+2வுக்குப் பிறகு உடனடி வேலை தரும் வேலை தரும் என்ன படிக்கலாம்?





‘‘இந்த ஆண்டு சுமார் எட்டரை லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினார்கள். இவர்களில் ஒன்றரை லட்சம் பேரின் தேர்வாக எஞ்சினியரிங்கே இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் வெறும் 5 சதவீதம்தான் எஞ்சினியரிங் செக்டாரில் கிடைக்கிறது. 95 சதவீத வேலைவாய்ப்பு, ‘நான்-எஞ்சினியரிங்’ எனப்படும் கலை, அறிவியல், பிசினஸ், பேங்கிங், கேட்டரிங், பாரா மெடிக்கல் படித்தவர்கள் மூலமே நிரப்பப்படுகிறது...’’ என்கிறார் கேரியர் கைடன்ஸ் நிபுணர் வைத்யநாதன்.

‘‘கலை, அறிவியல் பட்டம் படித்தால் வேலை கிடைக்காது என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. அப்படி வேலை கிடைக்கவில்லை என்றால், அதற்குக் காரணம் மாணவர்கள்தான். பெரும்பாலான மாணவர்கள், எதற்காக இந்தப் படிப்பைப் படிக்கிறோம் என்று தெரியாமலே படிக்கிறார்கள். அடுத்து என்ன செய்வது? படிப்பை முடித்து எந்தெந்த துறைக்கு வேலைக்குச் செல்லமுடியும்? என்ற எந்த கேள்விக்கும் அவர்களுக்கு விடை தெரிவதில்லை. ‘ஏதோ ஒரு பட்டம் கிடைத்தால் சரி, அதிகம் உழைக்கத் தேவையில்லை’ என்றும் சிலர் நம்புகிறார்கள். இப்படியான நிலையில் இருந்து வெளியே வரவேண்டும்.

கல்லூரியில் சேரும் முன்பே எதிர்காலத்தைத் திட்டமிட்டு விட வேண்டும். பாடப் புத்தகங்களோடு முடிந்து போகாமல், சர்வதேச இதழ்கள், நூலகங்கள், இணையம் வாயிலாக தங்கள் அறிவை விசாலப்படுத்திக்கொண்டே போனால், நிச்சயம் அந்தத் துறையில் நிபுணத்துவம் பெற முடியும். அப்படி நிபுணர்கள் ஆகும் மாணவர்களுக்கு மகுடம் காத்திருக்கிறது’’ என்கிறார் வைத்யநாதன்.



‘நேஷனல் ஸ்கில் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்’ அண்மையில் 20 துறைகளை மையமாக வைத்து ஒரு சர்வே நடத்தியது. இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் ஆண்டுக்கு 20 லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகின்றன என்பது அதில் தெரிய வந்திருக்கிறது. இந்த பணியிடங்கள் அனைத்தும் கலை, அறிவியல் பட்டதாரிகளுக்கானவை என்கிறது அந்த சர்வே.

‘‘கலை, அறிவியல் கல்லூரிகளில் எஞ்சினியரிங்கைப் போல கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடப்பதில்லை. மேலும் பிராக்டிகல் ஒர்க்கும் கிடையாது. அதனால் மாணவனுக்கு இங்கே சற்று கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது. விடுமுறைக் காலங்களை வீணாக்காமல், தன் படிப்பு தொடர்பான தொழிற்சாலை அல்லது அலுவலகத்தில் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ளலாம். அதனால் அந்தத் தொழிலில் நல்ல அனுபவம் கிடைக்கும். டெலிகாம், இன்சூரன்ஸ், பேங்கிங் துறைகளில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. நல்ல ஊழியர்கள் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. எனவே கலை, அறிவியல் படிப்புகளை மாணவர்கள் தைரியமாகவும், உற்சாகமாகவும் தேர்வு செய்யலாம்’’ என்கிறார் வைத்யநாதன்.

