உலகின் அதிபயங்கர சித்திரவதைக்கூடம்!





‘உலகிலேயே மிக அதிகமாக தீவிரவாதிகளை உருவாக்கும் முகாம் எங்கு இருக்கிறது?’
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இராக், சோமாலியா, ஓமன், சூடான்...

இதில் எந்த நாடும் இல்லை. அமெரிக்காவில் இருக்கும் ஒரே ஒரு சிறைச்சாலைதான்! இங்கு அடைபட்டுக் கிடக்கும் அப்பாவிகளுக்கு தினம் தினம் நிகழும் சித்திரவதைகளைக் கேள்விப்பட்டு, உலகின் வேறொரு மூலையில் யார் யாரோ புதிதாக ஆயுதம் ஏந்துகிறார்கள். உலகின் எல்லா நாடுகளிலும் மூக்கை நுழைத்து மனித உரிமைப் பாடம் எடுக்கும் அமெரிக்கா, தன் கொல்லைப்புறத்தில் அந்த உரிமைகளை ஷூ கால்களால் நசுக்கிக் கசக்கும் வரலாறு அந்த சிறைக்கு இருக்கிறது.



குவான்டனாமோ பே!
மீண்டும் ஒருமுறை இந்த வாரம் சர்ச்சையில் சிக்கிய இந்த சிறைச்சாலை அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமானது. கியூபாவை ஒட்டிய ஒரு துண்டு நிலம்; அமெரிக்காவின் ஆளுகைக்கு உட்பட்டது. 2001ம் ஆண்டு அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட பிறகு, ‘தீவிரவாதத்துக்கு எதிரான போரை’ அறிவித்தது அமெரிக்கா. ஆப்கானிஸ்தானில் தொடங்கி, உலகமெங்கும் பலர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களை அமெரிக்கா கூட்டிச் சென்று விசாரிக்கத் தயங்கியது ராணுவம். காரணங்கள் இரண்டு... ஒன்று, அவர்களை அமெரிக்க சட்டப்படி விசாரிக்க வேண்டியிருக்கும். இரண்டு, அவர்கள் ஒருவேளை சிறையிலிருந்து தப்பித்தால் அமெரிக்காவுக்கு பெரும் ஆபத்து!

அப்போது உருவானதுதான் இந்தச் சிறை. அல்-கொய்தா அமைப்போடு தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அனைவருமே இங்கு அடைக்கப்பட்டார்கள். ‘‘இவர்கள் மீதான வழக்குகள் அமெரிக்க சட்டப்படி விசாரிக்கப்படாது; ஜெனிவா ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி கைதிகளுக்கான உரிமைகள் எதுவுமே இவர்களுக்குக் கிடையாது’’ என அமெரிக்கா அறிவித்தது.



கடந்த 11 ஆண்டுகளில் இங்கு நிகழ்ந்த சித்திரவதைகளின் பட்டியல் நீளமானது. ‘‘நமது சமகால வரலாற்றில் மிகமோசமான சித்திரவதைக் கூடம் இதுதான்’’ என அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு இந்த சிறையைக் குறிப்பிடுகிறது. மத நம்பிக்கை அதிகம் உள்ளவர்களே இங்கிருக்கும் கைதிகள். அவர்களுக்கு நிகழ்ந்த முதல் சித்திரவதை, அந்த மத நம்பிக்கையைப் புண்படுத்துவதுதான். அதன்பிறகே உடலும் மனமும் புண்பட்டது! முள்கம்பிகளுக்கு இடையே வெட்டவெளியில் மண்டியிட வைத்துத்தான் பெரும்பாலான சித்திரவதைகள் நிகழும். கேட்கும்போதே ரத்தம் உறையச் செய்யும் முறைகள்...

றீபகல் முழுக்க சும்மா விடுவார்கள். இரவு தூங்கப்போகும்போது மேலே தண்ணீர் பீய்ச்சியடித்து எழுப்புவார்கள். உறைய வைக்கும் குளிரில் ஜில்லென தண்ணீர் உடலில் படும்போது உடலே விறைத்துவிடும். ஈர உடையோடு அப்படியே நிற்கவைத்து விசாரிப்பார்கள்.

