குட்டிச்சுவர் சிந்தனைகள்





‘‘ச்சீ, நீயெல்லாம் அண்ணன், தம்பியோட பொறக்கல..?’’
‘‘ச்சே, கல்லுக்கு பேன்ட் சட்டை மாட்டிவிட்டா கூட இடுப்புல கிள்ளிப் பார்ப்பாங்க... பட்டப்பகல்ல ஒரு ஆம்பளையால தைரியமா வெளிய நடமாட முடியல!’’
‘காதலுக்கு ஒத்துக்கொள்ளாததுனால வாலிபர் முகத்தில் ஆசிட் வீச்சு...’

‘‘போராடுவோம்... போராடுவோம்... ஆண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை போராடுவோம்...’’
‘‘ஆம்பளைன்னா, உங்களுக்கு எல்லாம் அவ்வளவு இளக்காரமா?’’
‘‘பையன வளர்த்து கல்யாணம் பண்ணிக் கொடுக்கிற வரை, வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு இருக்கேன்!’’
‘‘என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேம்மா... அவன் கண்ணுல ஆனந்தக் கண்ணீரதான் நாங்க பார்க்கணும்...’’
‘‘இது ஆண்கள் மட்டும் பேருந்து...’’
என்னடா இதெல்லாம்னு யோசிக்கிறீங்களா? 10/15 வருஷம் கழிச்சு தினமும் கேட்கப் போற டயலாக்குகள். வாசகர்கள் நலன் கருதி தொலைநோக்கு சிந்தனையுடன் உங்களுக்கு முந்தித் தருவது ‘குட்டிச்சுவர் சிந்தனைகள்’ மட்டுமே... மட்டுமே... மட்டுமே!
ஹி... ஹி... ஒரு விளம்பரம்!

தமிழ்நாடு முழுக்க மின் வெட்டு இருக்குன்னு செத்துப்போன ஒசாமா முதல், சாகடிச்ச ஒபாமா வரை எல்லாருக்கும் தெரியும். இருண்ட கண்டம்னா ஆப்ரிக்கா, இருண்ட இடம்னா தமிழ்நாடுன்னு பொது அறிவு புத்தகங்கள்ல வரப்போகுதுன்னும் பேசிக்கிறாங்க. ஆனா, இந்த அவப்பெயரை துடைக்க எங்ககிட்ட ஒரு சூப்பர் ஐடியா இருக்கு...

தினம் தினம் தமிழ்நாட்டுல மின்வெட்டப்போ தெருவுக்கு 10 ஜெனரேட்டர் வச்சு தற்காலிகமா மின்வெட்ட அட்ஜஸ்ட் பண்ணிக்கிறாங்க. அப்போ ஒரு ஊருக்கு எத்தன ஜெனரேட்டர்? அப்புறம் தமிழ்நாடு முழுக்க எத்தன ஜெனரேட்டர்னு நீங்களே கணக்கு போட்டு பாருங்க. இப்படி லட்சக்கணக்கான ஜெனரேட்டர ஓட்டி லட்சம் லிட்டர் டீசலையும் நேரத்தையும் வீணடிக்கிறதுக்கு பதிலா, ஒவ்வொரு காற்றாலையிலும் ஒரு ஜென்செட் வச்சு கிணத்து மோட்டார் மாதிரி சுத்தி விட்டா, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் மின்வெட்டு பிரச்னை தீர்ந்துடாது? இப்படி ஒரு ஐடியா சொன்னா, உலகம் நம்மள ‘கேனப்பய’ன்னு சொல்லும்!

‘மாட்டுக்கு அஞ்சறிவு... மனுஷனுக்கு ஆறறிவு...’ என்பதெல்லாம் ஓகே. ஏழாம் அறிவு தெரியுமா? உடனே சூர்யா நடிச்சு சூப்பர் ஹிட்டான படம்னு மொக்க போடாதீங்க. டோங் லீய வச்சு காத கடிக்க விட்ருவோம். ஏழாம் அறிவுன்னா எக்ஸ்ட்ரா அறிவு. அது தமிழர்களுக்கு மட்டுமே வேலை செய்யும் அடிஷனல் அறிவு.

