கட்டிபிடி : எஸ்.ராமன்





‘‘மச்சி, வேணா ம்டா... அந்தப் பொண்ணைப் பார்த்து கண்ணடிச்சது, பஸ்ஸுல ஏறி ஃபாலோ பண்னினது, உரசினதெல்லாம் கூட ஓகே. இப்ப அவ இடுப்பைக் குறிவச்சு கை நீட்டுறதெல்லாம் ஓவர். இப்ப சட்டம் கடுமையாயிடுச்சுடா’’ என்று நண்பர்கள் எச்சரித்தனர்.
மதன் கேட்கவில்லை.

‘‘நாம என்ன சாட்சி வச்சுக்கிட்டா சில்மிஷம் பண்ணப் போறோம். இதுக்கெல்லாம் பயந்தா, வாழ்க்கையை என்ஜாய் பண்ண முடியாதுடா!’’ என்றபடியே சற்று முன்னேறி, அந்த பெண்ணின் இடையைக் கிள்ளினான் மதன். சட்டென்று திரும்பிய அந்தப் பெண், மதனை இறுகக் கட்டிப் பிடித்தாள். அவ்வளவு எளிதாக வொர்க் அவுட் ஆகும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் பொது இடமாயிற்றே... ‘‘விடு’’ என்று அவன் திமிறியும் அவள் தன் பிடியைத் தளர்த்தவே இல்லை!
‘‘பொது இடங்களில் பெண்களிடம் சில்மிஷம் செய்பவர்களை கையும் களவுமாகப் பிடிக்கும் ரோபோ பெண்கள் இன்று முதல் நகரில் உலா வர ஆரம்பித்திருக்கின்றனர். அதன் மூலம் முதலாவதாக மதன் என்ற வாலிபர் பிடிபட்டுள்ளார்’’ - 2063ம் ஆண்டு, பிப்ரவரி 28 அன்று மாலை 7 மணி சன் செய்திகளில், மேற்கண்ட தலைப்புச் செய்தி பரபரத்தது.
லட்சக்கணக்கான பெண்கள், அந்தக் கட்டிப்பிடி ரோபோவுக்கு பலத்த ‘ஓ’ போட்டனர்.