ஐ.ஏ.எஸ் வெற்றித் தமிழர்கள்!





சுமார் ஆயிரம் பதவிகளுக்கு கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் போட்டியிட்ட சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகம் வெயிட் காட்டியிருக்கிறது. ஆம், தேர்வானவர்கள் எண்ணிக்கையில் உ.பிக்கு அடுத்து நமக்கு இரண்டாமிடம். டாப் டென் வரிசையில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பிரிலிமினரியில் மாற்றம் கொண்டு வரப்பட்ட பின் நடந்த இரண்டாவது தேர்வில் அசத்தலான சாதனையை அசால்ட்டாக நிகழ்த்தியிருக்கும் தமிழர்கள் சிலரிடம் பேசினோம்...
டாக்டர் கையில் நிர்வாகம்!
பிரபுசங்கர், மதுரை

‘‘வீட்டுக்கு ஒரே பையன். பெத்தவங்க விருப்பப்படி மருத்துவம் சேர்ந்தேன். எம்.பி.பி.எஸ் முடிச்சுட்டு கம்யூனிட்டி மெடிசின் படிக்கறதுக்காகவே சண்டிகர் போனேன். ‘நோய்க்குக் காரணம் கிருமி மட்டுமல்ல... சில சமூக, பொருளாதார, சூழலியல் காரணிகளுக்கும் அதுல முக்கியப் பங்கு இருக்கு’ன்னு சொல்றதுதான் கம்யூனிட்டி மருத்துவம். டாக்டர் படிப்புன்னாலும் முழுக்க கிராமங்கள்லதான் சேவை. நோய்னு வர்ற மக்களுக்கு ரெண்டு நாளைக்கு மாத்திரை, மருந்துதான் என்னால தர முடிஞ்சது. அவங்க நோய்க்கு காரணமான அசுத்தமான தண்ணீரை நல்லதாக்கவோ, வறுமையை மாத்தவோ என்னால முடியலை. அப்போதான் ஐ.ஏ.எஸ் பொறி எனக்குள்ள விழுந்தது. படிப்பு முடிஞ்சதும் சென்னை செட்டிநாடு மருத்துவமனையில வேலை கிடைச்சாலும், மனசு ஐ.ஏ.எஸ் கனவை மறக்கலை. வேலை பார்த்துட்டே பிரிப்பேர் பண்ணுனேன். முதல் முயற்சியிலயே பிரிலிமினரி பாஸ் பண்ணி மெயின் தேர்வுல ரெண்டு பேப்பர் எழுதிட்டேன். உடல்நிலை சரியில்லாமப் போனதால அடுத்த பேப்பர் எழுத முடியலை. இந்த முறையும் முயற்சி பண்ணுனேன். ஆனா, டாப் டென்ல (தமிழக அளவில் 2வது இடம்) கிடைக்கும்னு எதிர்பார்க்கலை!’’



டெலிவரிக்குப் பின் சர்வீஸ்..!
சுடர்விழி, காஞ்சிபுரம்
‘‘காஞ்சிபுரம் பக்கத்துல உக்கல் சொந்த ஊர். அந்த ஊர்ல எங்கப்பாதான் ஃபர்ஸ்ட் கிராஜுவேட். நானும் பெரிய படிப்பு படிக்கணும்கிறது அவரோட ஆசை. ஆனா, குடும்பச் சூழலால பிளஸ் 2 முடிச்சு டீச்சர் ட்ரெய்னிங்தான் படிக்க முடிஞ்சது. கிடைச்ச போஸ்டல் அசிஸ்டென்ட் வேலையில சேர்ந்து, கரஸ்ல டிகிரி பண்ணினேன். கல்யாணத்துக்கு அப்புறம் போஸ்ட் ஆபீஸ் வேலையையும் விட்டுட்டு கணவரோட சென்னை வந்தாச்சு. பொண்ணு ஸ்கூல் போன பிறகுதான், என்னைப் பத்தி யோசிக்க முடிஞ்சுது. கலெக்டராகணும்கிற ஆசை மனசுல ஒரு ஓரமா ஒளிஞ்சிருந்தது. முயற்சி பண்ணினேன். முதல் தடவை இண்டர்வியூவுல போயிடுச்சு. அடுத்து கொஞ்ச நாள்ல டி.என்.பி.எஸ்.சி மூலமா கிடைச்ச போக்குவரத்துத் துறை வேலையில சேர்ந்தேன். ஆனாலும் ஐ.ஏ.எஸ் முயற்சியை விடலை. பயிற்சியோட வேகத்தைக் கூட்டினேன். வேலைக்குப் போய்க்கிட்டு, வீட்டையும் பார்த்துக்கிட்டு படிக்கிறது சிரமமாத்தான் இருந்துச்சு. சத்யா ஐ.ஏ.ஏஸ் அகாடமி நடத்தும் நண்பர் சத்யா, புத்தகங்கள், டிப்ஸ் கொடுத்து வழிகாட்டினார். இப்ப 342வது ரேங்க். இப்ப கர்ப்பமா இருக்கறதால உடனே டிரெய்னிங்ல சேர முடியாது. மெடிக்கல் சர்டிபிகேட் வாங்கித் தந்தாச்சு. பையனோ, பொண்ணோ வந்த பிறகுதான் ட்யூட்டி!’’

