வேலைக்குப் போகாதீர்கள்! உங்களைத் தேடி வேலை வரும்





சில சமயங்களில் கடினமாக உழைப்பதும், புத்திசாலித்தனமாக உழைப்பதும் இரண்டு வேறு வேறு விஷயங்களாகி விடுகின்றன
- பைரன் டோர்கன்

உங்கள் பணி இடத்தில் வேலை பார்ப்பது ரோபோக்கள் அல்ல... உங்களையும் சேர்த்து எல்லோரும் மனிதர்கள். அவர்கள் ஊமைகளும் அல்ல. எனவே, பலவிதமான உரையாடல்கள் உங்கள் காதுகளில் விழுந்தே தீரும். சொல்லப்போனால், வேலை பார்க்கும் இடம் இப்படி உயிரோட்டமாகத்தான் இருக்க வேண்டும்.

இப்படி காதில் விழும் ஏராளமான உரையாடல்களில் உங்களது பங்கு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பது பற்றி என்றைக்காவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
பணி சார்ந்த நேரடியான உரையாடல்களில் நீங்கள் பங்கு பெறுவதில் எவ்விதப் பிரச்னையும் இல்லை. மறைமுகமான உரையாடல்கள்... அதாவது, காற்றில் வந்து காதில் விழும் வார்த்தைகளைக் கையாளுவதில் சில வரையறைகள் உள்ளன.

பணியிடத்தில், உங்களுடன் பணியாற்றும் சிலர் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. அந்த உரையாடலின் ஆரம்பமோ, முடிவோ நமக்குத் தெரியாது. இப்படி எதுவும் தெரியாமல் நடுவிலுள்ள வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொண்டு ‘கருத்து சொல்லுகிறேன்’ என்று நீங்கள் கிளம்பிவிடக் கூடாது.

உதாரணமாக, ‘‘வேலை பாக்காதீங்க... முட்டாள்தான் வேலை பார்ப்பான்’’ எனும் வார்த்தைகள் உங்களது அரைகுறைக் காதுகளில் விழ, பொங்கி எழுகிறீர்கள். அப்படியானால், வேலை பார்ப்பவன் பைத்தியக்காரனா? என்பது உங்கள் வாதம். களத்தில் இறங்கிய பிறகுதான் தெரிகிறது, அதன் முழுமையான வார்த்தைகள். ‘‘காய்ச்சலோடு வேலை பாக்காதீங்க. முட்டாள்தான் வேலை பார்ப்பான். போய் டாக்டர்கிட்ட காட்டுங்க!’’ இதைக் கேட்டு அசடு வழிவீர்கள்!
நம்மிடம் யாரும் கருத்து கேட்கவில்லை. நாம் ஏன் சம்மன் இல்லாமல் ஆஜராகவேண்டும்? நமது கருத்து தேவை என்றால், நம்மிடம் நேரடியாகவே கேட்டிருப்பார்களே!

பணி இடம் என்றால் நல்லதும் கெட்டதுமாக, தப்பும் தவறுமாக பலவிதமான பேச்சுகள் காதில் விழத்தான் செய்யும். காதில் விழுகிற அரைகுறை விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, இரண்டு பேருக்கு நடுவில் குறுக்கிடுவது, ‘வேலை பார்க்கும் இடத்தில் அவமானப்பட்டுத்தான் தீருவேன்’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைபவர்களின் குறுக்கு வழியாகும்.

இப்படித் தேவையின்றி நீங்கள் தலையிடும்போது, அவர்கள் சொன்னதெல்லாம் போய், நீங்கள் சொன்ன - விஷயம் புரியாமல் நீங்கள் வெளிப்படுத்திய அரைகுறை வார்த்தைகள் - முன் நிறுத்தப்படலாம். இது உங்களுக்கு வேறு விதமான பிரச்னைகளைக் கொண்டு வரும்.  
அரைகுறை வார்த்தைகள் ஆபத்தானவை.
இன்னொரு விஷயம்... நடுவில் குறுக்கிட்ட உங்களிடம்,
‘‘உன்னிடம் யார் கேட்டார்கள்?’’
‘‘உன் வேலை எதுவோ, அதைப் பார்...’’
‘‘உங்கிட்ட கேட்டா மட்டும் கருத்து சொல்லு...’’ என்றெல்லாம் அவர்கள் பேசக்கூட வேண்டாம்... ஒரு பார்வை பார்த்தாலே போதும். அந்த அவமானத்தை அறிவுள்ளோர் சகிக்கமாட்டார்கள்.



‘எல்லாவற்றிலும் நானும் உண்டு’ என்று தலையிடுவது நமது மதிப்பைக் குறைத்துவிடும். நமது கேரக்டரையே சிறுமைப்படுத்தி, ‘‘தேவையின்றி எல்லா விஷயங்களிலும் தலையிடுகிற ஆள்...’’ என்று முத்திரை குத்திவிடும்.

