கர்ணனின் கவசம் 10





புரண்டு படுத்த ஆனந்த்தால் ஒரு நொடி ஃபாஸ்ட்டின் கவனம் தடைப்பட்டது. உறக்கம் கலைந்துவிட்டதா? உற்றுப் பார்த்தான்... இல்லை! இலவம் பஞ்சு மெத்தையில் ஆழ்ந்த உறக்கத்தில்தான் இருந்தான். நள்ளிரவு மணி ஒன்று என்று காட்டியது கடிகாரம்.

விடிவதற்குள் வேலையை முடித்துவிட வேண்டும். ஆனந்த் எழுந்துவிட்டால் ஏகப்பட்ட கேள்விகள் கேட்பான்.

ஹோட்டல் அறை முழுக்க குளுமை படர்ந்திருந்தபோதும் ஃபாஸ்ட்டின் நெற்றிப் பொட்டு வியர்த்தது. அறையின் வலப்பக்க மூலையில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தான். அவன் முன்னால் இருந்த கண்ணாடி டீப்பாயின் மீது ஆசியாவின் வரைபடம் விரிக்கப்பட்டிருந்தது. நிமிர்ந்து நின்றிருந்த டேபிள் லேம்ப், அந்த ‘மேப்’பின் மீது மட்டும் ஒளியைப் பாய்ச்சியது. பாலகாப்ய மகரிஷி எழுதிய ‘கஜ சாஸ்திரம்’ நூலை வாசித்தபடியே அந்த வரைபடத்தில் சிவப்பு மையினால் கோடுகளை இழுக்க ஆரம்பித்தான்.

மகாபாரத காலகட்டத்தில் எந்தெந்த ராஜ்ஜியங்கள் எங்கெங்கு இருந்தன, அந்த நிலப்பரப்புகளில் என்னென்ன தானியங்கள் விளைந்தன, எந்த வகையான கனிமங்கள் அங்கு நீக்கமற கிடைத்தன... போன்ற விவரங்களை அந்த நூல் விளக்கியது. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல் என்பதால் பல இடங்கள் புரியவில்லை. அந்த சமயங்களில் பி.வி.ஜகதீச அய்யர் எழுதிய ‘புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்’ கட்டுரைத் தொகுப்பைப் படித்து தன் சந்தேகங்களை தெளிவு படுத்திக் கொண்டான். என்ன... இந்தப் புத்தகத்தின் நடையும் பாதி சமஸ்கிருதமும் மீதி தமிழுமாக இருக்கிறது. 1918ல் வெளியான புத்தகம் இல்லையா? அப்படித்தான் இருக்கும்.

ஒருவழியாக 56 தேசங்களையும் வரைபடத்தில் குறித்து முடித்தான். ஒவ்வொரு தேசத்தின் ஆளுகைக்கு உட்பட்டும் சில துணை தேசங்கள் இருந்தன. அவற்றை பச்சை மையினால் வட்டமிட்டான். இறுதியில் அந்த ‘மேப்’பை பார்த்த ஃபாஸ்ட்டுக்கு சில விஷயங்கள் புரிந்தன. புகழ்பெற்ற கோயில்கள் அனைத்தும் இந்த 56 தேசங்களுக்குள்தான் இருக்கின்றன. ஸோ, அங்கு செதுக்கப்பட்ட சிற்பங்கள்தான் பொக்கிஷம் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டும் ரகசியக் குறியீட்டுடன் இருக்க வேண்டும். அத்துடன், உலக நாகரிகங்களின் கவனத்தை ஈர்த்த அந்தக் கால பல்கலைக்கழகங்களும் இந்த 56க்குள்தான் உருவாகியிருந்தன.

நீல நிற மார்க்கரை எடுத்து நான்கு தேசங்கள் மீது சின்னதாக ஒரு புள்ளியை வைத்தான். அவை, இன்றைய இந்தியாவின் நிலப்பரப்பில் இல்லை. அவற்றில் ஒன்று சீன தேசம். தன்னைப் போலவே புதையலைத் தேடி வந்திருக்கும் சூ யென்னின் தாயகம். கண்களில் படர ஆரம்பித்த சிந்தையுடன் சோபாவை விட்டு எழுந்த ஃபாஸ்ட், குனிந்து டீப்பாயின் மீதிருந்த வரைபடத்தை உற்று நோக்கினான்.

