நிஜப் போர்!



அந்தரங்கமான ராணுவ, வெளிநாட்டு ரகசியங்களை வெளியிட்டு அமெரிக்காவையே ஆட்டிப்படைத்த விக்கிலீக்ஸ் இணையதளத்தை அமெரிக்கா முடக்கியது. ஆனாலும், 300&க்கும் அதிக மிர்ரர் தளங்களை உருவாக்கி, மேலும் மேலும் அமெரிக்க ரகசியங்களை பந்தி வைத்துக் கொண்டிருக்கிறது விக்கிலீக்ஸ். அதன் உரிமையாளர் ஜூலியன் அசாஞ்ச் லண்டனில் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஸ்வீடன் அரசால் பிடியாணை பிறப்பிக்கப்பட, நெருக்கடி சூழ்வதை உணர்ந்த அவர், லண்டன் நீதிமன்றத்தில் சரணடைய இருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஸ்வீடனில் இரு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. லண்டன் போலீசார் கைது வாரண்டை அவரிடம் கொடுத்தபோது, ‘விரும்பித்தானே உறவுகொண்டோம்’ என்றுஅசாஞ்ச் சொல்ல, ‘இல்லை... அவர்கள் ஆணுறை அணியச் சொல்லியும் நீங்கள் அணியவில்லை. அது பாலியல் வன்முறைதான்’ என்று சொல்லி வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நிறுத்தி, சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

‘இது பிரிட்டனுக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான பிரச்னை. நாங்கள் தலையிட மாட்டோம்’ என்று அமெரிக்கா அடக்கமாக கருத்து சொன்னது. அசாஞ்ச் கைதுக்குப் பிறகும் அமெரிக்காவுக்கு எதிரான ஆவணங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அமெரிக்கா சந்திக்கும் நிஜமான போர் இதுதானோ?
டி.அருள் எழிலன்