‘‘கலை, அறிவியல் படிப்புகளைப் பொறுத்தவரை, மாணவனின் ஆர்வத்துக்கே முக்கியத்துவம் தரவேண்டும். அந்த படிப்புக்கு எதிர்காலம் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. உதாரணத்துக்கு பி.ஏ தத்துவம் படிக்க ஒரு மாணவன் விரும்புகிறான் என்றால், தாராளமாக அதில் சேர்த்துவிடலாம். மாணவனே தனக்கான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வான்’’ என்கிறார் கல்வி ஆலோசகர் ராஜராஜன்.

‘‘கலை, அறிவியல் படித்தவர்கள் குறிப்பிட்ட ஒரு துறையை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை. சிவில் சர்வீஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுதி, பெரிய அளவிலான வேலைகளுக்குக் கூட செல்ல முடியும். 25 ஆண்டுகளுக்கு முன்னர் போட்டித் தேர்வுகள் மூலம் பணிக்குச் சேர்ந்த பல ஆயிரம் பேர் இப்போது பணி ஓய்வு பெறும் நிலையில் இருக்கிறார்கள். குறைந்தபட்சம், இதில் 50 சதவீத இடங்களை அரசு நிரப்பினால் கூட, ஏராளம் பேருக்கு வேலை கிடைக்கும்.

உயர்கல்வி வாய்ப்புகளும் இதில் ஏராளம் உண்டு. கலை, அறிவியல் படிக்கும் மாணவர்கள் மூன்று விஷயங்களில் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் - கம்யூனிகேஷன், ரீசனிங், ஆட்டிடியூட். தமிழ், ஆங்கில அறிவோடு தகவல் தொடர்புத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். திறனாய்வுத் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மனோபாவம், நுண்ணறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்கிற ராஜராஜன், புதிதாக அறிமுகமாகியுள்ள படிப்புகளையும், வேலைவாய்ப்புள்ள படிப்புகளையும் வரிசைப்படுத்துகிறார்.



‘‘பி.ஏவைப் பொறுத்தவரை, சைக்காலஜி, பிலாசபி, சோஷியல் ஒர்க் ஓ.கே. இவற்றில் மேற்படிப்புகள் படித்தால் கூடுதல் வாய்ப்புண்டு. கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளைத் தேர்வு செய்யும்போது, வெறும் கம்ப்யூட்டராக இல்லாமல் வேறொரு சப்ஜெக்ட் சேர்ந்திருந்தால் நல்லது. பிசினஸ் இன்ஃபர்மேஷன் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட், கம்ப்யூட்டர் சிஸ்டம் மெயின்டனன்ஸ் அண்ட் நெட்வொர்க்கிங், மேத்ஸ் வித் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய புதிய படிப்புகளுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். எலெக்ட்ரானிக்ஸ் மீடியா, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியும் நல்லதே. அனிமேஷன் படித்தால் பல துறைகளில் ஜொலிக்கலாம். ஆனால், எங்கு படிக்கிறோம், எப்படிப் படிக்கிறோம் என்பது முக்கியம்.  
 
பயோகெமிஸ்ட்ரி, பயோ இன்ஃபர்மேட்டிக்ஸும் படிக்கலாம். ஜியாலஜியும் ஓகேதான். புள்ளியியல் பற்றி பரவலான கவனம் இல்லை. எம்.எஸ்சி புள்ளியியல் முடித்தவர்கள், இந்திய ஸ்டேட்டிஸ்டிக்ஸ் சர்வீஸ் நடத்தும் தேர்வை எழுதலாம். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இணையானது இது. கலெக்டர் கேடரில் வேலைக்குச் செல்லமுடியும். பெண்கள், நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ் படிப்பைத் தேர்வு செய்யலாம். மரியாதை, வேலைவாய்ப்பு, கணிசமான சம்பளம் கிடைக்கும். அதேபோல, சிறப்புக் குழந்தைகளுக்கான ஸ்பீச் அண்ட் லாங்வேஜ் ஹியரிங் தெரபி என்ற படிப்பு அண்மைக்காலமாக பெரும் கவனம் பெற்று வருகிறது. சகிப்புத்தன்மையும் கனிவும் கொண்டவர்கள் இதைத் தேர்வுசெய்யலாம்.

