சாயி





நான் இந்த பௌதீக உடலுடன் ஷீரடியில் மட்டுமே இருக்கிறேன் என்கிற எண்ணத்தை விட்டுவிடுங்கள். நான் எங்கும் வியாபித்திருக்கிறேன். என் வருகைக்கு எல்லைகள் இருக்க முடியாது. நீங்கள் என்னை நினைத்தவுடன், நான் அங்கு இருப்பேன்.
- பாபா மொழி

‘‘குழந்தாய், உனக்கு சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்’’ என்ற பாய்ஜாபாய், அதை அருகில் வைத்தாள். இளம் துறவி அதிலிருந்து கொஞ்சம் எடுத்துக்கொண்டு, பக்கத்தில் நின்றிருந்த நாய்களுக்கு மீதியைக் கொடுத்தான்.
‘‘நான் கொஞ்சமாகச் சாப்பிட்டேன் என்று உனக்குக் கோபமா தாயே?’’
‘‘இல்லையப்பா!’’
‘‘எனக்குத் தெரியும். உன் முகத்தைப் பார்த்தாலே புரிகிறது. அம்மா... இவ்வுலகில் நாய், பூனை என எல்லாமே கடவுளின் சிருஷ்டிகள். உயிர் எல்லாவற்றிற்கும் ஒன்றுதான். அவை திருப்தியுடன் சாப்பிட்டால் சரி...’’

‘‘உன் சூட்சுமம் எல்லாம் எனக்கு எங்கேயப்பா தெரியப் போகிறது? நான் வயதான கிராமத்துக் கிழவி. நீ சொன்னால் உண்மை இருக்கும். நான் உன்னை நம்புகிறேன்.’’
‘‘நீ சொன்னது லட்சம் பெறும். இந்த நம்பிக்கைதான் மகத்துவமானது. இதை மனிதர்கள் கடைபிடிக்காததால் துன்பத்தில் மூழ்குகிறார்கள். தாயே, ஒரு மனிதன் இன்னொருவன் மேல் நம்பிக்கை வைக்காமல் இருக்கும்போது, கடவுளின் மேல் எப்படி நம்பிக்கை வைப்பான்? மரம், பூமியின் மீது நம்பிக்கை வைப்பதால், அது விழாமல் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுகிறது. அதனால்தான் வானளாவ வளருகிறது. யாருக்கும் எதன் மீதும் நம்பிக்கை இல்லையென்றால் எப்படி வாழ்க்கையில் முன்னேற முடியும்? எனவே, மனிதர்கள் எறும்பு, கிருமிகள் போல, பூமியில் ஊர்ந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். நீ என் மேல் உறுதியான நம்பிக்கை வைத்ததால், உன்னை உயர்த்துவேன்! யாருக்கும் கிட்டாத பாக்கியத்தை உனக்கு அளிப்பேன்! பிரத்யட்சமாக ஆண்டவனின் தாயார் ஆவீர்கள். இப்படி கிட்டே வா தாயி...’’

பாய்ஜாபாயின் விகல்பமில்லாத மனசு குளிர்ந்தது. எழுந்து பாலயோகியின் கன்னத்தில் கை வைத்து அன்பினால் வருடி, ‘‘நீ ‘அம்மா’ என்றாயே, அதுவே போதும். என் ஜென்மம் ஈடேறியது. வேறொன்றும் எனக்கு வேண்டாம். நான் கிளம்புகிறேன்’’ என்றவாறே சாப்பாட்டுக் கூடையைத் தலையில் வைத்துக்கொண்டு புறப்பட்டாள். அவள் மனம் ஆனந்தத்தால் நிறைந்திருந்தது.



அந்த இளம் துறவி தன் பேச்சாலும் செயலாலும் எல்லோரையும் கவர்ந்துவிட்டான். பலர் அவன்மீது பைத்தியமானார்கள். சிலர் ‘யோகி’ என்றார்கள். சிலர் ‘கடவுளின் அவதாரம்’ என்று போற்றினார்கள். அவன் பகல் - இரவு பார்க்காமல் வேப்ப மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தான். சில சமயம் தொடர்ந்து நாலைந்து நாட்கள் மோனநிலையில் இருப்பான். எப்பொழுது விழித்திருப்பான் என்று சொல்ல முடியாது. விழித்ததும், சாப்பிட ஏக உபசாரங்கள் நடக்கும். ஜனங்களின் கேள்விகளுக்கு சில வேளைகளில் பதில் சொல்லுவான். நல்லவை சொல்லி உபதேசமும் செய்வான்.
ஒரு தடவை, அங்கிருந்து மாயமாகிவிட்டான். எங்கே தேடியும் இல்லை. பாய்ஜாபாய் தினமும் உணவு கொண்டுவந்து காத்திருந்ததுதான் மிச்சம். எப்படிக் காணாமல் போனானோ, அப்படியே ஒருநாள் திரும்பி வந்து தரிசனம் கொடுத்தான். எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள்!
ஒரு நாள் சிரித்தமுகத்துடன் இளம் துறவி உட்கார்ந்திருந்தான். சுற்றி கிராமவாசிகள் கூடியிருந்தார்கள். அவர்களின் கேள்விகளுக்கு கோபமடையாமல் பதில் அளித்தான்.
‘‘நீங்கள் யார்?’’ - வயதான ஒருவர் கேட்டார்.