கலிங்க தேசம் மட்டும் தனித்துத் தெரிந்தது. இன்றைய ஒடிசா. அங்கு ஏதோ இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அசோக சக்கரவர்த்தியும், பிறகு குலோத்துங்க சோழனும் அந்த நிலப்பரப்பை எரித்திருக்க மாட்டார்கள். கண்டுபிடிப்போம்...
வேலை முடிந்த திருப்தியுடன், சூ யென் இப்போது எங்கிருக்கிறான் என்று அறிய ஜிபிஎஸ் சிக்னலை பார்த்த ஃபாஸ்ட் சட்டென்று சிரித்துவிட்டான். காரணம், ஜெர்மனியில் இருக்கும் மூனிச் நகரில் சூ யென் இருப்பதாக அது தெரிவித்தது தான்.



‘‘ஒருவழியா ஃபாஸ்ட்டை ஏமாத்திட்ட...’’ - கேட்ட ரவிதாசனின் உதடுகளில் அலட்சியம் பூத்தது.
‘‘ம்...’’ - தலையசைத்த சூ யென், சுற்றிலும் பார்த்தான்.
‘‘சாஃப்ட்வேர் வழியா ஜிபிஎஸ்ஸை உன் லேப்டாப்புல ஃபாஸ்ட் இறக்கினான். அதை ஹேக்கர்ஸ் உதவியோட நீ திசை திருப்பிட்ட. நல்ல விஷயம்தான். இதுக்காகத்தான் கிளம்பறதுக்கு முன்னாடி உன் லேப்டாப்பை ஆன் பண்ணி, நெட் கனெக்ஷன் கொடுத்துட்டு வந்தியா?’’
‘‘ஆமா...’’
‘‘உடனே சந்தோஷத்துல துள்ளிக் குதிக்காத. பிரச்னையே இனிமேதான் ஆரம்பிக்கப் போகுது...’’
‘‘புரியலை...’’ - குழப்பத்துடன் ரவிதாசனை ஏறிட்டான் சூ யென்.
‘‘அமெரிக்காவையே கதி கலங்க வைக்கிற ஹேக்கர்ஸ் உங்க நாட்லதான் இருக்காங்க. இந்த விஷயம் ஃபாஸ்ட்டுக்கும் தெரியும். அப்படியிருந்தும் நீ எங்க போகிறேனு அவன் கண்காணிச்சிருக்கான். எதுக்குத் தெரியுமா..?’’

‘‘நான் யாரையெல்லாம் சந்திக்கிறேன்னு தெரிஞ்சுக்க...’’
‘‘அப்படி நம்பி ஏமாறாத...’’
‘‘என்ன சொல்றீங்க ரவிதாசன்?’’
‘‘உண்மையைச் சொல்றேன். எந்தப் பொக்கிஷத்தைத் தேடி நீ வந்திருக்கியோ, அதே புதையலை கைப்பற்றத்தான் அவனும் வந்திருக்கான். அப்படி வந்தவன் வெறும் உன் திட்டத்தை மட்டுமே நம்பியிருப்பான்னு கனவு காணாத. உன் உதவி இல்லாமலும் பொருளை எடுக்க அவனுக்கு தெரியும். இந்த ஜிபிஎஸ் விவகாரம் வெறும் கண் துடைப்புதான். ‘உன்னை மாதிரியே நானும் வந்திருக்கேன் பார்’னு உனக்கு சொடக்கு போட்டு தெரிவிச்சிருக்கான்...’’
‘‘ம்...’’

