நிழல்களோடு பேசுவோம்





என்ன நடந்தது நம் இளைஞர்களுக்கு?
உலகில் முற்போக்கான இயக்கங்கள், சமூக மாற்றத்துக்கான இயக்கங்கள், வரலாற்றையும் நாகரிகத்தையும் ஓரடி முன்னே எடுத்து வைக்கும் செயல்பாடுகள்... எல்லாமே இளைஞர்களால்தான் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பழமைவாதத்தின் இருட்டின்மீது இளைய தலைமுறையினரே ஒவ்வொரு காலத்திலும் புது வெளிச்சம் பாய்ச்சி வந்திருக்கின்றனர். சமூக சீர்திருத்த இயக்கங்கள் அனைத்துமே இளைஞர்களை நம்பியே உருவாக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் திராவிட இயக்கம் ஒரு காலத்தில் பெரும் அலையாக எழுந்ததற்குப் பின்னால் இளைஞர்களே இருந்தனர். இடதுசாரி இயக்கங்களின் வளர்ச்சியிலும் இளைஞர்கள்தான் முக்கியமான இடத்தை வகித்தனர்.

பொதுவாக முதியவர்கள், மரபுரீதியான சாதியரீதியான விஷயங்களில் இறுக்கமும் பிடிவாதமும் கொண்டவர்கள் என்றும், அவர்களுக்குப் பிந்தைய தலைமுறையினர் இதில் நெகிழ்வும் தாராள மனப்பான்மையும் கொண்டவர்கள் என்றும் ஒரு கருத்து நீண்டகாலமாக இருந்து வந்திருக்கின்றது. சாதி, மதம் சார்ந்த இறுக்கங்கள் புதிய காலத்தின் தேவைக்கும் வளர்ச்சிக்கும் உதவாதபோது, அவற்றை உடைத்துக்கொண்டு வெளியேறுபவர்கள் எப்போதும் இளைஞர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

நான் எனது இளமைக் காலத்தை நினைத்துக்கொள்கிறேன். சாதி, மதம் கடந்த பொதுவான மானுட வாழ்வின்மேல் நம்பிக்கை கொண்ட இளைஞர்களில் ஒருவனாக நானும் இருந்திருக்கிறேன். அத்தகைய நண்பர்கள் அநேகமானோர் எனக்கு இருந்தனர். மரபான நம்பிக்கைகளை மீறுவது, அவற்றைக் கடந்து செல்வது அப்போது மிகப் பெரிய மனக்கிளர்ச்சியூட்டும் அனுபவமாக இருந்தது. நாங்கள் ஒரு புதிய காலத்தின் பிரதிநிதிகள், ஒரு புதிய யுகத்தின் பிள்ளைகள் என்று மனம் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருக்கும்.

இளைஞர்கள் தங்கள் சாதி, மத அடையாளங்களை வெளிப்படையாக்குவதில் கூச்சப்பட்ட ஒரு காலம் இருந்தது. அல்லது அந்த அடையாளங்களை அப்படி வெளிப்படையாக வைத்துக்கொண்டவர்கள் வைதீக மனம் கொண்டவர்கள் எனக் கேலியாக பார்க்கப்பட்டனர். தங்களது சாதி, மத அடையாளங்களால் அழுத்தப்பட்ட இளைஞர்கள், நடை, உடை, பாவனைகளில் பொது அடையாளங்களை ஏற்கத் தலைப்பட்டார்கள். ஒரு புதிய நகர்ப்புற நாகரிக வாழ்க்கையில், இந்த அடையாளங்கள் தங்களுக்குத் தடையாக இருக்கும் என்று கருதினார்கள். நகர்ப்புற பண்பாடும் கல்வி வளர்ச்சியும் அடுத்த தலைமுறையினரை சாதி, மத தளைகளிலிருந்து முற்றாகவே விடுவித்துவிடும் என்று நம்பியவர்களில் நானும் ஒருவன்.

எனது நம்பிக்கை முற்றாகத் தோல்வியடைந்து விட்டது. காலத்தின் பிரமாண்ட நதி, இயற்கைக்கு மாறாக தான் வந்த திசையிலேயே திரும்பிப் பாய ஆரம்பித்துவிட்டது. ஒரு குறிப்பிட்ட சாதி அடையாளத்தின் பெயரால் ஒரு கோடி இளைஞர்கள் கூடுவார்கள் என்ற சுவரெழுத்துக்களைப் பார்த்தபோது, நமது சமூகம் எத்தகைய வீழ்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது என்பதை உணர முடிந்தது. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் உரிய விஷயமல்ல.