‘‘இதற்கான பதிலை நான் ஒருமுறை சொல்லியிருக்கிறேனே... நான் அல்லாவின் அடிமை’’ - அவன் ஆகாயத்தைப் பார்த்துச் சொன்னான்.
‘‘அது சரி, நீ இந்துவா, முஸ்லிமா?’’
இளம் துறவி பெருமூச்சு விட்டான். மூக்கு ரோஜாப்பூ நிறமாகிவிட்டது.
‘‘பெரியவரே, உங்களுக்கு நான் எப்படித் தெரிகிறேன்? இந்துவாகவா, அல்லது முஸ்லிமாகவா?’’
‘‘எனக்கு முஸ்லிமாகத் தெரிகிறாய்...’’
‘‘அப்படியானால் நான் முஸ்லிம்தான்!’’
‘‘யா அல்லா... உன்னுடைய கருணை இப்படியே இருக்கட்டும்...’’ - அந்தப் பெரியவர் ஆகாயத்தை நோக்கிச் சொன்னார். சந்தோஷத்தில் அவர் முகம் மலர்ந்தது.
கூட்டத்தினரிடையே இருந்த இந்துக்களுக்கு இதைக் கேட்டு மன உளைச்சல். அவர்களின் முகவாட்டத்தைக் கண்ட பாலயோகி சிரித்துக்கொண்டே, ‘‘சதாசிவம், நான் ஒன்று கேட்கட்டுமா?’’ என்றான்.
‘‘கேளப்பா, பாலகனே...’’
‘‘நான் உனக்கு எப்படித் தெரிகிறேன்?’’

‘‘உண்மையைச் சொன்னால், நீ எங்களுக்கு இந்துவாகத் தெரிகிறாய். இந்தப் பெரியவருக்கு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருங்கள், கவலை இல்லை. நீங்கள் இந்துதான்!’’
‘‘உங்கள் கண்களுக்கு நான் இந்துவாகத் தெரிந்தால், நான் இந்துதான்!’’
இரு மதத்தவர்களும் ஒன்றும் புரியாமல் வேதனையடைந்தார்கள். ஆளாளுக்குக் கேள்விக் கணைகள் தொடுத்தனர்.
‘‘தயவுசெய்து சொல்லுங்கள். நீங்கள் யார்? இந்துவா, முஸ்லிமா?’’
பாலயோகி சிரித்தான். ‘‘அமைதி... அமைதி... எல்லோரும் உட்காருங்கள். இந்துக்களுக்கு நான் இந்து. முஸ்லிம்களுக்கு முஸ்லிம். இதில் ஆட்சேபிக்க என்ன இருக்கிறது?’’
‘‘குழந்தாய், உண்மையில் நீ யார் என்பதை, உன் வாயாலே சொல்லு. நீ இந்துவாக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் எங்களுக்கு ஒரு வித்தியாசமும் இல்லை. உன்மேல் எங்கள் எல்லோருக்கும் பக்தி இருக்கிறது. அது தொடரும்...’’ என்றார் ஒரு முஸ்லிம் பெரியவர்.
‘‘இந்தப் பிரச்னை உங்களுக்குத் தீராத தலைவலி. உங்கள் நோக்கில் பார்த்தால் ரொம்ப விலைமதிப்புள்ளது. என்னுடைய பார்வையில் இது ஒன்றுமே இல்லை. ஆனால், மனிதனை எந்த நோக்கில் பார்க்க வேண்டும் என்பதை அறிய வேண்டும். இந்தப் பிரச்னைக்கான பதிலை என் தாய் சொல்வாள்...’’ என்ற பாலயோகி, பாய்ஜாபாயைப் பார்த்து ‘‘தாயீ, நீ இந்தச் சர்ச்சையைக் கேட்டுக்கொண்டிருந்தாய் அல்லவா... நீ சொல். நான் இந்துவா, முஸ்லிமா?’’ என்றான்.

