வீட்டிலேயே செய்யலாம் துப்பாக்கி!





கம்ப்யூட்டரில் உள்ள படத்தையோ எழுத்துகளையோ காகிதத்தில் பிரின்ட் எடுப்பது நமக்குத் தெரியும். 3டி பிரின்டர், இதில் அடுத்த கட்டம். கம்ப்யூட்டரில் நாம் ஒரு பொருளையே வடிவமைத்து பிரின்ட் கொடுத்தால் போதும்... இந்த 3டி பிரின்டர் அந்தப் பொருளை அப்படியே பிளாஸ்டிக்கில் உருவாக்கித் தந்துவிடும். பொதுவாக புது இயந்திரங்களை வடிவமைக்கும் எஞ்சினியர்களுக்கு புதுப்புது வடிவங்களில் ஸ்பேர் பார்ட்ஸ் தேவைப்படும். அவற்றை எளிதாக உருவாக்கிக்கொள்ள கண்டுபிடிக்கப்பட்டதே இந்த 3டி பிரின்டர். அட, இப்ப இந்த பிரின்டர் அல்ல மேட்டர். இந்த பிரின்டரை வைத்து, ஒரு மாணவன் உலகத்தையே மிரட்டிக் கொண்டிருக்கிறான். அதுதான் ரொம்ப ரொம்ப சீரியஸ் மேட்டர்!

கோடி வில்சன்... இதுதான் அவன் பெயர். வயது, ஜஸ்ட் 25. அமெரிக்காவின் டெக்சாஸ் சட்டப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறான். வீட்டில் ஒரு 3டி பிரின்டரை வைத்துக் கொண்டு அதன் மூலம் எளிமையான பிளாஸ்டிக் துப்பாக்கிகளை வடிவமைப்பதுதான் அவன் ஹாபி. இதற்காகவே ‘டிஃபென்ஸ் டிஸ்ட்ரிபியூட்டட்’ என்ற ‘லாப நோக்கற்ற’ ஒரு அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறான் கோடி.

இன்று இணையத்தைப் பொறுத்தவரை என்சைக்ளோபீடியா தகவல்களோ, டிக்ஷனரியோ, சினிமாவோ, இசையோ... எல்லாமே இலவசம்தான். இதுபோலவே ஆயுதங்களும் எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் ‘உயரிய’ நோக்கம். இதற்கான முன்னெடுப்புக்கு ‘விக்கி வெப்பன்ஸ்’ என்று பெயரிட்டிருக்கும் கோடி, கடந்த வாரம் வெற்றிகரமாக ஒரு பிளாஸ்டிக் துப்பாக்கியை ‘பிரின்ட்’ செய்து உருவாக்கியிருக்கிறான். பிளாஸ்டிக் என்றாலும் இது பொம்மைத் துப்பாக்கியல்ல! நிஜ குண்டுகளை இதில் லோட் செய்து யாரையும் சுட முடியும்.

அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை... இந்த பிளாஸ்டிக் துப்பாக்கியை எப்படி வடிவமைப்பது என்ற ப்ளூபிரின்ட்டையும் அனைவருக்கும் இலவசமாக இணையத்தில் தந்திருக்கிறது கோடியின் ‘டிஃபென்ஸ் டிஸ்ட்ரிபியூட்டட்’ அமைப்பு. ஆக, இனி துப்பாக்கி செய்ய விரும்புகிறவர்கள் கஷ்டப்பட்டு அதை வடிவமைக்கவெல்லாம் வேண்டாம். கோடி கொடுத்திருக்கும் இலவச ப்ளூ பிரின்ட்டை பதிவிறக்கம் செய்து, ஒரு 3டி பிரின்டர் மூலம் சுலபமாக அதை உருவாக்கிக் கொள்ளலாம்.



வெறும் 16 பாகங்கள் கொண்டது இவன் வடிவமைத்த துப்பாக்கி. இதில் 15 பாகங்களை தனித்தனியாக 3டி பிரின்டரில் உருவாக்கி இணைத்தான். துப்பாக்கி புல்லட்டைத் துப்ப வைக்கும் ட்ரிக்கர் மட்டும் தனியாக கடையில் வாங்கியது. தெருமுனை ஹார்டுவேர் கடையில் கிடைக்கும் ஆணியை வாங்கிக்கூட ட்ரிக்கராக பொருத்தலாம். இந்த எளிமைதான் உலகையே அரண்டு போக வைத்திருக்கிறது. இப்போதே பலரும் கோடி வில்சனின் ஃபைல்களைப் பார்த்துவிட்டு, ‘‘துப்பாக்கி செய்வதெல்லாம் சரி... புல்லட்டை எப்படிச் செய்வது என எப்போது  போடுவீர்கள்?’’ என விசாரிக்
கிறார்களாம்!

