மேஷம் : உழைப்பால் உயர்வு




 

உழைப்பால் உயர்வு
உங்களுக்கு வருமானத்தையும், வசதி வாய்ப்புகளையும், செல்வாக்கையும் தரக்கூடிய குரு பகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்கள் ராசிக்கு 3ல் அமர்வதால் புதிய சிந்தனைகள் உதிக்கும். மாறுபட்ட பாதையில் சாதிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். பணவரவு குறையாது என்றாலும், எதிர்பாராத செலவுகளால் திணறுவீர்கள். 

வங்கிக் கடன் உதவியுடன் வீடு, மனை வாங்குவீர்கள். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். யோகாதிபதியான குரு 3ம் வீட்டில் முடங்குவதால் யாருக்கும் கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். கணவன்-மனைவிக்குள் சாதாரண விஷயத்திற்கெல்லாம் சண்டை வரும். முன்கோபத்தை விடுங்கள்.

 இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். புதிதாக அறிமுகமாகும் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். வசதி, செல்வாக்கை கண்டு மயங்கி தவறானவர்களுடன் சென்றுவிட வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். மருத்துவரை ஆலோசிக்காமல் நீங்களாக மருந்து உட்கொள்ள வேண்டாம். மனைவிவழி உறவினர்களால் செலவு வரும். என்றாலும் உங்களின் ஏழாம் வீட்டை குரு பார்ப்பதால், திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். உங்களின் 9ம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. பெரிய முதலீடுகள் வேண்டாம். உத்யோகத்தில் அதிகம் உழைக்க வேண்டி வரும்.  

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாயின் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் சொத்து அமையும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகுவின் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் குடும்பத்தில் சலசலப்புகள் வரும். மனைவிக்கு சிறுசிறு உடல்நலக்குறைவு வந்து நீங்கும். வாகனம் வாங்குவீர்கள்.

29.8.2013 முதல் 26.1.2014 வரை, மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை குரு பகவான் தன் சுய சாரத்தில் செல்வதால் புது வேலை கிடைக்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். 13.11.2013 முதல் 26.1.2014 வரை குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் தள்ளிப்போன விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் நெய் விளக்கேற்றி முருகனை வணங்குங்கள். சுமை தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.