90களில் இரண்டு முக்கியமான பிரச்னைகள், இந்திய அரசியலின் முகத்தை மாற்றியமைத்தன. முதலாவதாக, இட ஒதுக்கீட்டிற்குக் காரணமான மண்டல் கமிஷன் அறிக்கையை எதிர்த்து மத்திய தர உயர்சாதி இந்துக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம். இந்தப் போராட்டம் அதன் எதிர்விளைவாக நாடெங்கும் தலித் இயக்கத்தைக் கட்டியெழுப்பியது. தங்களது உரிமைகளுக்காக ஒரு புறம் தலித் இளைஞர்களும், தங்கள் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன என்கிற கோபத்தில் உயர்சாதி இளைஞர்களும் சாதிய அடையாளங்களை தங்கள் முதன்மையான அடையாளங்களாக நினைக்கத் தொடங்கினார்கள்.

இரண்டாவது மிகப்பெரிய வரலாற்று அவலம், பாபர் மசூதி இடிப்பும் அதைத் தொடர்ந்து நடந்த குண்டுவெடிப்புகளும் மதக்கலவரங்களும். இதனால் இந்து, முஸ்லிம் என இரண்டு தரப்பிலும் இளைஞர்கள் மத்தியில் மத அடிப்படைவாத இயக்கங்கள் மும்முரமாக வேலை செய்யத் தொடங்கின. இரண்டு சமூகங்களுக்கிடையிலும் பரஸ்பரம் வெறுப்பும் சந்தேகமும் மிக ஆழமாக விதைக்கப்பட்டன. என் கண் முன்னால் மிகப்பெரிய அளவிற்கு இளைஞர்கள் மத அடையாளங்களை வெளிப்படையாக ஏற்பதைக் கண்டேன். துவேஷம் மிகுந்த வெறியூட்டும் பேச்சுகளை அவர்கள் குழந்தைகளைப் போல நம்பினார்கள்.

எனது கிராமத்தில் ஒரு காலத்தில் எல்லா சமூகங்களையும் சேர்ந்த இளைஞர்கள் கலந்து விளையாடும் கிரிக்கெட் அணிகள் இருந்தன. வாலிபால் அணிகள் இருந்தன. அவை படிப்படியாக மறைவதைக் கண்டேன். இளைஞர்களின் முகங்களில் இறுக்கம் தெரிந்தது. சமூகக் குழுக்களாக தனித்து நிற்பது பரவலாவதைக் கண்டேன். அடிப்படைவாத அமைப்புகளின் ரகசிய கூட்டங்களில் இளைஞர்கள் உற்சாகமாக பங்கேற்கத் தொடங்கினார்கள். அவர்கள் எங்களை வெறுத்தார்கள். 2000ல் இந்த சாதி, மத அரசியலின் மேகங்கள் இந்திய அரசியலை முற்றாக சூழ்ந்துகொண்டுவிட்டன.

சாதி, மதக் கட்டுப்பாடுகளை இறுக்கமாக வைத்துக்கொள்ள துணை செய்யும் கிராமியச் சூழலிலிருந்து மனிதர்கள் வெளியேறும்போது அவர்களது பழமைவாத கண்ணோட்டங்கள் உடைய வேண்டுமென்பது ஒரு இயற்கையான விதி. ஆனால் நமது கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வந்த இளைஞர்கள் மனதில் இந்தப் பண்பாட்டு உடைப்பு நடைபெறவில்லை. சாதிய, மதவாத இயக்கங்கள் அரசியல்ரீதியாக அவர்களது பழமைவாத எண்ணங்களை புத்துருவாக்கம் செய்தன. கார்ப்பரேட் நிறுவனங்களிலும் அரசு அலுவலகங்களிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் தங்கள் சொந்த சாதியினரைத் தேடி அவர்கள் சங்கமிக்கத் தொடங்கினர். உலகமயமாதலும் நகர்மயமாதலும் கொண்டுவந்திருக்க வேண்டிய முற்போக்கான மாற்றங்கள் எதுவும் இளைய தலைமுறையிடம் நிகழாமலேயே போயின. ஒருபுறம் நுகர்வுக் கலாசாரத்தின் அடிமைகளாகத் தங்களை மாற்றிக்கொண்டு, இன்னொரு புறம் சாதி, மதவாத பண்பாட்டின் அடிமைகளாக அவர்கள் ஆனார்கள். இப்படித்தான் நமது இளைஞர்கள் நமது காலத்தின் மாபெரும் இரண்டு தீமைகளின் எச்சங்களாக மாறிப்போனார்கள்.

