கவிதைக்காரர்கள் வீதி





தவிப்பு

குழந்தை
விழுந்து எழும்பொழுது
தூக்க முடியாமல்
தவிக்கின்றது பொம்மை
- பே.மாரிசங்கர்,அம்பாசமுத்திரம்.

நிஜம்

குழந்தை இருந்தும்
களையிழந்துவிடுகிறது
பொம்மை இல்லாத வீடு
- பி.என்.ஜெய்சங்கர்,திருவாரூர்.

வருத்தம்

சுதந்திரமாய்
ஒரு அடி கூட
எடுத்து வைக்க முடியாததில்
வருத்தம் இருக்கக்கூடும்
சுதந்திர தேவி சிலைக்கு!
- வீ.விஷ்ணுகுமார்,கிருஷ்ணகிரி.

விருந்து

வீதியில்
குழந்தைகளின் பொம்மை கல்யாணம்
கூரைகளில் அமர்ந்து
காத்திருக்கின்றன காக்கைகள்
விருந்துக்காக!
- அ.சுகுமார், காட்டுக்கானூர்.

அப்பா

காலையில் எழுந்ததும்
பால் வாங்கி வரவும்
பிள்ளைகளை பள்ளியில் விட்டு
மாலை அழைத்து வரவும்
அவ்வப்போது அங்காடி சென்று
மளிகை வாங்கி வரவும்
யார் மீதோ உள்ள கோபத்தை
வெளிக் காட்டவும்
தனக்கு வரும் தொலைபேசி அழைப்புக்கு
இல்லை என பொய் சொல்லவும்
வெளியூர் செல்லும் நாட்களில்
வீட்டுக்கு காவல் இருக்கவும்
ஆள் இல்லையே என
அங்கலாய்த்துக் கொண்டான்,
முதியோர் இல்லத்தில் இருக்கும்
அப்பாவை நினைத்து!
- பொ.ராஜா, சாலைபுதூர்.