உலகெங்கும் துப்பாக்கிகளுக்கு இரையாகும் உயிர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இனி துப்பாக்கியை வீட்டிலேயே உருவாக்கிக் கொள்ளலாம் என்றால் என்னாவது? தவிர, தீவிரவாத அமைப்புகளிடம் இந்த செய்முறை கிடைத்தால் இன்னும் மோசம். காரணம், இது போன்ற பிளாஸ்டிக் துப்பாக்கிகளை எந்த மெட்டல் டிடெக்டர்களாலும் கண்டுபிடிக்க முடியாது. சர்வ சாதாரணமாக இவற்றை விமானத்துக்குள் கூட மறைத்து எடுத்துச் சென்றுவிட முடியும். எனவே, ‘‘இந்த விபரீத ஆயுத உற்பத்தியை உடனே தடை செய்ய வேண்டும்... கோடி வில்சனைக் கைது செய்ய வேண்டும்’’ என உலகம் முழுக்க எதிர்ப்பு அலை சுனாமியாகக் கிளம்பியிருக்கிறது.


‘‘இந்த ஆயுதங்களை யாராவது தப்பாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறதுதான். ஆனால், அதற்காக இதைத் தடுக்க நினைப்பது சரியல்ல. அது சுதந்திரத்தைப் பறிக்கும் செயல்’’ என்று இன்னொரு பக்கம் கோடி வில்சனும் கொடி பிடிக்கிறான். இந்த அக்கப்போரின் தீர்ப்புக்காக உலகமே காத்திருக்கிறதுசீக்கிரமே, ‘‘ ‘துப்பாக்கி’ நல்ல பிரின்ட் வந்துடுச்சா?’’ என்று நம்மூர் தீவிரவாதிகள் வேறு அர்த்தத்தில் விசாரிக்கலாம். புரிந்து கொள்ளத் தயாராய் இருங்கள்!
- கோகுலவாச நவநீதன்

எப்படி சாத்தியமாகிறது 3டி பிரின்டிங்?

தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், 3டி பிரின்டர்கள் கொஞ்சம் பழசுதான். 1986லேயே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. அதில் துல்லியத்தைக் கொண்டு வரத்தான் இத்தனை நாளாகியிருக்கிறது. இங்க் ஜெட் பிரின்டர்களைப் பார்த்திருப்போம். மெல்லிய கோடுகள் மூலம் வேண்டிய உருவத்தை அச்சடிக்கும் அதன் தொழில்நுட்பம்தான் இதிலும். என்ன... இந்த பிரின்டர் இங்க் கோடுகளுக்கு பதில் பிளாஸ்டிக்கை உருக்கி கோடுகள் போடுகிறது. செங்கல் அடுக்கி சுவர் எழுப்புவதுபோல், பிளாஸ்டிக் கோடுகள் மேல் கோடுகளைப் போட்டு வேண்டிய அளவு உயரமாகவும் தடிமனாகவும் பொருட்களை உருவாக்குகின்றன. இதற்குத் தேவையான பிளாஸ்டிக் மூலப் பொருளை வயர் வடிவிலோ, சிறு துகள்கள் வடிவிலோ லோட் செய்ய வேண்டும். ஒரு இஞ்ச் அளவுள்ள ஒரு சிறிய பொருளை 3டி பிரின்டர் தந்தாலும், ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் கோடுகள் போட்டு லேயர் லேயராகத்தான் அதை உருவாக்கியிருக்கும். மணிக்கணக்கில் நேரமும் எடுத்துக் கொள்ளும். இந்தக் குறை மட்டும் இல்லாவிட்டால் என்றைக்கோ உற்பத்தித் துறையில் இது புகுந்து பட்டையைக் கிளப்பியிருக்கும் என்கிறார்கள்.  

இந்தியாவில் இந்த பிரின்டர் நேரடியாகக் கிடைப்பது அரிதுதான். இந்தியர்களின் அபிமான பிரின்டர் பிராண்டான ஹெச்.பி கூட டிசைன்ஜெட் என்ற பெயரில் 3டி பிரின்டர்களை வெளியிட்டுள்ளது. ஆனாலும், அவை ஈபே போன்ற இணையதளங்களில் டாலர்களில்தான் விற்கப்படுகின்றனவே தவிர, ரீடெயிலுக்கு இறங்கி வரவில்லை. ஆனால், அமெரிக்காவில் ஆளாளுக்கு வீட்டில் வாங்கி வைத்திருக்கும் அளவுக்கு இது சாதாரணம்.

கோடி வில்சன் இப்போது துப்பாக்கி செய்திருக்கும் பிரின்டரின் பெயர் ஸ்ட்ராட்டாசிஸ் டைமென்ஷன் எஸ்.எஸ்.டி. இதன் விலை வெறும் 8000 டாலர்கள்தான். ‘‘இன்னும் 2000 டாலருக்குக் கிடைக்கும் எளிய பிரின்டரில் கூட உருவாக்கும் விதமாக துப்பாக்கியை வடிவமைப்பேன்’’ என்று வேறு அவன் பயம் காட்டி இருப்பது கொடுமையிலும் கொடுமை!