இந்த தலைமுறைக்கு விஐய்தான் சூப்பர்ஸ்டார்!





ஜீன்ஸ் இளைஞர்கள் பரபரக்கும் டைரக்டர் விஜய் ஆபீஸ். ஆனாலும், எதிரே வந்து அமைதியாகக் கதவைத் திறக்கிறார் அவரே. இன்று தமிழகத்தின் மிக முக்கியமான எதிர்பார்ப்புக் கேள்வி, ‘‘எப்படி இருக்கும் ‘தலைவா’?’’
‘‘நல்லா இருக்கீங்களா?’’ - இரண்டு பேருமே ஒரே நேரத்தில் கேட்க... இன்னும் சிரிப்பு.
‘‘எடுத்தவரைக்கும் ‘தலைவா’ எப்படி இருக்கு?’’ 

‘‘இப்பவும் கதையைச் சொல்ல முடியாது. ஆனால் ‘தலைவா’வை அருமையாக செதுக்கிட்டோம். என்னைப் பொறுத்தவரை ‘தலைவா’ ஸ்பெஷல் படம். விஜய் சாரோட ரசிகர்கள்னு தனியா யாரும் கிடையாது... தமிழக மக்கள்தான் அவங்க! அவரை வச்சு எடுத்தாலே எல்லா மக்களையும் சென்று அடைந்துவிட்ட நிலைமைதான். படத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் அலங்கரிக்கிறார் விஜய். இந்தப் படத்தில் அவரின் இடத்தை அவருக்குப் பதிலாக வேறு யாராவது நிரப்ப முடியுமா என்று யோசித்தால், விஜய்யின் இடத்தை விஜய்தான் நிரப்ப முடியும்னு தோணுது. தலைவன் என்பது தேடிப் போற விஷயம் கிடையாது... தேடி வர்ற விஷயம்! எப்படி அவரை அந்த இடத்தில் கொண்டு போய் வச்சாங்க என்பதை காரண, காரியத்தோடு வேறு பரிமாணத்தில் காட்டுகிறார் விஜய். அப்படி அவர் நடிச்சதை நானே சாட்சியா இருந்து பார்த்து ‘கட்’ சொல்ல மறந்தேன்.’’



‘‘எப்படி இந்த விஜய்க்கு அந்த விஜய் படம் கிடைச்சது?’’
‘‘ ‘தெய்வத்திருமகள்’ முடித்திருந்த சமயம். விஜய் சாரைப் பார்த்து கதை சொன்னேன். சின்னதாக ஒன்லைன். பதினைந்தாவது நிமிஷமே, ‘நாம் சேர்ந்து படம் செய்யலாம்’னு சொல்லிட்டுப் போயிட்டார். தீர்மானமா இருக்கார். ஆறு மாசம் கழிச்சு, திடீரென்று விஜய் சார்கிட்டே இருந்து போன். ‘இன்னிக்கு சந்திரபிரகாஷ் ஜெயினைப் பாருங்க’ன்னு சொன்னார். தயாரிப்பாளரிடமும் கதை சொல்ல... இதோ மும்பையில் ஒரே வேகத்தில் படம் எடுத்து, ஆஸ்திரேலியாவில் கொஞ்சம் படம் பிடித்து... பாருங்க, கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருக்கோம். எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து பார்க்கும்போது நிறைவாக இருப்பதுதான் பெரிய திருப்தி.’’

‘‘முதல் தடவையாக விஜய்யோட வேலை செய்கிற அனுபவம் என்ன விதமாய் இருந்தது?’’
‘‘இந்த ஜெனரேஷனுக்கு விஜய்தான் சூப்பர் ஸ்டார். அதில் யாருக்கும் இரண்டாவது அபிப்ராயம் இருக்கவே முடியாது. ஷூட்டிங் ஆரம்பித்து மூணு நாள் இருக்கும்... ‘நீங்க நாளைக்கு காலைல ஏழு மணிக்கு வந்தால் நல்லாயிருக்கும்’னு மெதுவா பயந்து பயந்து சொன்னேன். சத்தம் காட்டாமல் ஆறு மணிக்கு வந்து நின்னார். ஏன்னா, நேரம் இன்னும் அதிகமாகிட்டால், அவரைப் பார்க்க மும்பையில் கூடுற கூட்டத்தை சமாளிக்க முடியலை. போலீஸ் பாதுகாப்பு ஒண்ணும் வேலைக்கு ஆக மாட்டேங்கிறது. ‘விஜய்ன்னா தனித்துவம்’ என்ற பொஸிஷன் அவருக்கு வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். எங்கேயோ மும்பையில் அவருக்கு இருக்கிற ரசிகர்கள், பொது ஜனங்களைப் பார்த்து மும்பை போலீஸ் ஆச்சரியப்படுறாங்க. விஜய்யின் அற்புத நடிப்பின் பல்வேறு டைமன்ஷன்களைப் பார்க்க இன்னும் அதிக நாள் ஆகாது. ‘தலைவா’ அவரோட பெரிய தொடக்கம்.’’



