வறுமையை ஜெயித்த ஜெயசூரியா!





வெற்றிக்கு வறுமை தடையில்லை என்று நிரூபித்திருக்கிறார் திருச்செங்கோட்டு ஜெயசூரியா. பிளஸ் 2 தேர்வில் 1189 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த இந்த மாணவனின் தந்தை ஒரு விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர். நடக்கவும், பேசவும் தவிப்பவர். உதவித் தொகையாக கிடைத்த 1 லட்சம் ரூபாய்க்கு வட்டியாக வரும் 2000 ரூபாய்தான் இவர் குடும்பத்தின் ஜீவாதாரம். இருட்டில் தவித்த குடும்பத்துக்கு கல்வி மூலம் வெளிச்சமேற்றி இருக்கிறார் ஜெயசூரியா.

‘‘அப்பா செந்தில்குமார் ஒரு கம்பெனியில ஸ்டோர் கீப்பரா இருந்தார். அம்மா பேரு ஆனந்தி. ஒருநாள் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வர்றப்போ டூவீலர் மோதி அப்பாவுக்கு தலையிலயும் கால்லயும் அடிபட்டுடுச்சு. அப்போ நான் 3வது படிச்சுக்கிடிருந்தேன். தங்கை 3 மாதக் குழந்தை. 9 வருடம் கழிச்சு இப்போதான் மெல்ல மெல்ல நடக்க ஆரம்பிச்சிருக்கார். உறவுக்காரங்க உதவியால வளர்ந்தோம். அரசுப் பள்ளியிலதான் படிச்சேன். நான் நல்லாப் படிக்கிறதைக் கேள்விப்பட்டு, வித்யவிகாஸ் பள்ளியில இயக்குனரா இருந்த எங்க தாத்தா, ஃப்ரீ சீட் கொடுத்தார்.

10ம் வகுப்புல ஸ்கூல் பர்ஸ்ட் வந்தேன். அப்பவே டீச்சர்ஸ் எல்லாம் ‘கண்டிப்பா நீ பிளஸ் 2வில ஸ்டேட் லெவல் வருவே’ன்னு உற்சாகப்படுத்தினாங்க. அப்பாவை முழுமையா குணமாக்கறதுக்காக நான் படிக்கணும்னு நினைப்பேன். அம்மா பாவம். அப்பாவையும் பராமரிச்சுக்கிட்டு எனக்கும் ஹெல்ப் பண்ணி அவங்கதான் ரொம்ப சிரமப்பட்டாங்க. ஸ்டேட் ஃபர்ஸ்ட்னு கேள்விப்பட்டதும் அவங்களால பேசவே முடியலே. அழுதுட்டாங்க. அப்பாவும் சந்தோஷப்பட்டார்.



எவ்வளவு பிரச்னை இருந்தாலும், வகுப்புல பாடம் நடத்தும்போது கவனத்தை சிதற விடமாட்டேன். காலையில நாலரை மணிக்கு எழுந்திடுவேன். இரவு 10 மணிக்கெல்லாம் படுத்துடுவேன். விளையாடுற நேரத்துல விளையாட்டு. படிக்கிற நேரத்துல கவனச்சிதறல் இல்லாம படிப்பு... ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் என்மேல காட்டுன அக்கறைக்கு வாழ்க்கை முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கேன்’’ என்று நெகிழ்கிற ஜெயசூரியா மேத்ஸ், கெமிஸ்ட்ரி, பயலாஜியில் சென்டம். பிட்ஸ் பிலானியில் எஞ்சினியரிங் படிக்க விரும்புகிறார். அது கிடைக்காத பட்சத்தில் மருத்துவம்.

1189 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்த மற்றொரு மாணவர் அபினேஷ், நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி மாணவர். இவர், பிசிக்ஸ், மேத்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜியில் சென்டம். அபினேஷின் அப்பா சேகர், மதுரை இந்தியன் வங்கியில் துணை மேலாளர். அம்மா லதா, அரசுப்பள்ளி ஆசிரியை.  

‘‘எல்லா ஆசிரியர்களுமே வெறும் பாடத்தை மட்டும் நடத்தாம தன்னம்பிக்கையை வளர்க்கிற விதமா பேசுவாங்க. தனிப்பட்ட முறையில ஒவ்வொருத்தருக்கும் எதுல பிரச்னைன்னு புரிஞ்சு வச்சுக்கிட்டு கைடு பண்ணுவாங்க. எழுதிப் பாப்பேன். க்ரூப் ஸ்டடி செய்வோம். சந்தேகம் இருந்தா அப்பவே கேட்டு கிளியர் பண்ணிக்குவேன். அதிகாலையிலதான் மனநிலை தெளிவா இருக்கும். பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி எல்லாம் அந்த நேரத்துல படிச்சாதான் மண்டையில ஏறும். கொஞ்ச நேரம் படிச்சாலும் கவனம் சிதறாம படிப்பேன். பதட்டமில்லாம, நிதானமா எக்ஸாம் ஹாலுக்குப் போனேன். 3 இடத்துக்குள்ள வந்திடுவேன்னு நம்பிக்கை இருந்துச்சு. ஸ்டேட் பர்ஸ்ட்ங்கிறது சர்ப்ரைஸ். எங்க டைரக்டர்ஸ், ஒவ்வொரு நாளும் என்னை உற்சாகப்படுத்தின அம்மா, அப்பா, அண்ணனுக்கும் தேங்க்ஸ்’’ - உற்சாகமாகச் சொல்கிற அபினேஷ், டாக்டராக விரும்புகிறார்.
எதிர்காலம் சிறப்பாக அமையட்டும்!  
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஜெரோம், பழனி

இளையராஜாவுக்கு நன்றி!

தமிழ்ப் பாடத்தில் 199 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்திருக்கிறார் கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் பள்ளி மாணவி சிந்துஜா. இவர்பெற்ற மொத்த மதிப்பெண்கள் 1179. ‘‘தமிழ் மீடியத்துல படிக்கிறவங்க ஸ்டேட் ரேங்க் வாங்கமுடியாதுன்னு ஒரு நினைப்பு இருக்கு. எந்த மொழியில படிச்சாலும் உள்வாங்கிக்கிறதைப் பொறுத்துத்தான் மார்க் கிடைக்கும். நான் தமிழ்மீடியத்துலதான் படிச்சேன். எங்க தமிழய்யா இளையராஜா பீரியட் வருதுன்னாலே எங்களுக்கெல்லாம் கொண்டாட்டமாயிடும். கதை சொல்றது மாதிரி பாடம் நடத்துவார். நிறைய உதாரணங்கள் சொல்லி உற்சாகப்படுத்துவார். அவருக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் நன்றி’’ என்கிறார் சிந்துஜா. சிந்துஜாவின் அப்பா செல்வம், விவசாயி.