ஊருல போஸ்டர் அடிச்சாச்சு!
வீ.ப.ஜெயசீலன், ஜி.கல்லுப்பட்டி
‘‘கொடைக்கானல் மலையடிவாரம் நம்ம ஊர். பாசக்காரங்க... போஸ்டர் அடிச்சு வச்சிக்கிட்டு என்னை வரவேற்கத் தயாராயிட்டிருக்காய்ங்களாம். இப்ப எனக்கு ஐ.ஆர்.எஸ் கிடைக்கும். ஆனா, ஐ.ஏ.எஸ்.தான் நம்ம டார்கெட். பள்ளி நாட்கள்லயே வந்துட்ட கனவு அது.

அப்பாவும், அம்மாவும் எனக்கு முழு சப்போர்ட். கருவூலத்துல கிடைச்சிருந்த கணக்கர் வேலையை இதுக்காகவே விட்டுட்டு நாலு நண்பர்கள் கொடுத்த தைரியத்துல சென்னை வந்தேன். அம்மா கொடுத்த 20,000 ரூபாயில ரூம் எடுத்துப் படிக்க ஆரம்பிச்சோம். தமிழ் மீடியத்துலயே எல்லாத்தையும் படிச்சதால, தமிழ்லயே ஐ.ஏ.எஸ் எழுத முடிவு பண்ணுனேன். ஆனா, அதனால படாதபாடு பட்டேன். எந்த கோச்சிங் சென்டர்லயும் தமிழ்ல கிளாஸ் எடுக்கத் தயாரா இல்லை. புத்தகங்களும் கிடையாது. ஆங்கிலப் புத்தகங்களை நானே தமிழ்ல மொழிபெயர்த்துப் படிச்சேன். வெறியோட விடாமுயற்சி பண்ணினதுல இப்போ சர்வீஸ் வாங்கியாச்சு. ‘இன்டர்வியூவில உன் மொழிப் பாசத்தையெல்லாம் காட்டாத. அது உதவாது’ன்னு சிலர் சொன்னாங்க. ஆனா, எனக்கு உள்ள ஒண்ணு வச்சுகிட்டு வெளிய ஒண்ணு பேசத் தெரியல. ‘தமிழ்நாட்டுல இலங்கைத் தமிழர் விஷயத்துல மாணவர்களோட போராட்டத்தையும் சட்டசபைத் தீர்மானத்தையும் ஆதரிக்கிறீர்களா’ன்னு கேட்டாங்க. ‘ஆமாம்’னு சொல்லி பத்து நிமிஷம் அது பத்திப் பேசுனேன். பரவால்ல, செலக்ட் பண்ணியிருக்காங்க சார்!’’

எஞ்சினியர் ஐ.ஏ.எஸ்!
பரணிக்குமார், சென்னை
‘‘சென்னை கேந்திரிய வித்யாலயாவுல பெஸ்ட் ஸ்டூடன்ட். ஜம்மு காஷ்மீர்ல பி.டெக் கோல்டு மெடலிஸ்ட். சட்டிஸ்கர்ல கை நிறையச் சம்பளம். ஆனாலும், வாழ்க்கையில சுவாரஸ்யம் இல்லை. பள்ளிக்கூட நாட்கள்ல ஸ்கூல் பீப்பிள் லீடரா இருந்த உற்சாகம் திரும்பத் திரும்ப மனசுக்குள்ள வந்தது. அந்த லீடர்ஷிப் எனக்குப் பிடிச்சிருந்தது. ஐ.ஏ.எஸ் அதுக்கேத்த இடம்கிறதால தேர்ந்தெடுத்தேன். அம்மா, பாட்டியோட முழு ஒத்துழைப்பும், சப்போர்ட்டும் கிடைச்சதுல இன்னிக்கு ஜெயிச்சிருக்கேன்!’’
- அய்யனார் ராஜன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன், ஜி.டி.மணி