காசு பணம் துட்டு மணி... மணி...





காலை எழுந்தவுடன் மியூசிக், பின்பு கொளுத்தும் வெயிலில் கொடிய ஸ்விம்மிங், மாலை முழுதும் கம்ப்யூட்டர், இருட்டும் வரை ஹேண்ட் ரைட்டிங் என பாரதியார் டைம்டேபிளையும் தாண்டி நம் குழந்தைகளை படுத்தி எடுக்கின்றன சம்மர் கேம்ப்புகள். ‘‘ஸ்கூல் இருந்தால் நாலு மணிக்கு வீட்டுக்கு வந்துடலாம். சம்மர் வீவுல அதுகூட முடியல’’ என்று மைனர் சிட்டிசன்களின் மைண்ட் வாய்ஸ் தமிழகம் முழுதும் எதிரொலிக்கிறது. இந்தக் கொடுமை போதாதென்று சமீபத்தில் சிலர் சம்மர் கேம்ப் உலகில் பல புதுமைகளைப் புகுத்துவதற்காக காட்டேஜே போட்டு காட்டுத்தனமாய் யோசிக்கின்றனர். அதன் விளைவாக முளைத்திருக்கும் சில வினோத கேம்ப்களுக்கு விசிட் அடித்தோம்...

நிஜமாகவே இப்படிப்பட்ட சம்மர் கோர்ஸ்கள் ஆளுமைத்திறனை வளர்க்குமா? ‘பாதை’ என்ற பெயரில் பள்ளிச் சிறுவர், சிறுமியர் நல அமைப்பை நடத்திவரும் அமலிடம் பேசினோம்...

‘‘குழந்தைகளின் ஆளுமைத் திறனை வளர்க்க வேண்டுமா என்பதிலேயே பல மாற்றுக் கருத்துகள் உள்ளன. குழந்தைகளிடம் நாம் செயற்கையாக உட்செலுத்தும் தன்னம்பிக்கை, லட்சிய வெறி... இவையெல்லாம் ஆபத்தாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. சாதிக்க வேண்டும் என்று புடம் போட்டு வளர்க்கப்படும் குழந்தையால், ஒரு சின்ன தோல்வியைக் கூட தாங்கிக்கொள்ள முடியாமல் போகும். அதன் விளைவு ஆபத்தானது. அப்படிப்பட்ட உதாரணங்கள் இங்கு நிறைய!

இங்கு நடத்தப்படும் விநோதமான சம்மர் கோர்ஸ்கள் அதை நடத்துபவர்களின் கற்பனைத் திறனையும் மார்க்கெட்டிங் திறமையையும் வெளிப்படுத்துவதாக உள்ளனவே தவிர, அவை குழந்தைகளின் ஆளுமைத் திறனை வளர்க்குமா என்பதும் கேள்விக்குறிதான். குழந்தைகளைத் தனித்து இயங்க விட்டாலே அவர்களின் தன்னம்பிக்கை இயல்பாக மெருகேறும். செயற்கையாக நாம் இப்படி சின்னச் சின்ன விஷயங்களையும் கட்டாயப்படுத்தி செய்ய வைக்கும்போது, வாழ்வில் சின்னச்சின்ன விஷயங்களைக் கூட பாடம் போல நினைத்துப் பதறும் நிலைதான் ஏற்படும்!
பர்சனாலிட்டி டெவலப்மென்ட், ஸ்கில் டெவலப்மென்ட் என்றெல்லாம் பெயர் வைத்து சிலர் கோச்சிங் கிளாஸ் நடத்துகிறார்கள். பெயரைப் பார்த்துவிட்டு, ‘இவை ஆங்கில கலாசாரத்தோடு தொடர்புடையவை. நம் பிள்ளைகள் ஆங்கில கலாசாரத்தோடு தொடர்புடைய எல்லா விஷயங்களையும் கற்றுக்கொள்வார்கள்’ என்ற மாயை பெற்றோர்களுக்கு உள்ளது. குடும்பம், உறவுகள், அக்கம்பக்கத்தினரிடம் நாம் பழகும் விதத்தைப் பொறுத்தே நம் பர்சனாலிட்டி டெவலப் ஆகிறது. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டியுடன் சுமுகமாகவும் சமூக ஒழுக்கத்துடனும் பழகுவதுதானே ஒரு மனிதனின் பர்சனாலிட்டியை வளர்க்கும். குடும்பத்தில் இருந்து குழந்தையை பிரித்துக் கூட்டிப் போய், ஒரு சிறு குழுவினர் மத்தியில் பேசப் பழக்குவது எப்படி அவர்களின் நடத்தையில் மாற்றங்களைக் கொண்டு வரும்? கல்வி கற்கும் சூழலில் இது போன்ற ஆளுமைகளை வளர்க்கும் பாடத்திட்டங்கள் இல்லாததால்தான் இதுபோன்ற வகுப்புகளை நடத்தி காசு பார்க்கின்றனர் பலர். இந்த சம்மர் பர்சனாலிட்டி வகுப்புகளும் ஒருவனை எஜமானாக ஆக்குவது பற்றியே கற்றுக்கொடுக்கின்றன. சமூகத்தோடு இணைந்து வாழவும், பகிர்ந்துகொண்டு கூட்டு வாழ்க்கை வாழவும் இவை கற்றுக்கொடுப்பதில்லை. எல்லோருமே எஜமானராகிவிட்டால் யார்தான் உழைப்பது?’’ என்று கேட்கிறார் அமல்.

