லாபம் : வி.சகிதா முருகன்





ஜவுளிக்கடை கவுன்ட்டரில் கம்ப்யூட்டர் பில் போட்டுக் கொண்டிருந்த மணிவண்ணனை அழைத்தார் ஓனர் சரவணன்.
''இந்த ஐம்பதாயிரம் பணத்தை, ஸ்டேட் பாங்க்ல நம்ம கடை அக்கவுன்ட்ல கட்டிட்டு வந்திடு...’’
மணிவண்ணனின் கையில் பணக்கட்டை திணித்தபோது, சரவணனின் நண்பர் முருகேசன் கடைக்கு வந்தார்.

‘‘ஏன்டா சரவணா, வேலைக்குச் சேர்ந்து ஒரு மாசம் கூட ஆகாத புதுப்பையனை நம்பி ஐம்பதாயிரத்தைக் கொடுத்து அனுப்பறே... எடுத்துக்கிட்டு ஓடிட்டா என்னடா செய்வே?’’ என்றார் முருகேசன்.
‘‘ஓடுனா ஓடட்டும்... அதனால எனக்குத்தானே லாபம்!’’
‘‘என்னது... உன் பணத்தை எடுத்துக்கிட்டு வேலைக்காரன் ஓடுனா உனக்கு லாபமா? என்னடா சொல்றே?’’
‘‘ஆமாம், முருகேசா!
அவனை வேலைக்குச் சேர்க்கும்போதே அவங்க அப்பா, அம்மாகிட்ட அவனுக்கே தெரியாம ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் வாங்கி
யிருக்கேன். ஏ.சி காத்தை வாங்கிக்கிட்டு, கல்லாவுக்கு பக்கத்துல உக்காந்து பில் போடற நம்பிக்கையான வேலையாச்சே... நான் குடுக்குறதும் நல்ல சம்பளம்ங்கிறதால அவங்களும் மறு பேச்சு இல்லாம கொடுத்துட்டாங்க. இந்தப் பய
ஐம்பதாயிரத்த பார்த்ததும் சபலப்பட்டு ஓடிட்டான்னா எனக்கு ஐம்பதாயிரம் ரூபாய் லாபம்தானே’’ என்றான் சரவணன்.
‘‘நீ பொழைச்சுக்குவேடா!’’
என்றபடியே நடையைக் கட்டினார் முருகேசன்.