‘‘அநேகமா அவனோட டார்கெட், என் பையனா இருக்கணும். கன்றை வச்சு பசுவை பிடிக்க முயற்சிப்பான். அதை நான் சமாளிச்சுக்கறேன். பொழுது விடிஞ்சதும் மறக்காம ருத்ரனை போய்ப் பார்...’’
‘‘ருத்ரனா..?’’ - அதிர்ந்தான் சூ யென்.
‘‘எதுக்கு ஒண்ணுமே தெரியாத மாதிரி ரீயாக்ஷன் கொடுக்கற..?’’ - சிரித்த ரவிதாசன் தொடர்ந்தான். ‘‘எப்படி என்னை சந்திக்கச் சொல்லி பிட்சு உனக்கு கட்டளையிட்டாரோ, அப்படி ருத்ரனையும் அவர் பார்க்கச் சொல்லியிருப்பார். ஆயிரம் வருஷங்களா எங்க ரெண்டு பேருக்குமே பகை இருக்கு. இதுல குளிர்காய மூணாவது ஆள் நினைக்கறது இயல்புதான். தப்பா எல்லாம் நான் நினைக்க மாட்டேன்...’’
‘‘சாரி...’’

‘‘நண்பர்களுக்குள்ள எதுக்கு மன்னிப்பெல்லாம்? அது இருக்கட்டும்... புகையை ஆயுதமா பயன்படுத்தற சுவடியை என்கிட்ட கொடுக்கச் சொன்ன மாதிரி, ருத்ரன்கிட்டயும் எதையாவது தரச் சொல்லி பிட்சு தந்திருப்பாரே...’’
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சூ யென் நெளிந்தான்.

‘‘சொல்லக் கூடாதுன்னா விட்டுடு...’’
‘‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை! வந்து... இதைத்தான் கொடுக்கச் சொன்னார்’’ என்றபடி தன் பையிலிருந்த ஒரு சுவடியை சூ யென் எடுக்கவும், அந்த விபரீதம் நடக்கவும் சரியாக இருந்தது.

எந்த பாழடைந்த மண்டபத்தில் அவர்கள் இருவரும் அமர்ந்திருந்தார்களோ, எந்த ஆதித்ய கரிகாலன் கொலை செய்யப்பட்ட இடமாக அது கருதப்படுகிறதோ, அந்த மண்டபத்தின் தூணில் இருந்த விளக்கு சட்டென்று எரிய ஆரம்பித்தது.

சூ யென் நீட்டிய சுவடியை வாங்காமல் ரவிதாசன் எழுந்தான். விளக்கின் அருகில் சென்ற அவன் முகத்தில் திகைப்பு நிரம்பி வழிந்தது. திரி இல்லை. எண்ணெய் மருந்துக்கும் இல்லை. ஆனாலும் விளக்கு எரிந்தது.
‘‘வா... போகலாம்...’’ - சூ யென்னிடம் சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் ரவிதாசன் நடக்க ஆரம்பித்தான். சருகுகள் அவன் காலடியில் நசுங்கின.
‘‘பரமேஸ்வர பெருந்தச்சன்..?’’
‘‘வர மாட்டார்...’’
‘‘இந்த விளக்கு அதைத்தான் சொல்லுதா?’’ - கையில் சுவடியை ஏந்தியபடி திகைப்புடன் கேட்டான் சூ யென்.

‘‘அதை மட்டுமே உணர்த்தலை... ‘குந்தி’ தஞ்சாவூர் வந்துட்டா... இதையும் சேர்த்துத்தான் பரமேஸ்வர பெருந்தச்சன் நமக்குத் தெரியப்படுத்தியிருக்கார்...’’
‘‘எந்த குந்தி..?’’
‘‘குந்தி தேசத்தோட இப்போதைய இளவரசி. என்ன முழிக்கிற... இப்ப ராஜஸ்தான் இருக்கு பார்த்தியா, அதனோட ஒரு பகுதிதான் குருக்ஷேத்திரப் போர் நடந்த காலத்துல குந்தி தேசம். இந்த தேசத்தை சேர்ந்த எல்லா இளவரசிகளுக்குமே பேரு ‘குந்தி’தான்...’’
‘‘எதுக்காக இங்க வந்திருக்காங்க...’’
‘‘தெரியலை. அநேகமா ருத்ரன் வீட்லதான் தங்கியிருப்பாள்னு நினைக்கறேன். பாபநாசம் பக்கம் நல்லூர்ல இருக்கிற கோயில் குளத்துல மகாபாரத குந்தியோட சிற்பம் இருக்கு. அதை மட்டும் இந்த ‘குந்தி’ பார்த்துட்டாள்னா, உனக்கு பொக்கிஷம் கிடைக்காது!’’
‘‘ரவிதாசன்...’’

