விழிகளால் இழைக்கும் ஓவியம்





என்னதான் நவீன தொழில்நுட்பங்கள் வாய்த்தாலும், ஒரு புகைப்படத்தின் ஆயுளைத் தீர்மானிப்பது அதன் கலைத்தன்மைதான். காலத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்து தன்னை மேம்படுத்திக் கொள்ளும் புகைப்படக்காரனே காலம் கடந்தும் தன் படைப்போடு வாழ்கிறான்’’ - தீர்க்கமாகப் பேசுகிறார் பொன்னுசாமி. புகைப்படத்துறையில் பல்வேறு முன்முயற்சிகளைத் தொடங்கிவைத்த இவருக்கு ‘கே.பி’, ‘காரமடை’ பொன்னுசாமி, ‘கலர்’ பொன்னுசாமி, ‘வாத்தியார்’ பொன்னுசாமி என்று பல பெயர்கள் உண்டு. ‘ஆர்ட் போட்டோ கிராபி’யின் முன்னோடி இவர்.

புகைப்படத்தை ஓவியமாக காட்சிப்படுத்தும் நுட்பம்தான் ‘ஆர்ட் போட்டோகிராபி’. ஒளி, கோணம், கற்பனை மூன்றுமே இதன் அடிப்படை. பறவை சிறகு விரிப்பதும், ஒரு பெண் வான் பார்த்து ரசிப்பதும், ஒரு மரம் இலையுதிர்த்து நிர்வாணம் தரிப்பதும், ஒரு சிலை கைவணங்கி நிற்பதும் செயற்கையற்ற வண்ண ஓவியங்களாகக் காட்சியாகின்றன பொன்னுசாமியின் கேமராவில்.

‘‘வாழ்க்கையைப் பாருங்கள், உலகத்தைப் பாருங்கள், தூரத்தில் உள்ள பொருட்களைப் பாருங்கள், கண்ணுக்குத் தெரியாத துகள்களையும் பாருங்கள், உங்களின் கண்களால் பிறரையும் பார்க்கச் செய்யுங்கள் என்று போட்டோகிராபிக்கு மேலைநாட்டுக் கலைஞர்கள் இலக்கணம் சொல்கிறார்கள். பூடகம் தவிர்த்து, நேரடியாகச் சொல்வதென்றால், ‘ஒரு போட்டோவைப் பார்த்தால் அடுத்த சில நிமிடங்கள் விழிகளை நகர்த்தக் கூடாது. அடுத்த அரை மணி நேரம் அந்த பாதிப்பு மனதை விட்டு அகலக் கூடாது’.



ஒரு காட்சிக்கு பல கோணங்கள் உண்டு. ஒரு பூ, ஒரு கோணத்தில் சக்கரம் போலத் தெரியும். இன்னொரு கோணத்தில் நட்சத்திரமாகத் தெரியும். இன்னொரு கோணத்தில் சூரியனாகத் தெரியும். அந்த உணர்வை புகைப்படத்துக்குள் கொண்டு வரவேண்டும். அதுதான் ஆர்ட் போட்டோகிராபி.  

அண்மைக்கால டிஜிட்டல் தொழில்நுட்பம், கற்பனைத் திறனுக்கு சவாலை உருவாக்குகிறது. கேமராவின் ஆப்ஷன் மோடுகளில் காட்டுகிற வேட்கையை கற்பனையில் காட்டாதவர்கள் தோற்றுப்போகிறார்கள். இயற்கைதான் இறுதியில் ஜெயிக்கிறது’’ என்கிற பொன்னுசாமி, கோவையைச் சேர்ந்தவர். தற்போது பெங்களூருவில் வசிக்கிறார்.

‘‘கடவுளைக் கண்டவர்கள் அதைப்பற்றி சொல்ல மாட்டார்கள். கடவுளைப் பற்றிச் சொல்பவர்கள் அவரைக் கண்டிருக்க மாட்டார்கள்’னு ஒரு ஸ்லோகன் உண்டு. அது போட்டோகிராபிக்கும் பொருந்தும். ஒரு புகைப்படக்காரர் மற்றவரை அங்கீகரிக்கிறதில்லை. தங்களுக்குத் தெரிந்த கலையை கத்துக் கொடுக்கவும் விரும்ப மாட்டார்கள். ஆனால் என் காலத்தில் நல்ல மனிதர்கள் இருந்தார்கள். அப்போது சென்னையில் ‘மெட்ராஸ் அமெச்சூர் போட்டோகிராபி சொசைட்டி’ன்னு ஒரு அமைப்பு இருந்தது. ஏ.அருணாச்சலம், தாமோதர தாஸ், சங்கர்லால் தவாய், ஏ.எம்.உசேன் உள்பட பல கலைஞர்கள் அதில் உறுப்பினராக இருந்தார்கள். தாயுணர்வோடு சொல்லித் தருவார்கள். போலீஸ் போட்டோகிராபர் ஆனேன். ஃபாரன்சிக் டிபார்ட்மென்ட் தொடங்கியதும் அங்கே மாறுதலாகி வேலை செய்தேன்.



நல்ல சம்பளம், இதர வசதிகள் இருந்தும் அங்கே கிரியேட்டிவிட்டிக்கு இடமில்லை. அதனால் அந்த வேலையை விட்டுவிட்டு பல புகைப்பட நிறுவனங்களில் டெக்னிக்கல் கன்சல்டன்ட், புரோகிராமர், அட்வைசர் என்று பல பொறுப்புகளில் இருந்தேன். 70-75களில் கலர் ஃபிலிம் டெக்னாலஜி வந்தபோது, அதைப் பற்றி புரிதலுள்ள நான்கைந்து போட்டோகிராபர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். இந்தியா முழுவதும் போய் பயிலரங்குகள் நடத்தினேன். அதனால் என்னை ‘கலர்’ பொன்னுசாமி என்றார்கள்.

இன்று புகைப்படத்துறை மிகப்பெரும் மாற்றங்களை எதிர்கொண்டிருக்கிறது. ஆர்வமும் திறமையும் கொண்ட இளைஞர்கள் உள்ளே வருகிறார்கள். பிரமாண்டமாக சாதிக்கிறார்கள். உலக அளவில் பெயர் பெற்ற போட்டோகிராபர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது...’’ - நெகிழ்கிறார் பொன்னுசாமி.

முதன்முதலில் உருவாக்கப்பட்ட மண்டகப்பட்டு குகைக்கோயில் முதல், அஜந்தா, எல்லோரா வரை இந்தியக் கோயில் கட்டுமானக் கலை வளர்ச்சி பற்றி விரிவான புகைப்படத் தொகுப்பை உருவாக்கி உலகெங்கும் கண்காட்சி நடத்தி வருகிறார் பொன்னுசாமி.
- வெ.நீலகண்டன்