பதற வச்சுட்டீங்களே சாமி!





சிறைச்சாலை கொலைகள் சரப்ஜித்சிங்கோடு ஒரு முடிவுக்கு வர வேண்டும். இது போன்ற சம்பவங்கள் நாகரிக சமுதாயம் வெட்கித் தலைகுனிய வேண்டிய காட்டுமிராண்டித்தனம்!
- எம்.பர்வீன் பாத்திமா, சென்னை-91; எஸ்.சாந்தி, காட்பாடி; ரேவதிப்ரியன், ஈரோடு; எஸ்.நாகராஜன், திருச்சி.

எஞ்சினியரிங் படித்தாலும், ‘ஒயிட் காலர்’ வாழ்க்கையைப் புறந்தள்ளிவிட்டு, மண்ணையும் மனிதனையும் வாழ வைக்க கீரை சாகுபடி செய்யும் அந்த நால்வர் குழுவுக்குப் பாராட்டுக்கள்.
- உமா மோகன்தாஸ், திண்டுக்கல்; மாரிமுத்து, ஈரோடு; எஸ்.வாசுதேவன், சென்னை; மு.செந்தாமரை, திருவிடை
மருதூர்; வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.

தான் போலியோவால் பாதிக்கப்பட்டவர் என்பதையும் மீறி, கடலலையில் சிக்கித் தவிக்கும் மானிட இன்னுயிர்களைக் காப்பாற்றிவரும்
‘அந்தர மனிதர்’ தனபாலின் சமூக சேவை, விலைமதிப்பற்றது.
- இரா.வளையாபதி, கரூர்;
சுப்புலட்சுமி, கோவில்பட்டி.;
ஜி.கோகுலகிருஷ்ணன், திருவாரூர்.


ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் தேவாலயத்தில் கல்யாணம் நடந்தது என்று கிளப்பிவிட்டு பதற வச்சுட்டீங்களே சாமி! நயனின் சேவை இன்னும் கொஞ்ச காலம் தமிழ் சினிமாவுக்குத் தேவை.
- எஸ்.சார்லஸ், நாகை.

‘சித்தார்த்-சமந்தா காதல் நிஜமா?’ என்ற தேச நலன் கருதிய அதிமுக்கிய கேள்வியை டைரக்ஷன் துறையில் ‘தீயா வேலை செய்யும்’ சுந்தர்சியிடம் கேட்டுள்ள உமது சேவை, மகத்தானது!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

நம்ம ஊரில் ‘பட்லர் இங்கிலீஷ்’ பேசித் திரிபவர்கள், இனி ‘பட்டர் பிஸ்கட் தமிழ்’ பேசட்டும். டாக்டர் செம்மலின் பணி, செம்மொழிக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டட்டும்!
- செ.தமிழ்தாசன், சிவகங்கை; மயிலை.கோபி, சென்னை-83.

‘‘கொடுக்கிற ஆள் எல்லாம் எம்.ஜி.ஆர் என்று மக்களுக்கு ரிஜிஸ்டர் ஆகியிருக்கு. இதுதாங்க சினிமா’’ என்று சொன்ன ஆர்.சுந்தர்ராஜனின் பேட்டி, வார்த்தைக்கு வார்த்தை சிக்ஸர் மழை.
- அ.கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.

‘சாயி’ தொடரில் பாபாவின் புனித மொழிகள் உடலுக்கும், உள்ளத்துக்கும் உரம் சேர்க்கின்றன. அதனோடு, மயிலாப்பூர் சாயி திருக்கோயிலைப் பற்றி சுருக்கமாக வெளியிட்டிருந்தது சந்தோஷ சர்பிரைஸ்!
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

‘மனம் நினைத்தால் சாதாரணமான ஒரு ஸ்விட்சை அழுத்தும் வேலையைக் கூட சிரமமாக்கி விடும்’ என ‘வேலைக்குப் போகாதீர்கள்’ கட்டுரை கூறிய கருத்து சிந்திக்க வைத்தது!
- ஏ.ஜி.கல்யாணசுந்தரம், மணியக்காரன்பாளையம்.