அண்ணாமலை ஸ்டைல் அட்ராசிட்டி
பசு மாட்டை ஏமாற்ற கன்னுக்குட்டி போன்ற பொம்மை செய்து வைப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் இங்கே முழு மாடே பொம்மைதான். மாட்டின் மடியில் நிஜத்தைப் போலவே மென்மையாக ரப்பரில் செய்த காம்புகள். ‘பெண்ட் யுவர் தம்ப்ஸ்... அண்ட் புல் இட் ஜென்ட்லி’ என ஆசிரியரிடமிருந்து ஆங்கிலத்தில் பறக்கிறது கட்டளை. கேட்டால், இது பால் கறக்கச் சொல்லித் தரும் சம்மர் கோர்ஸாம். நிஜமான மாடு முட்டுமே என்றால், ‘‘அதுக்குத்தானே நாங்க பொம்மையை வச்சிருக்கோம்’’ என்கிறார்கள் கூலாக. இங்கு பால் கறக்கக் கற்றுக்கொண்டு யாரும் ஆட்டுக்குட்டியிடம் கூட பால் கறந்துவிட முடியாது. பிற்காலத்தில் பால் பண்ணை வைத்து ஆவினுக்கு போட்டியாக அட்டகாசம் செய்யவும் முடியாது. அப்புறம் இது ஏன்? நாம் தினமும் பயன்படுத்தும் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எங்கிருந்து வருகின்றன என்று அறிவதே அவர்களின் தன்னம்பிக்கைக்கு தண்ணீர் ஊற்றி உரம் போடுமாம். பால் கறக்கப்படுகிறதோ இல்லையோ... பெற்றவர்களிடமிருந்து பணம்... ம்ம்!

வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு

‘‘பெண்கள் விண்வெளிக்குப் போகிறார்கள்... விம்பிள்டன் வெல்கிறார்கள்’’ என்று சிலர் பிற்போக்குத்தனமாய் கத்திக் கொண்டிருக்க, ‘‘முதலில் உங்க பொண்ணுக்கு காய்கறி வெட்டத் தெரியுமா’’ என்று கேட்டு காசை அள்ளுகிறார்கள் இவர்கள். எஸ், காய்கறி நறுக்க பயிற்சி தந்து, பிள்ளைகளை அம்மாக்களுக்கு நல்ல அஸிஸ்டென்ட் ஆக்குவதே இந்த சம்மர் கோர்ஸின் நோக்கம். பாத்திரம் கழுவுவது, வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வது, ஸ்டவ் பற்ற வைப்பது என்று கிடைத்தற்கரிய பல பயிற்சிகள் இதனோடு டாப் அப்!
இந்த கோர்ஸுக்கு பல தாய்மார்கள் தங்கள் பையன்களையும் அனுப்பி வைத்திருந்தது, ஃபேன் விளம்பரத்தில் வருவது போல ‘காலம் மாறுவதை’ நமக்குக் காட்டியது.