யி தூரத்துல சர்வர் சாம்பார் வாளியோட வர்றதைப் பார்த்த உடனே, இலையில இருக்கிற சாம்பாரை காலி பண்ணச் சொல்றதுதான் ஏழாம் அறிவு.

லி சரக்கு போட்டு ஊரு முழுக்க லந்து விட்டு, அஞ்சாறு தடவ ஆப்பாயில் போட்டாலும், நம்ம வீடு இருக்கிற தெருவுக்கு வந்த உடனே நடை, உடை, ஆடும் இடை எல்லாத்தையும் சரி பண்ணுமே... அதான் ஏழாம் அறிவு.

லி அடுத்த நாள் காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தின்னா மொத நாளே சரக்க உஷார் பண்ண வைக்குது பாருங்க... அதான் ஏழாம் அறிவு.

லி ஃபிரண்ட்ஸோட ஹோட்டல்ல சாப்பிட்ட பில் வர ஒரு நிமிஷம் இருக்கிறப்போ, கரெக்டா கை கழுவப் போகச் சொல்லுது பாருங்க... அது... அதுதான் ஏழாம் அறிவு.

லி எவனுக்கு எத்தனாவது ரிங்ல கட் பண்ணி மிஸ்டு கால் பண்ணணும்னு பக்காவா ப்ளான் பண்ணிச் செய்ய வைக்கிறதும் இதே ஏழாம் அறிவுதான்.

இப்படியாக, தமிழர்களுக்கு மட்டுமே ஆண்டவனால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டதுதான் இந்த ஏழாம் அறிவு.

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் எண்ணிக்கையை விட கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் பெருக்கத்தை விட செல்போன்களின் பெருக்கம் அதிகமாகி இருக்கிறது.

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் வளர்ச்சியை விட கட்டிடங்களின் வளர்ச்சி அதிகமாகி இருக்கிறது.

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் எண்ணிக்கையை விட வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.

ஆனாலும், இந்தியாவில் கடந்த 20  ஆண்டுகளில் இந்தியர்களின் எண்ணிக்கையை விட மனிதர்களின் எண்ணிக்கை குறைந்துதான் போயிருக்கிறது.

வாழ்க்கையில எல்லோருக்கும் பல மாற்றங்கள் வரும். சிலரது வாழ்க்கையே மாற்றங்களால் ஆனதுதான். அதுல அதிகமா வர்ற மாற்றம், தடுமாற்றம். முக்கியமா, முடிவுகள் எடுக்க நமக்கு வரும் தடுமாற்றம். பல நாட்களில் நாம் எடுக்கும் சில முடிவுகள், ஒட்டுமொத்த வாழ்க்கையையே மாற்றிவிடும். வாழ்க்கையில முடிவுகளை எல்லோரும் ரெண்டு விதமாதான் எடுப்பாங்க. ஒண்ணு, மனசு சொல்றத கேட்டு; இன்னொண்ணு, மூளை சொல்றத கேட்டு. சில சமயம் மனசு சொல்றதக் கேட்டு எடுக்கிற முடிவுகள் சரியா இருக்கும், சில சமயம் மூளை சொல்ற முடிவுகள் சரியா இருக்கும். ஆனா, பல சமயம் நம்ம குழப்பமே... மனசு சொல்றத கேட்கிறதா, இல்லை.. மூளை சொல்றத கேட்கிறதா என்பதுதான். இப்படி மூளையையும் மனசையும் போட்டுக் குழப்பிக்கிட்டு முடிவு எடுக்க வேண்டிய சமயத்துல நான் மனசு சொல்றதையும் கேட்க மாட்டேன்; மூளை சொல்றதையும் கேட்க மாட்டேன். பேசாம மனைவி சொல்றதைக் கேட்டுடுவேன். மேட்டர் ஸ்மூத்தா போயிடும். இத நீங்க எதிர்பார்க்கலதானே? அப்போ முதல் இரண்டு வரிகள மீண்டும் படிங்க!

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர்!
‘திருமதி தமிழ்’ போஸ்டரை பார்டர்ல ஒட்டி, சீனர்களை ஓட்டலாம்னு நாம போன வாரம் கலாய்க்கப் போக, அதையே அவங்க படத்தோட போஸ்டர்ல சேர்த்து விளம்பரப்படுத்திக்கிட்ட ‘திருமதி தமிழ்’ படக்குழு!