இன்று சமூக வலைத்தளங்கள் போன்ற அதிநவீன ஊடகங்கள் உலகெங்கும் புதிய அரசியல் மாற்றங்களுக்கு உதவுகின்றன. அதிகாரத்திற்கும் வன்முறைக்கும் எதிரான இளைஞர்கள் இந்த ஊடகங்களை மிகப்பெரிய ஆயுதமாக உபயோகிக்கிறார்கள். ஆனால் இந்திய இளைஞர்களில் பெரும்பாலானோர் இந்த ஊடகங்களை சாதி, மத வெறுப்புகளைப் பரப்பவும், தங்களை ஆயிரம் ஆண்டுகள் பழையதோர் காலத்தின் பிரதிநிதிகளாக முன்னிறுத்தவுமே பயன்படுத்துகிறார்கள். சமூக வாழ்விலும் அரசியல் வாழ்விலும் முற்போக்கான ஜனநாயக மதிப்பீடுகள் ஏதுமற்றவர்களாக, இறந்த காலத்தின் நிழல்களாக நமது இளைஞர்கள் மாறிக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்க்கும்போது மிகப்பெரிய துயரமே மேலெழுகிறது.

இன்று சாதி, மத அரசியல் என்பது ஒரு பண்பாட்டுப் பிரச்னையாகத் தோன்றவேயில்லை. ஒவ்வொரு சாதியினரும், மதத்தினரும் தங்களது மரபான பண்பாடு சார்ந்த விழுமியங்களை எப்போதோ இழந்துவிட்டார்கள். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகவும் சௌகரியங்களுக்காகவும் தங்களது பாரம்பரிய மதிப்பீடுகளை எந்தத் தயக்கமுமின்றி உதறித் தள்ளுகிறார்கள். எப்போதும் எந்த சமரசத்திற்கும் தயாராகவே அவர்கள் இருக்கிறார்கள்.

அப்படியென்றால் இந்த சாதிவெறியும் மதவெறியும் எதைத்தான் குறிக்கிறது?

இன்றைக்கு சாதிவெறியும் மதவெறியும் பண்பாட்டு அடையாளம் அல்ல. அது அரசியல் அடையாளம். அது திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அதிகாரத்திற்கான ஒரு வழிமுறையாக, ஒரு துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தப்படுகிறது. லட்சியவாதத்தின் அழிவிலிருந்து, கொள்கைசார்ந்த அரசியலின் அழிவிலிருந்து, இன்று சாதி, மத அரசியல் உயிர்த்தெழுந்திருக்கிறது. நமது மகத்தான தலைவர்களும் நமது உன்னதமான லட்சியவாதங்களும் இல்லாமல் போன இடத்தில் இன்று இந்த வெறிக்கூச்சலைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இது அதிகாரத்திற்கான சுலபமான பாதை.

நமது இளைஞர்கள் இன்று தங்கள் உண்மையான எதிரிகளை மறந்துவிட்டார்கள். ஊழல், அதிகாரவர்க்க அரசியல், வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயத்தின் அழிவு, பன்னாட்டு வர்த்தகம், அந்நிய முதலீடுகள் என்று இளைஞர்களின் வாழ்க்கையை சூறையாடும் எத்தனையோ நாசகார சக்திகள் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தங்கள் சாதிப் பெண்கள் யாரை திருமணம் செய்துகொள்கிறார்கள் என்பதில்தான் அவர்களது எல்லா சமூக அரசியல் பிரச்னைகளும் இருக்கிறது என்று நம்ப வைக்கப்பட்டதன் மூலம், மிகப்பெரிய வரலாற்று மோசடியில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொருபுறம் இந்திய மைய நீரோட்ட அரசியலிலிருந்து தமிழர்கள் முற்றாக துண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். நமது உரிமைகளுக்காகவும் நியாயங்களுக்காகவும் ஒன்றுபட்டு நிற்கவேண்டிய ஒரு காலத்தில், தமிழர்கள் சாதியரீதியாக பிளவுபட்டு அழிந்துகொண்டிருக்கிறார்கள்.
நமது இளைஞர்கள் ஒரு நூற்றாண்டு முதுமை அடைந்துபோயிருக்கிறார்கள்.
(பேசலாம்...)

மனுஷ்ய புத்திரன் பதில்கள்


விஜயகாந்தின் ப்ளஸ் பாயின்ட், மைனஸ் பாயின்ட் என்ன?
- சங்கர், செங்கல்பட்டு.
ப்ளஸ் பாயின்ட் கையை உபயோகிக்கும் விதம்; மைனஸ் பாயின்ட் நாக்கை உபயோகிக்கும் விதம்.

உங்கள் முதல் கவிதைக்குக் கிடைத்த சன்மானம் எவ்வளவு?
- மல்லிகா அன்பழகன், சென்னை-78.
மூன்று ரூபாய்

பிரதமர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்று மன்மோகன்சிங் சொல்வது பற்றி...
- எஸ்.அர்ஷத் பயாஸ், குடியாத்தம்.
தான் பிரதமர் என்பதை தனக்குத் தானே நினைவூட்டிக்கொள்ள இருக்கும் ஒரே வழி இதுதான்!

