வாழ்க்கை முட்டாள்கள் கூடும் சோலை!





‘‘சந்திக்கலாமா?’’ - ‘பசங்க’ பாண்டிராஜிடமிருந்து அலைபேசி அழைப்பு. போனால் அவரது உதவியாளர் நவீனோடு உட்கார்ந்திருக்கிறார். சசிகுமார் என்னிடம், ‘‘நம்ம பையன்... பாண்டி... அழகா ‘பசங்க’ன்னு படம் பண்றான். நம்ம பேனர்ல’’ என அறிமுகப்படுத்திய வேளை ஞாபகம் வந்தது. அதே பாண்டிராஜ், ‘‘சார், நம்ம பையன் நவீன். அழகா ‘மூடர்கூடம்’னு ஒரு படம் எடுத்திருக்கான். பார்த்திட்டு, அவனுக்குக் கண்டிப்பாக உதவணும்னு வாங்கி வெளியிடுகிறேன்’’ என்றார் இப்போது. சரித்திரம் திரும்புகிறது.

‘‘இது பெரும்பாய்ச்சல் என்றாலும் குறி தவறாதுன்னு நம்புகிறேன். ‘மூடர்கூடம்’ கலகலன்னு உருவாகியிருக்கு. கடுமையாக சாதகம் செய்பவர்களுக்கு மட்டுமே காமெடி கைவரும். அது இந்தப் படத்தில் தெரியும். ‘காதலிக்க நேரமில்லை’ பார்க்கும்போது ஒரு சந்தோஷம் ஏற்படும் இல்லையா, அப்படி ஒரு சந்தோஷம் இந்தப் படத்தில் எனக்குக் கிடைக்குது. அது மக்களுக்கும் கிடைச்சுட்டா இது ஒரு வெற்றிப்படம். நவீன்தான் ‘மூடர்கூட’த்தின் க்ரியேட்டர். இவன் பேசுவதுதான் சரியாக இருக்கும்’’ - விரல் காட்டிய திசையில் அமர்ந்திருக்கும் நவீன் பேசத் தொடங்குகிறார்...



‘‘ ‘மூடர்கூடம்’ என்கிற தலைப்பே அரிதா இருக்கு?’’
‘‘என் மனசில் இருக்கிற சோகத்தை யார்மீதும் பிழியக் கூடாது. ஏன் முதல் படம் காமெடியா எடுத்துட்டீங்க எனக் கேட்டால், ‘சாப்ளினை கேட்காத கேள்வியை என்னிடம் கேட்கக் கூடாது’. மூட்டை தூக்குற தொழிலாளி கூட, இதைப் பார்த்து சிரித்துவிட்டுப் போகலாம். சமூக சிந்தனை, மனித உணர்வுகள், தத்துவ சிந்தனைகள் தேடிப் பார்த்தால் தெரியும். என் படத்தை மேலோட்டமாகவும் ரசிக்கலாம். உள்ளே போய் பார்த்தும் ருசிக்கலாம்.’’

‘‘எப்படியிருக்கும் மூடர்கூடம்?’’
‘‘இந்தக் கதையை சில தயாரிப்பாளர்களிடம், நடிகர்களிடம் கொண்டு போனபோது ‘கதையை ஒன்லைனா சொல்லுங்க’னு கேட்டாங்க. ‘இது ஹைக்கூ கவிதை இல்லை, சினிமா ஸ்கிரிப்ட். வாழ்க்கையின் சில பகுதிகளை ஒரு லைனில் சொல்ற சாமர்த்தியம் எனக்குக் கிடையாது’ன்னு சொன்னேன். முடிவு எதையும் சொல்லலை. யாரையும் குறிப்பா காட்டலை. சார், ஒண்ணு புரிஞ்சுக்கணும்... ஒரு பபூன் வந்து காமெடி பண்ணும்போது அதன் உட்கருத்து வாழ்க்கையின் சோகமாகக்கூட இருக்கலாம். வக்கா, ஆட்டோ குமார், டூபில், தக்காளி, குள்ளன் இப்படி பலதரப்பட்டவர்களின் வாழ்க்கைதான் ‘மூடர்கூடம்’ ’’