‘‘குழந்தாய், அது எனக்குத் தெரியாது. எனக்கு அதைக் குறித்துக் கவலையும் இல்லை. நீ ஒரு குழந்தை... நான் உன் அம்மா. நீ இந்துவாக இருந்தால் என்ன, முஸ்லிமாக இருந்தால் என்ன... எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை!’’
‘‘கேட்டீர்களா... இதுதான் இப்பிரச்னைக்கு பதில். என் தாய், மதத்தின் நோக்கில் என்னைப் பார்க்கவில்லை. வியாபாரி வெல்லம் கொடுக்கும்போது அதை ஒரு காகிதத்தில் சுருட்டித்தானே கொடுக்கிறான். நீங்கள் மனிதனை மதம் என்னும் காகிதத்தில் சுருட்டி வைத்திருக்கிறீர்கள். வெல்லம் சிறந்ததா, காகிதம் சிறந்ததா? காகிதம் குப்பைத் தொட்டிக்குத்தான் போகிறது இல்லையா? உங்கள் எல்லோருடைய எண்ணமும் அந்தக் காகிதத்தைச் சுற்றித்தான் சுழலுகிறது. எது ருசி உள்ளதோ, எது உபயோகமானதோ, அந்த வெல்லத்தை எப்பொழுது சாப்பிடப் போகிறீர்கள்?
பூவின் மணம் மகத்தானது; காரணம், பூ ஒரு நாள்தான் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மறுநாள் வாடிவிடும். ஆனால் அதனுடைய மணம் மட்டும் சாஸ்வதமானது. குரலைவிட, அதிலிருந்து கிளம்பும் சங்கீதம்தான் மகத்தானது! கண்ணைவிட, அதிலிருந்து கிடைக்கும் ஒளி மகத்தானது. அதனால் நமக்குப் பார்வை கிடைக்கிறது. இந்த தேகம், எந்த மதத்தைச் சேர்ந்த தாய் - தந்தையிடமிருந்து வந்தது என்பது முக்கியமல்ல. இந்த தேகத்தின் உள்ளேயிருக்கும் சலனமற்ற மனசுதான் முக்கியமானது. நீங்கள் புத்திசாலிகள், எனவே மதத்தைப் பற்றி சர்ச்சையிடுகிறீர்கள். என் தாய் உங்களைவிட புத்திசாலி. அவள் மனிதனை மனிதனாகப் பார்க்கிறாள். அவனுள் உறையும் கடவுளைப் பார்க்கிறாள். நீங்களும் மனிதனை இதே நோக்கில் பாருங்கள். அப்படிச் செய்தால் நீங்கள் வாழும் வாழ்க்கைக்கு பலன் கிடைக்கும்.’’

எல்லோரும் ஒருவித திருப்தியுடன் கலைந்தார்கள்.
இளந்துறவி ஒரு சமயம் சேர்ந்தாற்போல் எட்டு நாட்களுக்கு ஆடாமல் அசையாமல் தவம் இருந்தான். எந்தச் சூழ்நிலையும் அவனைப் பாதிக்கவில்லை. ஒன்பதாவது நாள் நிஷ்டையிலிருந்து கலைந்தான்.
அப்பொழுது ஒரு ஆச்சரியமான நிகழ்ச்சி நடந்தது. எல்லோரும் வேப்பமரத்தடியில் கூடியிருந்தார்கள். பீமா என்பவனுக்கு சாமி வந்துவிட்டது. கை, கால்கள் நடுங்கின... ஒரு நிலையில் நிற்காமல் சுற்றிச் சுற்றி வந்தான். சதாசிவம் அவன் அருகில் வந்தான்.
‘‘நீ யார்?’’
‘‘கடவுள்’’
‘‘எந்தக் கடவுள்?’’
‘‘கண்டோபா... கண்டோபா...’’
அது அந்த கிராம தேவதையின் பெயர். அதைக் கேட்டதும் எல்லோரும் கும்பிட்டார்கள். சதாசிவமும் குனிந்து வணங்கினான்.
‘‘உங்கள் மனதில் இருக்கும் சந்தேகத்தைத் தீர்க்க வந்திருக்கிறேன்...’’
‘‘நீங்கள் வந்தது நல்லதாயிற்று. இந்த பாலயோகியைப் பற்றி சொல்லுங்கள் கடவுளே! எந்த பாக்கியவானின் குழந்தை இவன்? இங்கு எவ்வளவு நாட்கள் இருப்பான்? எங்கிருந்து வந்தான்? கடவுளே, நீதான் இப்பையனின் சரித்திரத்தை சொல்ல வேண்டும்.’’