றீபோதை மருந்தை ஊசியால் செலுத்தி உளற விடுவார்கள்.
றீகண்களில் பெப்பர் ஸ்பிரே அடிப்பார்கள்; கண்ணாடி டம்ளர்களை உடைத்து விட்டு, அந்த உடைந்த டம்ளரால் அடிப்பார்கள்; முள் கம்பிகளால் அடிப்பார்கள்; சிகரெட்டால் சூடு வைப்பார்கள். எதற்கும் அசைந்து கொடுக்காதவர்களை அப்படியே இழுத்து, தலையை கான்க்ரீட் தூணில் மோத விடுவார்கள்.



அதிரும் ஓசையில் பாப் மியூசிக்கை ஓடவிட்டு, காதுகளுக்கு அருகில் ஸ்பீக்கர்களை வைத்துவிட்டு, மணிக்கணக்கில் அசையாமல் உட்காரச் சொல்வார்கள். இசை நின்றபிறகும் பல நாட்களுக்கு காதுகளுக்குள் ரீங்காரம் கேட்கும்.

றீசேரில் உட்கார்வது போல உட்கார வைப்பார்கள். ஆனால் சேர் இருக்காது. கைகளையும் கால்களையும் சங்கிலியால் பிணைத்து, இல்லாத சேரில் அந்தரத்தில் பல மணி நேரம் உட்கார வைப்பார்கள். கால் மூட்டுகள் பெயர்ந்து விடுவது போல வலிக்கும்.

றீகையில் ஊசியைச் செருகி நான்கைந்து பாட்டில் குளுக்கோஸ் ஏற்றுவார்கள். சிறுநீர் முட்டிக்கொண்டு வரும். ஆனால் டாய்லெட் போக விடமாட்டார்கள். நின்ற இடத்தில், உடையை அசுத்தமாக்கிக் கொள்ள நேரும். அப்படியே நாற்றத்தில், மணிக்கணக்கில் நிற்க விடுவார்கள்.

றீஆபத்தான கைதிகளை நிர்வாணப்படுத்தி, பெண்களின் மாதவிடாய் ரத்தத்தை உடலில் பூசி, பிரா அணியச் சொல்லி, நாய் போல குரைக்கச் செய்து மன உறுதியைக் குலைக்க வைத்திருக்கிறார்கள்.
றீசித்திரவதைகளைப் பொறுக்க முடியாமல் உண்ணாவிரதம் இருந்தார்கள் சில கைதிகள். அவர்களுக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா? மயக்க மருந்து கொடுக்காமல், அப்படியே மூக்கினுள் குழாயைச் செருகி உணவு புகட்டி இருக்கிறார்கள். அதே குழாயை திரும்ப உருவி, அடுத்தடுத்த நபர்களுக்கும் புகட்டினார்கள். வலியிலும் வேதனையிலும் துடித்த சிலர், ‘‘நிம்மதியாக சாகவாவது விடுங்கள்’’ என்று கேட்டார்கள்.

இவர்கள் செய்த தவறு என்ன? அத்தனை பேரும் ஒசாமா பின்லேடனின் தளபதிகளா? இதுவரை இங்கு கொண்டுவரப்பட்ட கைதிகள் 779 பேர். இவர்களில் 98 வயது முதியவர் முதல் 13 வயது சிறுவன் வரை உண்டு. இவர்களில் 92 சதவீதம் பேர் அல்-கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதை அமெரிக்க அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. இதுவரை வெறும் 9 பேர் மீது மட்டுமே வழக்கு போட்டு, தண்டனை உறுதியாகி இருக்கிறது. 613 பேரை அப்பாவிகள் என விடுவித்து விட்டது. இன்னமும் 166 பேர் சிறையில் வாடுகின்றனர்.
ஐ.நா அமைப்பு மூடச் சொன்னது; அதிபர் ஒபாமா மூடச் சொன்னார். எல்லாவற்றையும் தாண்டி இந்தச் சிறை, ரத்தக்கறை படிந்த வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறது.
- அகஸ்டஸ்