இலை மனிதர்களின் போராட்டம்!





ராமாயணம், மகாபாரதம், இலியட், ஒடிசி என உலகெங்கும் காப்பியங்கள் சொல்வது ஒரு விஷயத்தைத்தான்... ‘வரலாறு என்பது நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம்!’ சிலருக்கு வாழ்க்கையே இப்படியான போராட்டமாக மாறிவிடுகிறது. ஆதிவாசிகள் அப்படி சபிக்கப்பட்டவர்கள்தான். வனங்களைப் புனிதமாகக் கருதி, அந்த வளங்களைக் காக்கும் வாழ்க்கை அவர்களுடையது. எங்கோ ஒரு ஆதிவாசி பாதுகாக்கும் ஒரு மரம்தான், நம் கொல்லைப்புறக் கிணற்றுக்கு மழைவழியே தண்ணீர் கொண்டு வருகிறது. தீயவர்களிடமிருந்து புனித வனங்களைக் காக்க அவர்கள் நடத்தும் போராட்டம் எத்தனை பேருக்குத் தெரியும்? இதை ஃபேன்டஸியாக குழந்தைகளுக்குச் சொல்ல வருகிறது 3டி அனிமேஷன் படம் ‘எபிக்’.

 வனத்தைக் காக்கும் ஒரு போர்வீரர் படை பற்றி ஆராய்ச்சி செய்கிறார் பேராசிரியர் போம்பா. இதற்காக தனது 17 வயது மகள் மேரி கேத்ரீனுடன் ஒரு காட்டுக்கு வருகிறார். மரங்களுக்கு இடையே ஒரு கேபினில் தங்கியிருக்கிறார்கள். தினமும் காட்டுக்குள் போய் ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர், மாலையில் திரும்பி விடுவார். ஒருநாள் அவர் திரும்பி வரவில்லை. தந்தையைத் தேடிப் போகிறாள் கேத்ரீன். கூடவே அவளது செல்ல நாயும்!



பல மணி நேரம் காட்டுக்குள் அலைந்தபிறகு ஒரு இடத்தில், நட்சத்திரங்கள் போல ஒளிர்ந்தபடி மரங்களிலிருந்து உதிரும் இலைகளைப் பார்க்கிறாள் அவள். அவளுக்குள் இருக்கும் குழந்தைமை விழித்துக்கொள்ள, ஒரு மின்மினிப் பூச்சியை அபகரிக்கும் உற்சாகத்துடன் ஓடிப் போய் ஒரு இலையைப் பிடிக்கிறாள். அடுத்த நொடியே அவள் குள்ளமாகி விடுகிறாள்.
மினியேச்சர் உருவத்தை அடைந்தபிறகுதான் அவளுக்கு ஒரு உண்மை புரிகிறது. ‘இலை மனிதர்கள்’ என சொல்லப்படும் ஒரு மினியேச்சர் படையே அங்கு இருக்கிறது. அவர்கள் அந்த வனத்தைக் காக்கும் போர்வீரர்கள். எதிரிகள் அவர்கள்மீது படையெடுத்து வர, அவர்களை அழிக்கும் போரில் இலை மனிதர்களுக்கு உதவுகிறாள் அவள். இந்தப் போரினூடே, தான் வீட்டுக்குத் திரும்பவும் வழி தேடுகிறாள்.

வில்லியம் ஜாய்ஸ் எழுதிய ‘  The Leaf Men and the Brave Good Bugs’   என்ற குழந்தைகள் நூலிலிருந்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அவர்தான் இந்தப் படத்துக்குத் திரைக்கதை எழுதி, புரொடக்ஷன் டிசைனராகப் பணிபுரிந்திருக்கிறார். ‘‘எல்லோருக்கும் ‘ஸ்டார் வார்ஸ்’ போன்ற சாகசத்தையும், ‘அவதார்’ போன்ற புது உலக அனுபவத்தையும் படம் தரும்’’ என்கிறார் ஜாய்ஸ்.
- ரசிகன்