‘‘கத்தறதை நிறுத்திட்டு நடக்க வேண்டியதைப் பாரு... நான் வாக்கு தவற மாட்டேன். நிச்சயம் புதையல் உனக்குத்தான். அதுக்கு ஏற்பாடு செய்யத்தான் பரமேஸ்வர பெருந்தச்சன் நம்மை சந்திக்க வரலை. எங்க போயிருக்கார்னு கேட்காத. எனக்குத் தெரியாது. திட்டமிட்டபடி விடிஞ்சதும் ருத்ரன் வீட்டுக்கு போ... பிட்சு கொடுக்கச் சொன்ன சுவடியை கொடுத்துடு!’’
‘‘என்ன சுவடின்னு நீங்க பார்க்கலையே?’’
‘‘அவசியம் இல்லை. அதுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியும். ‘அக்னி சாஸ்த்ரா’. நெருப்பை ஆயுதமா எப்படி பயன்படுத்தணும்னு அதுல விளக்கப்பட்டிருக்கு... இதன்படி செய்தா யாரை வேண்டுமானாலும் எரிக்கலாம். எந்த வாகனத்தையும் பொசுக்கலாம்... அதிராஜேந்திரன் இறப்பு மாதிரி...’’ - சொன்ன ரவிதாசன், சூ யென்னின் தோளில் கை போட்டு இறுக அணைத்தபடி அவன் காதில் முணுமுணுத்தான்.

‘‘எனக்கு புகை... ருத்ரனுக்கு அக்னி... இரண்டும் சேர்ந்தா பிரளயம். பிட்சு பெரிய ஆள்தான்!’’

‘‘சொன்னது நினைவுல இருக்கட்டும். எப்பவும் போல ரவிதாசன் வீட்ல என்ன நடக்குதுன்னு கண்காணிச்சுக்கிட்டே வா...’’ - கோனாருக்கு உத்தரவு பிறப்பித்தபடியே பாழடைந்த மண்டபத்தை விட்டு வெளியே வந்தான் ருத்ரன். அதே மண்டபம்தான். ரவிதாசனும், சூ யென்னும் அமர்ந்து பேசிய அதே இடம்தான்.
‘‘சரிங்க ஐயா...’’
‘‘அவங்க ரெண்டு பேரும் என்ன பேசினாங்கன்னு கேட்டே இல்ல? நாம களத்துல இறங்க வேண்டிய நேரம் வந்தாச்சு. என்னோட அசைவுக்காக காத்திரு. கட்டளை வந்ததும் வேலையை முடிச்சுடு!’’
‘‘உத்தரவுங்க...’’
‘‘போயிட்டு வா!’’
ருத்ரனின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு கோனார் விடைபெற்றான். அவன் கண்ணைவிட்டு அகலும் வரை அங்கேயே நின்று கொண்டிருந்த ருத்ரன், ஒரு முடிவுடன் மண்டபத்தின் படிக்கட்டில் ஏறினான். சூ யென் அமர்ந்திருந்த இடத்தில் தானும் உட்கார்ந்தான். அந்த சீனன் எப்படி தன் பைக்குள் கையைவிட்டு சுவடியை எடுத்தானோ, அதே போல் செய்கையால் செய்தான். பிறகு தரையை கைகளால் துழாவினான்.

எதிர்பார்த்தது போலவே ஒரு சின்னப் பொருள் தட்டுப்பட்டது. சுவடியை எடுக்கும்போது, சூ யென்னின் பையிலிருந்து தவறி விழுந்த வஸ்து அது. எடுத்தான். பழங்கால நாணயம். அந்த நள்ளிரவிலும் அது ஒளிர்ந்தது. மனதில் ஏறிய பாரம் இறங்கியது போல் ருத்ரன் உணர்ந்தான். காரணம், அந்த நாணயத்தில் பொறிக்கப்பட்டிருந்த உருவம்தான்.