‘‘அறிமுகப் படம்... நீங்களே நடிச்சிருக்கீங்க?’’
‘‘ரெண்டு படங்களில் நடிச்ச ஒருத்தரை செலக்ட் பண்ணி வச்சிருந்தேன். ஷூட்டிங் வரச் சொல்லி போன் பண்ணினா, எடுக்கவே இல்லை. பல தடவைக்குப் பிறகு, அவங்க அப்பா எடுத்தார். ‘சார், என் பையன் கட்டிப் பிடிக்க ஒரு பொண்ணு இல்லை, எட்டி உதைக்க ஃபைட் இல்லை, கத்திப் பேச வசனம் இல்லை. லவ் போர்ஷன் சேருங்க. பாட்டு வைங்க’ன்னு சொன்னார். ‘நீங்க போனை வைங்க’ன்னு சொல்லிட்டேன். இப்ப நானே அந்த ரோலில் நடிக்கிறேன்.’’

‘‘நடிகர்கள் முக்கியமா தெரிய வேண்டாமா?’’
‘‘நடிக்கத் தெரிந்தவர்கள் இருக்காங்க. ஓவியா கலக்கியிருக்காங்க. ‘கூத்துப்பட்டறை’ ஆதிரா நடிச்சதெல்லாம் பெரிய கவனம் பெறும். கூத்துப்பட்டறையிலிருந்தே குபேரன், சஞ்சீவி, பாஸ்கர்னு நிறைய பேர். அனுபமா, ராஜாஜ், சென்ராயன்... எல்லார் நம்பரையும் குறிச்சு வச்சுக்கங்க. எல்லாம் இந்தப் படத்திற்குப் பிறகு பிரபலம் ஆகிற முகங்கள்.’’



‘‘டிரெய்லர் எல்லாம் வாழ்க்கையின் தீவிரத்தை பேசுது?’’
‘‘வாழ்க்கையோட பெரும்பாலான விடியல் வழக்கமானதாகவே இருக்கு. முழிச்சோம், குளிச்சோம், சாப்பிட்டோம், உழைச்சோம், உறங்குனோம்னு சக்கரம் சுத்திக்கிட்டே இருக்கு. இந்த சுழற்சி நிக்கிற நிமிஷத்துலதான், நாம் திரும்பிப் பார்க்கறோம். வந்ததோட பலன் என்ன, வாழ்ந்த வெறுமை என்னன்னு உணர்றோம். மரணம் நோக்கிய பயணம்தான் வாழ்க்கை. இதில் முடிவை மட்டுமே, நம் ஒவ்வொரு செயலோட விளைவை மட்டுமே எதிர்நோக்கிப் பயணிக்கிற நாம், பயணம்தான் வாழ்க்கை என்ற உண்மையை மறக்கிறோம். நமக்கு ரொம்ப பக்கத்துல, நமக்குள்ள இருக்கிற வாழ்க்கையை வெளியில் தேடி அலையுறோம். கடைசி வரைக்கும் அது கிடைக்காமலேயே சாகிறோம். என்னோட படத்தில் இந்த விடியல்ங்கிறது என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், கண்டிப்பா வழக்கமானதல்ல. என்னைப் பொறுத்தவரை, இந்த உலகம் முட்டாள்கள் கூடும் அழகான சோலை. அதில் வாழ்க்கையை ஜெயிச்ச முட்டாள்களும் அடக்கம். மரணத்துக்கு முந்தின கடைசி நொடி வரை வாழ்க்கை இருக்குன்னு நம்மில் நிறைய பேருக்குத் தெரியாது. அந்த உண்மையும் இதில் புரியும்.’’
- நா.கதிர்வேலன்