‘‘ ‘தலைவா’வில் அரசியல் இருக்கும்னு சொல்றாங்களே...’’
‘‘ ‘தலைவா’ன்னு அன்பா கூட அழைக்கலாமே. நிச்சயமாக இதில் அரசியல் இல்லை. அரசியலோ, தனிப்பட்ட தாக்குதலோ எதுவும் இடம்பெறாது. அழகா, ரசனையா, மொத்தக் குடும்பமே உட்கார்ந்து பார்க்க ஒரு ட்ரீட்தான் ‘தலைவா’...’’



‘‘விஜய்க்கு என்ன ரோல்...’’
‘‘இதில் ஒரு குறிப்பிட்ட மாற்றம் அவருக்கு நடைபெறுகிறவரை, டான்ஸராக வர்றார். சும்மா அவர் ரெண்டு ஸ்டெப் வச்சாலே ‘டான்ஸ் கிங்’னு சொல்வாங்க. இதில் விளையாடியிருக்கார். பாடல்களுக்கு பிருந்தா, ஸ்ரீதர், காயத்ரி, தினேஷ், சின்னின்னு தனித்தனியா பாடுபட்டாங்க. அவங்க ஸ்டெப்ஸ் எல்லாத்தையும் ஊதித் தள்ளிட்டார் விஜய். மாஸ்டர்ஸ் தவிச்சு தண்ணி குடிச்சிட்டாங்க. ஷூட்டிங் ஸ்பாட்டில் பதற்றத்தில், அவசரத்தில், கொஞ்சம் ரசிக்க மறந்திருப்பேன். கொஞ்சம் இயந்திரத்தனமாகக்கூட இருந்திருப்பேன். எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து பார்த்தால்... கொண்டாட்டம்தான். எனக்கு இருக்கிற சந்தோஷம் ரசிகர்களுக்கு அப்படியே போகும்!’’

‘‘எப்படியிருக்கு விஜய்-அமலாபால் ஜோடி?’’
‘‘மோகன்லாலோட அமலா நடிச்ச ‘ரன் பேபி ரன்’ பார்த்தேன். அதில் அமலா பின்னியிருப்பாங்க. ‘தலைவா’வில் ஹீரோயின் கேரக்டர் கொஞ்சம் உழைக்க வேண்டியிருக்கும். வெறும் நாலு காட்சி, மூணு பாட்டுன்னு தப்பிக்க முடியாது. அமலாதான் சரின்னு பட்டது. நம்பிக்கைக்கு பெருமை சேர்த்து விட்டார். என்னோட நாலாவது தடவையாக இணைகிறார் சந்தானம். அவர் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் சிரிப்பு வெடி. அப்புறம் நமக்கு எப்பவும் ஜி.வி.பிரகாஷ்தான்... நா.முத்துக்குமார், நீரவ்ஷாதான். அப்படியே அடிக்ட் ஆகிப் போச்சு எனக்கு.


விஜய் மாதிரி சின்சியர் ஆர்ட்டிஸ்ட்டோடு மாஸ் மூவி பண்றது வித்தியாசமான சவால். இவ்வளவு செலவுக்கு புரொடியூசர் சந்திரபிரகாஷ் ஜெயின், இணை தயாரிப்பாளர்கள் சி.பி.சுனில், சி.பி.தினேஷ், சுரேஷ்சந்த் எல்லோரும் காரணம். என்னைப் பொறுத்தவரை நான் ஜெயிச்சேன்னு எப்பவும் சொன்னதே கிடையாது. என் டீம் ஜெயிச்சுதுன்னுதான் சொல்வேன். இது மேஜிக்கெல்லாம் இல்லை. விஜய் சாரோட உழைப்பு சார், உழைப்பு!’’
- நா.கதிர்வேலன்