‘கோபி பாக்யா மதுவ்ரதா; சிருங்கிசோ தாதி சந்திகா; கால ஜீவிதா கடவா; கால ஹலா ரசந்தரா...’ என பொடி எழுத்துக்கள் வட்டமாக இருக்க, நடுவில் புல்லாங்குழலை ஊதிக் கொண்டிருந்தார் பகவான் கிருஷ்ணர்.
‘‘தாரா ஹியர்...’’
‘‘குட் மார்னிங். ஐ’ம் ஆதித்யா. ஏர்போர்ட்டுல உங்களை டிராப் பண்ண கார் கொண்டு வந்திருக்கேன்...’’
மணியைப் பார்த்தாள். ஆறு. புன்னகைத்தாள். ‘‘வந்துட்டேன்...’’ என்றபடி செல்போனை அணைத்துவிட்டு பையை எடுத்துக் கொண்டாள். எதையாவது விட்டுவிட்டோமா என்று கண்களால் அறையை அளந்தாள். பையைத் திறந்து அலசினாள். துணிகள், பைல்களுக்கு மத்தியில் விமலானந்தர் கொடுத்த ஸ்லோக பேப்பர். அதையொட்டி ஸ்படிக மேரு. அருகில் முதல் பார்சலில் வந்த பாண்டிய இளவரசி தொடர்பான செப்பேடு. கூடவே பரத்வாஜ மகரிஷி எழுதிய ‘விமானிகா சாஸ்த்ரா’ நூல்.

ஜிப்பை மூடி பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். அறைக் கதவை பூட்டினாள். விமானப் பயணம் என்பதால் வெண்மை கலந்த நீல நிற த்ரீ ஃபோர்த் ஜீன்சும், வெள்ளை பனியனும் அணிந்திருந்தாள்.
ஹாஸ்டல் வாசலில் ஆதித்யா காத்திருந்தான். அவனை நோக்கி வந்தபடியே கண்களால் ஸ்கேன் செய்தாள். முப்பதுக்குள் இருப்பான். கருமை தோய்ந்த நீலத்தில் ஜீன்ஸ். உடலோடு ஒட்டிய வெள்ளை பனியன். தினமும் உடற்பயிற்சி செய்வான் போலிருக்கிறது. உதட்டில் கருமை இல்லை. சிகரெட் பிடிக்காதவன். கண்கள் தீர்க்கமாக மின்னின. மதுவை வெறுப்பவன். வெண்பற்கள் பளீரிட புன்னகைக்கிறான். பான்பராக் போடா தவன். நோ ப்ராப்ளம். நம்பி செல்லலாம்.

‘‘போகலாமா?’’
‘‘யெஸ்...’’ - தாராவுக்கு வழிகாட்டியபடி சாலையில் நின்று கொண்டிருந்த காரை நோக்கி ஆதித்யா சென்றான். அப்போது -அவர்களை நோக்கி வேகமாக வந்த பிங்க் நிற கார் ஒன்று திடீரென பற்றி எரிய ஆரம்பித்தது. சட்டென்று தாராவின் கையைப் பிடித்து பின்னுக்கு இழுத்த ஆதித்யா, அப்படியே குனிந்தான். தடுமாறிய தாரா அவன் மீது விழுந்தாள்.
அதே நொடியில் எரிய ஆரம்பித்த கார் கதவைத் திறந்து டிரைவரும் குதித்தான். தலையில் பலத்த அடி. ஆதித்யாவை நோக்கி தன் கைகளை நீட்டியபடி அலற ஆரம்பித்தான்.
‘‘பழி வாங்கணும்... இதுக்கும் சேர்த்து நீங்க பழி வாங்கணும்... ராஜேந்திர சோழனோட பேரன் அதிராஜேந்திரன் நோய்வாய்ப்பட்டு சாகலை. அவனும் ஆதித்ய கரிகாலன் போலவே கொலை செய்யப்பட்டான். தமிழர்கள் யாருமே இதைப் பதிவு பண்ணலை. ஆனா, வடமொழியில இதுபத்தி எழுதியிருக்காங்க. இந்த கொலைக்குப் பிறகுதான் முதலாம் குலோத்துங்கன் சோழ அரியணை ஏறினான். ஆதித்யா... இந்தக் கொலைக்கும் சேர்த்து நீங்க பழி வாங்கணும்...’’
(தொடரும்)