‘‘சொல்கிறேன்... சொல்கிறேன்... முதலில் நான் சொல்வதைச் செய்யுங்கள்...’’ - பீமாவின் உடலிலிருந்து கண்டோபா பேசலானார். எல்லோரும் காதைத் தீட்டிக் கொண்டு கேட்க ஆயத்தமானார்கள்.
‘‘போய் ஒரு மண்வெட்டி கொண்டு வாருங்கள். அந்த இடத்தைக் கொத்திக் காட்டுகிறேன், அவன் எந்த இடத்திலிருந்து வந்திருக்கிறான் என்று!’’
அருகிலிருந்த வீட்டுக்காரன் மண்வெட்டி கொண்டு வந்தான். வேப்பமரத்தின் அடிப்பாகத்தைக் காண்பித்த பீமா, ‘‘இங்கே நிதானமாகத் தோண்டுங்கள். உள்ளே அதிசயம் காத்திருக்கிறது. அவசரமோ, பரபரப்போ வேண்டாம். கவனத்துடன் தோண்டுங்கள்’’ எனக் கட்டளையிட்டான்.

வேப்பமரத்தின் அடியில் நாலைந்துபேர் மண்வெட்டியால் ஆழமாகத் தோண்டும்போது உள்ளே மண் சரிந்தது. மண்ணை எல்லாம் அள்ளிப் போட்டுவிட்டு பார்த்தால், உள்ளே செங்கல் சுவர் தட்டுப்பட்டது. ‘‘மெல்ல செங்கல் சுவரை அப்புறப்படுத்துங்கள்!’’ என்றான் பீமா. கவனமாக செங்கல்லை எல்லாம் பெயர்த்தால், உள்ளே ஒரு சமாதி காணப்பட்டது. அதைவிட ஆச்சரியம்... சமாதியைச் சுற்றி நான்கு பக்கமும் அகல் விளக்குகள் மந்தகாசமாக எரிந்துகொண்டிருந்தன. அந்த விளக்குகளின் ஒளியில் சமாதி நன்கு தெரிந்தது!
(தொடரும்...)

தமிழகத்தில் சாயி : ஊஞ்சல் விளக்கில் தாலாட்டு!

சென்னை அம்பத்தூர்-புழல் நெடுஞ்சாலையில் உள்ள கமலாபுரம் பகுதியில் வசித்த வயதான பெண்மணி ஒருவர், தன் இடத்தை விற்க முயன்றார். ஆனால் எவரும் வாங்க வரவில்லை. காரணமும் அவருக்குப் புரியவில்லை. தற்போது மோதி பாபா என அழைக்கப்படுகிற செல்வகுமாரின் தந்தையிடம் அந்தப் பெண் உதவி கேட்டார். சாயி பாபாவின் சீடரான அவர், சாயி இந்த இடத்துக்கு வர விரும்புவதைக் கண்டறிந்தார். சாயி ஈஸ்வர பக்த சமாஜத்தால் நிர்வகிக்கப்படும் தற்போதுள்ள ஆலயத்துக்கு 2004ல் பூமிபூஜை நடந்தது. அப்போது அங்கு வந்த நாகப்பாம்பு ஒன்று, பாபா அவதரித்த பிறகும் சிலநாள் ஆலயத்தின் உள்ளேயே அவர் அருகில் இருந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளித்ததாகச் சொல்கிறார்கள்.

சாயி அவதாரத் திருநாளான ராமநவமி, குருபூர்ணிமா, விஜயதசமி நாட்களுடன் ஆலயம் அமைந்த நாளான ஆகஸ்டு 21ம் தேதியும் இங்கு விசேஷம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நாட்களில் கூடுகின்றனர். வியாழன்தோறும் முழுநேர அன்னதானம் நடக்கிறது. தினமும் காலை 6 முதல் 12; மாலை 4.30 - 9 மணி வரை ஆலயம் திறந்திருக்கிறது. இரவில் ஊஞ்சல் விளக்கேற்றிய பின்னரே சாயி துயில் கொள்ளச் செல்கிறார். ஆலயத் தொடர்புக்கு: 044-26581800
(வாசகர்கள் தங்கள் பகுதி சாயி ஆலயம்
பற்றி எங்களுக்கு எழுதலாம்)

ஒரு மனிதன் இன்னொருவன் மேல் நம்பிக்கை வைக்காமல் இருக்கும்போது, கடவுளின் மேல் எப்படி நம்பிக்கை வைப்பான்? யாருக்கும் எதன் மீதும் நம்பிக்கை இல்லையென்றால் எப்படி முன்னேற முடியும்?