அதிகம். இதுல ‘நானே போலீஸ், நானே திருடன்’ங்கிறது கூடுதல் சுவாரஸ்யம். போலீஸ்னாலும் சும்மா வசனம் பேசிக்கிட்டிருக்க போலீஸா இல்லாம, அதோட உச்சமா சொல்லாததையும் செஞ்சு காட்டற டி.எஸ்.பியாவும், திருடனா கீழே இறங்கி தரை ரேட் பிக்பாக்கெட்டாவும் நானே நடிக்கிறேன்...’’ என்றவர் தொடர்ந்தார்.

‘‘இதுக்காக நிஜமான பிக்பாக்கெட்டுகளையும், போலீஸ் அதிகாரிகளையும் சந்திச்சு அவங்களோட அனுபவங்களைக் கேட்டதோட, அவங்க பாடிலாங்குவேஜ், பழக்கவழக்கங்கள்னு எல்லாத்தையும் கவனிச்சது நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருந்தது. போலீஸ் அதிகாரிகள் நல்லா ரிசீவ் பண்ணி பேசினாங்க. ஆனா பிக்பாக்கெட்டுகளை எங்கே தேட..? எப்படியும் சந்திச்சாகணும்னு ஃபிரண்ட்ஸை விட்டுத்தேடி கடைசியா ஒரு குரூப்பைப் பிடிச்சோம். பார்வைக்குத் தப்பா தெரியாத அவங்களோட த்ரில் அனுபவங்கள் ஆச்சரியமா இருந்தது. பேசிட்டு வந்தப்ப செல்போன் பாக்கெட்ல இருக்குதான்னு செக் பண்ணிப் பாத்தேன். நல்லவேளை இருந்தது.

ரீமேக்னா போட்ட சட்டை கலர் கூட மாறிடக்கூடாதுன்னு காப்பி அடிக்கலை. தமிழ் ஆடியன்ஸுக்கான சுவாரஸ்யங்களா நிறைய புதுசா யோசிச்சிருக்கோம். அதுல இந்த பிக்பாக்கெட் எபிஸோடும் ஒண்ணு. என்னோட பிக்பாக்கெட் தோழனா சந்தானம். சான்ஸே இல்லை, அப்படியொரு காமெடி எங்களுக்குள்ள ஒர்க் அவுட் ஆச்சு. பிக்பாக்கெட் எபிஸோட் காமெடியோட உச்சமா இருக்கும்னா, போலீஸ் எபிஸோட் ஆக்ஷனோட உச்சமா இருக்கும். இதுக்காக அமைஞ்ச டீமை குறிப்பா சொல்லணும். முதல்ல டைரக்டர் சிவா. முன்னணி கேமராமேனான அவர், தெலுங்கில ரெண்டு சூப்பரான படங்களை டைரக்ட் பண்ணிட்டு தமிழ்ல அறிமுகம் ஆகறார். ஆக்ஷன், காமெடி, எமோஷன்னு எல்லா அயிட்டங்களுக்கும் இடம் இருக்கு படத்தில. குறிப்பா போலீஸ், திருடன் ரெண்டு கேரக்டரும் சந்திக்கிற இடம் அட்டகாசமானது.

ஒரு மாஸ் படம், இப்படி நடந்திருந்தாலும் இருக்கும்ங்கிற நம்பகத் தன்மையோட தெரிஞ்சா அதுக்கு ‘பொல்லாதவன்’ வேல்ராஜோட ஒளிப்பதிவுதான் காரணமா இருக்கும். ‘தூள்’, ‘கில்லி’ டைப் பாடல்கள்ல வித்யாசாகர் பட்டையைக் கிளப்பியிருக்கார். ஆர்ட் டைரக்டர் ராஜீவனை சொல்லியே ஆகணும். கிளைமாக்ஸை கர்நாடகாவில எடுத்தோம். 300 அடி உயரத்தில ஒரு தொங்கு பாலத்தை ராஜீவன் செட் போட்டிருந்தார். செட்னா சும்மா ஒப்புக்கு இல்லை. அதுமேல நானும், ஃபைட்டர்களும் தொங்கி சண்டை போட்டோம். த்ரில் அனுபவம்...’’

‘‘கேக்காம சொல்ல மாட்டீங்களோ... தமன்னாவோட உங்க கெமிஸ்ட்ரி..?’’

‘‘உங்களுக்கு டைட்டில் தேத்தணும், அதானே..? சொல்றேன். தெரியாத நடிகைகூட நடிக்கிறது வசனம், டைமிங்னு எல்லாத்திலயும் கொஞ்சம் கஷ்டமான காரியம். ஆனா பழகிய நடிகைன்னா டேக் வேஸ்ட் ஆகாம நல்லா நடிக்க முடியும். தமன்னா கூட எனக்கு ரெண்டாவது படம்னதால அண்டர்ஸ்டேண்டிங் நல்லா இருந்தது. ‘பையா’ல பளிச்னு வருவேன். ஆனா இந்தப்படத்து முதல்நாள் ஷூட்டிங்ல டவுசர், லுங்கியோட பிக்பாக்கெட்டா நின்னுக்கிட்டிருந்த என்னைப் பார்த்த தமன்னாவுக்கு சிரிப்பு தாளலை. ‘பையா’ல என்னோட லவ் ஒருதலையா வரும். தமன்னா புத்திசாலிப் பெண்ணா வருவாங்க. ஆனா அதுக்கு நேர்மாறா வர்ற தமன்னா, இதில அழகான மக்குப்பொண்ணு. நான் என்ன சொன்னாலும் நம்பிடற கேரக்டர். அதனால இது ஜாலியா போகும்... ஏதாவது டைட்டில் தேறிச்சா..?’’ ஓகே... டன்..!
 வேணுஜி