ஒரு பெண்ணுக்கு செல்போன் வாங்கித் தருவது அவளுக்கு பாதுகாப்பா... சீரழிவா..?
- ப.உமாமகேஸ்வரி, நெய்வேலி.
ஆண்களுக்கு செல்போனால் என்ன நன்மையும் தீமையும் உண்டோ, அதேதான் பெண்களுக்கும். பெண்களைப் பற்றி இப்படியெல்லாம் கவலைப்படுவதை நிறுத்தினால் எல்லோருக்குமே நல்லது.

ஐபிஎல் மேட்ச்களைப்பார்ப்பதுண்டா?
- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
உண்டு. ஆனால் கிறிஸ் கெயில் 66 பந்துகளில் அடித்த 175 ரன்களும், டேவிட் மில்லர் 38 பந்துகளில் அடித்த 101 ரன்களும், சொதப்பலாகப் போய்க்கொண்டிருந்த டோர்னமென்ட்டை உசுப்பேற்றுவதற்காகச் செய்யப்பட்ட ஓர் ஏற்பாடோ என்ற சந்தேகம் மட்டும் எனக்குத் தீரவே இல்லை!

நெஞ்சில் நின்ற வரிகள்

பாடியோர்: ஏ.எம்.ராஜா. எஸ்.ஜானகி
நடிப்பு: ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா
படம்: தேனிலவு (1961)
பாடலாசிரியர்: கண்ணதாசன்

காதலை காலத்தோடும் இயற்கையோடும் பிணைத்துக் காணும்போது காதலென்பது காமத்தின் சுவடுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டுவிடுகிறது. காதலால் நிரம்பியிருக்கும் மனம், தான் வாழுகிற உலகின் மொத்த இயக்கத்தையுமே அதன் பிரதிபிம்பமாக கருதுகிறது. ஏ.எம்.ராஜாவின் குரலை அமரத்துவம் அடையச் செய்த இந்தப் பாடலில், ராஜா ஒவ்வொரு வரியையும் பாடும் விதத்தில் காதலின் தவிப்போ போராட்டமோ இல்லை. மாறாக, அதை ஒரு மிகப் பெரிய ஆராதனையின் அல்லது தியானத்தின் வெளிப்பாடாகவே காட்டுகிறார். ராஜாவின் குரலோடும் இசையோடும் இழையும் எஸ்.ஜானகியின் குரல், ஒரு பிரமாண்டமான அலையின்மீது மிதந்து செல்லும் படகைப் போல என் மனக்கண்ணில் சித்திரத்தை உருவாக்கியிருக்கிறது.
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே...

எழுதிச் செல்லும் இணையத்தின் கைகள் : இலக்கியா இலக்கியா

பிற்போக்குவாதிகள் தலை விரித்தாடும் சமூக வலைத்தளங்களில் நீதியின் குரலை சில இளைஞர்கள் அழுத்தமாகவும் துணிச்சலாகவும் வெளிப்படுத்துகிறார்கள். சிந்தையில் தெளிவும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட இலக்கியா போன்றவர்களின் குரல்கள் பெரும் ஆசுவாசமாக இருக்கின்றன. அவரது பக்கத்திலிருந்து...
‘சமூகம் பற்றி அதிகம் கவலைப்படும் சில பிரபலங்கள், ஏதோ ஒரு வகையில் சமூக அந்தஸ்தையும் பெற்றவர்களாக விளங்குகின்றனர் என்பது உண்மையே. சந்தர்ப்ப சூழ்நிலையால் இவர்களோடு நெருங்கிப் பழக நேரிடும்போதுதான், சுயநலமும், போலித்தனங்களும், தனிமனித பலவீனங்களும் இவர்களிடம் உள்ளார்ந்து இருப்பதைக் காண முடிகின்றது. போலியான மனிதனின் சமூக நோக்கம், துரோகத்தையும் சதியையும் உள்ளடக்கியது. இவர்கள் விரைவாக மக்கள்முன் அம்பலப்படுவார்கள். அம்பலப்படவேண்டும். இன்று ‘ஈழம்’ என்ற கருப்பொருளில் செயற்படும் சில எழுத்துகள் இந்த ரகம்தான். ஈழம் இன்று விலை போகக்கூடிய பருவகாலம். பெண் ஒடுக்குமுறையை அடித்தளமாகக் கொண்ட, சொந்த குடும்ப வாழ்க்கை முறையும், பெண்ணிலைவாத கட்டுரை எழுதும் பொதுவாழ்வும் எவ்வளவு போலியானவை. ஆணாதிக்க வாழ்க்கை முறையில் ஆர்வம் கொண்டவர்களை விட, இந்த இரட்டை முக அறிவுஜீவிகள் பயங்கரமானவர்கள்.
https://www.facebook.com/profile.php?id=100003132674571