வேண்டுதல் : கே.ஆனந்தன்





கடவுளே... வரப் போற மாப்பிள்ளைக்கு பொண்ணைப் பிடிக்கணும்... பொண்ணுக்கும் மாப்பிள்ளையைப் பிடிக்கணும்... பேச்சுவார்த்தையும் சுமுகமாகி, இந்தக் கல்யாண ஏற்பாடு நல்லபடியா முடியணும்...’’
- நூற்றி ஏழாவது முறையாக கடவுளை வேண்டினார் கல்யாண சுந்தரம்.

சிவப்பு நிற பட்டுப் புடவையில் தேவதையாய் ஜொலித்தாள் விமலா. அப்போதே மாப்பிள்ளைக்கு கண்டிப்பாக விமலாவைப் பிடித்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்குப் பிறந்தது. மாப்பிள்ளை நல்ல வசதியான இடம். போட்டோவில் பார்க்க சற்றே சாயலில் அஜித் மாதிரி இருந்தார். பெண்ணுக்கு அவரைக் கண்டிப்பாகப் பிடிக்கும் என்று நம்பினார்.

மணி பத்தேகால் ஆனது. ‘பத்து மணிக்கே வருவதாய்ச் சொன்னவர்களை இன்னும் காணோமே...’ - தவிப்பாய் ஹாலுக்கும் வாசலுக்கும் நான்கு முறை நடந்துவிட்டார்.
ஐந்தாவது முறை வெளியே வந்து பார்த்தபோது மாப்பிள்ளை வீட்டாரின் கார் வாசலில் வந்து நின்றது. வாயெல்லாம் பல்லாகி அவர்களை வரவேற்றார். எதிர்பார்த்தபடியே மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் பரஸ்பரம் பிடித்துப் போக, வரும் முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை முடித்து விடலாம் என்று முடிவானது.

‘அப்பாடா... இப்போதுதான் நிம்மதி! கல்யாணம் நிச்சயமாயிருச்சு. ரெண்டு மாசமா எந்த வருமானமும் இல்லை. ஏதோ இந்த கமிஷனாவது கிடைச்சா வீட்டு வாடகை, மளிகைக் கடன், பால் பாக்கி, ஸ்கூல் ஃபீஸ் எல்லாம் கட்டிடலாம்!’

- சந்தோஷமாக கடவுளுக்கு நன்றி தெரிவித்தார் ஏழை கல்யாண புரோக்கர் சுந்தரம்.