எப்படி நாம் பேசும்போது அடுத்தவர்கள் குறுக்கிடுவதை விரும்ப மாட்டோமோ, அதே போல் பிறரும் விரும்ப மாட்டார்கள்.

எனவே, உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
நீங்கள் விருப்புடனோ, வெறுப்புடனோ உங்களது வேலையைச் செய்து கொண்டிருக்கும்போது சில நேரம் இப்படி எண்ணங்கள் தோன்றும். ‘நாம் மட்டும்தான் இங்கே கஷ்டப்படுகிறோம், மற்றவர்கள் எல்லோரும் சுகமாய், சுலபமாய் வேலை செய்கிறார்கள். நமக்கு மட்டும் இப்படி அநியாயமாய் வேலைப் பளு இருக்கிறது. நாம்தான் இங்கே எல்லோருக்கும் இளிச்சவாயன்...’

இப்படி அங்கலாய்ப்பதில் பெரும்பாலும் பொய்யே இருக்கும். உங்களை உங்களது சோம்பேறித்தனம் தின்று கொண்டிருக்கிறது, உங்களது வேலையை நீங்கள் ஆர்வமின்றி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதே இதற்குப் பொருள். ஒருவேளை, நீங்கள் எண்ணியது நிஜமாக இருந்து விட்டால்..?

உங்கள் பணி இடத்தில் மற்றவர்களைவிட உங்களுக்கு அதிக வேலைகளும், பொறுப்புகளும் உண்மையிலேயே வழங்கப்பட்டிருக்கிறதா? பணிச்சுமையால் நீங்கள் மூச்சுத் திணறுகிறீர்களா?
அப்படியானால், உங்களுக்கு வாழ்த்துக்கள்!

உங்களை, உங்களது அறிவுத்திறனை உங்களது மேலிடம் புரிந்து கொண்டிருக்கிறது. உங்களது பணித்திறனை கவனிக்க வேண்டியவர்கள் கவனித்துவிட்டார்கள். இப்படி பாஸிட்டிவாக யோசியுங்கள்!

உங்களிடம் திறமை இருப்பதால்தானே உங்களுக்கு வேலைகள் கொடுக்கிறார்கள்? சரியாகச் சொல்லப்போனால், வாய்ப்புகள் கொடுக்கிறார்கள்? ஆம், அவற்றை வாய்ப்புகளாக எண்ணுங்கள். மற்றவர்களுக்கு கிடைக்காதது, உங்களுக்குக் கிடைக்கிறது. வாய்ப்புகள்தான் உங்களை மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்லப் போகின்றன; எனவே அவற்றை விரும்புங்கள். அந்த வேலைகளை விரும்பிச் செய்யுங்கள்!

இதில் ஒளிந்திருக்கும் இன்னொரு செய்தி... விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் அந்தப் பணி இடத்தில் முக்கியமானவராய், தவிர்க்கப்பட முடியாதவராய் மாறிக் கொண்டிருக்கிறீர்கள்! ‘அந்த வேலையா... கூப்பிடப்பா இவரை’, ‘எங்க போய்ட்டார் அவர், எதுக்கும் அவர்ட்ட ஒரு வார்த்தை கேளுங்க’, ‘அவர் வந்துடட்டுமே...’ என உங்களைப் பற்றியே நிர்வாகம் நினைத்துக் கொண்டிருக்கும்.

இது உங்களுக்கு நிச்சயம் பெருமை சேர்க்கும். எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும். எனவே, தேவையின்றி புலம்பாதீர்கள். வேலைகள் அதிகம் செய்பவருக்கு, அவர் ‘லீவ்’ என்றால் பணி இடத்தில் ஒன்றுமே ஓடாது, ஸ்தம்பித்துவிடும் என்ற நிலையில் இருப்பவருக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான்.

பல வேலைகளைத் திறம்படச் செய்வதால், தனிப்பட்ட முறையில் உங்களது ஆற்றல், ஆளுமை, செயல்திறன் போன்ற பண்புகள் அதிகரிக்கின்றன. பல பொறுப்புகளைக் கையாளுவதின் மூலம் உங்களது தன்னம்பிக்கை அதிகமாகிறது.

இவை நிச்சயம் உங்களது சொந்த வாழ்க்கையிலும் எதிரொலிக்கும். சொந்த வாழ்க்கையிலும் நீங்கள் வெற்றிகரமாகச் செயல்படுவதால், அனைவராலும் மதிக்கப்படுவீர்கள்!

அதிக வேலை உள்ளவர் அதிக ஓய்வில் இருக்கிறார் என்று சொல்லுவார்கள். அனுபவசாலிகள் நிச்சயம் இதை உணர்ந்திருப்பார்கள்! உணராதவர்கள் அதிகப் பொறுப்புகளை ஏற்றுப் பாருங்கள்!
(வேலை வரும்...)