கடைசி பக்கம் : நிதர்ஸனா





படித்துப் பட்டம் பெற்று, நல்ல வேலைக்குப் போய் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற கனவோடு இருந்த அந்தப் பெண்ணுக்கு திடீரென இளம் வயதிலேயே உறவினரோடு திருமணம் நிகழ்ந்துவிட்டது.

அவளது தோழிகள் எல்லாம் பள்ளி முடித்து கல்லூரி போன நேரத்தில், அவள் வீட்டில் பொறுப்பாக சமைத்து கணவனுக்குக் கொடுத்தனுப்பி, பிள்ளைகள் பெற்று வளர்த்து, அவர்களை பள்ளிக்கு அனுப்பி, மாலையில் அவர்களை டியூஷன், கிளாஸ் என கூட்டிச் சென்று தன் நாட்களை பிஸியாக வைத்திருந்தாள்.
ஆயிற்று... பிள்ளைகள் வளர்ந்திருந்தார்கள். இப்போதாவது தன் கனவான ‘ஏதாவது ஒரு டிகிரி’ சாத்தியமாகுமா என கணவனிடம் கேட்டாள் அவள். ‘‘தபால் வழியில படிச்சா, டிகிரி படிச்ச ஃபீலிங் இருக்காது. ஈவினிங் காலேஜ் போய்ப் படி’’ என கணவனும் சேர்த்துவிட்டான்.

பிள்ளைகள் கல்லூரி போகும் வயதில், அவளும் முதல்முறையாக கல்லூரிக்குள் நுழைந்தாள். தோழிகள் பலரும் பட்டம் படித்துவிட்டு வீட்டில் முடங்கி, சமையலறையே கதி என்று இருக்கும் நேரத்தில், இவள் அங்கிருந்து விடுதலை பெற்று கல்லூரி வருகிறாள். நினைத்தபோதே பரவச உணர்வு பொங்கியது.

பேராசிரியர் வகுப்பறையில் நுழைந்தபோது அவள் மெய் மறந்திருந்தாள். ‘‘பாடப் புத்தகங்கள் மட்டும் போதாது. நான் சொல்ற சில எழுத்தாளர்கள் பேரைக் குறிச்சுக்கங்க. அவங்க புத்தகங்களை வாங்கிப் படிச்சா, சுலபமா டிகிரி வாங்கிடலாம்’’ என்றவர், ஒரு குறிப்பேட்டை எடுத்து பெயர்களைப் படிக்கத் தொடங்கினார்.

அவள் அவசரமாக எழுத ஆரம்பித்தாள். பக்கத்தில் இருந்த இளம்பெண் அவள் காதருகே கிசுகிசுத்தாள்... ‘‘இதையெல்லாம் எழுதணும்னு அவசியம் இல்லை. அவர் இப்போ அட்டெண்டன்ஸ் எடுக்கறார். இன்னும் எழுத்தாளர் பேர் சொல்லலை.’’
மெய்மறக்கும்போது தவறுகள் நிகழும்!