பி.காம் எடுக்க விரும்புபவர்கள் அக்கவுன்டன்ஸி உள்ள பிரிவைத் தேர்வுசெய்வது நல்லது. பி.காம் சேர்ந்தவுடனே, ஐ.சி.டபிள்யூ.ஏ அல்லது, ஏசிஎஸ் எனப்படும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்பையும் சேர்த்து படிக்கலாம். ஒரே நேரத்தில் இரண்டு தகுதிகள் கிடைக்கும். இப்படி படிப்பவர்களுக்கு ஏகப்பட்ட டிமாண்ட். புதிதாக இ.காமர்ஸ் வந்துள்ளது. அதுவும் நல்ல தேர்வு.

மீடியா, சினிமாவில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் பட்டப்படிப்புகள் வந்துவிட்டன. அட்வர்டைசிங், சினிமாட்டோகிராபி, சவுண்ட் ரெக்கார்டிங், சவுண்ட் எஞ்சினியரிங் என பல பி.ஏ. படிப்புகள் உண்டு. ஹார்டிகல்ச்சர், ஹோம் சயின்ஸ், ஃபுட் பிராசசிங் படிப்புகள் சிறப்பானவை.  

அப்பேரல் டிசைனிங், ஃபேஷன் டெக்னாலஜி படிப்புகளுக்கும் மவுசு அதிகம். இன்டீரியர் டிசைன் அண்ட் டெக்கரேஷன், ஜுவல்லரி அண்ட் அக்சசரி டிசைனிங், டெக்ஸ்டைல் அண்ட் ஃபேஷன் டிசைனிங் படிப்புகளும் ஹாட். என்.ஐ.எஃப்.டியில் இந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. கடல்வளம் சார்ந்த படிப்புக்கும் உடனடி வேலைவாய்ப்பு உண்டு...’’ என்கிறார் ராஜராஜன்.
வணிகம், மருத்துவம் சார்ந்த படிப்புகள், பெண்களுக்கு உகந்த வேலைவாய்ப்புள்ள படிப்புகள் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்...
- வெ.நீலகண்டன்

ஹாட் : பி.பி.ஏ., பி.காம்

ஃபைனான்ஸ் அனலிஸ்ட், ரீடெய்ல் மேனேஜ்மென்ட், டூரிஸம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட், கம்பெனி செக்ரட்டரிஷிப், ஃபண்டமென்டல் அக்கவுன்டிங், பிசினஸ் ஸ்டேடிஸ்டிக்ஸ், பேங்கிங் மேனேஜ்மென்ட், சப்ளை மேனேஜ்மென்ட், ஏவியேஷன் மேனேஜ்மென்ட், சேல்ஸ் மேனேஜ்மென்ட், இ-காமர்ஸ்

ஹாட் : கலை மற்றும் அறிவியல்


அனிமேஷன்
எலெக்ட்ரோ கெமிஸ்ட்ரி
இன்ஸ்ட்ரூமென்டேஷன்
ஃபுட் சயின்ஸ் அண்ட் நியூட்ரிஷன்
ஃபுட் பிராசசிங் டெக்னாலஜி
இன்டீரியர் டிசைனிங்
சைக்காலஜி
சாஃப்ட்வேர் எஞ்சினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ்
ஸ்பெஷல் எஜுகேஷன் அண்ட் ரீஹேப்ளிடேஷன்
டெலிகம்யூனிகேஷன் டெக்னாலஜி
ஹார்டிகல்ச்சர்
லைப்ரரி இன்ஃபர்மேஷன் சயின்ஸ்
மெட்டீரியல் மேனேஜ்மென்ட்
பாலிமர் சயின்ஸ்
ஜியாலஜி
ஹ்யூமன் ரிசோர்சஸ்
ஃபிஷரி சயின்ஸ்
ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்
கெமிக்கல் எஞ்சினியரிங்
அக்ரிகல்ச்சர் எகனாமிக்ஸ்