
தரகர் அலுவலகத்துக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே நாம் பங்கு வர்த்தகம் செய்யலாமா... கூடாதா..? என்ற கேள்விக்கும், தபால் மூலமாக கல்வி கற்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கடந்த இதழைப் படித்துவிட்டு ஒரு நண்பர், ‘வீட்டில் இருந்து பங்கு வர்த்தகம் செய்வது என்பது கரஸ்பாண்டென்ஸ் கோர்ஸ் படிக்கிற மாதிரியா?’ என்று கேட்டார். அவர் வேடிக்கையாகக் கேட்டாலும், சிலர் சீரியஸாகவே அப்படி நினைத்துவிட வாய்ப்பு இருக்கிறது.
பங்கு வணிகத்தில் இரண்டு வகை இருக்கிறது... முதலாவது ஆஃப்லைன்... அதாவது பங்குத் தரகரிடம் கணக்குத் தொடங்கி வைத்துக் கொண்டு, அவர் மூலமாக ஆர்டர் கொடுத்து பங்குகளை வாங்குவதும் விற்பதுமான செயல். இதில் தரகர் துணை நமக்கு நிச்சயம் தேவைப்படும்.
அடுத்ததாக ஆன்லைன்... இது நம்முடைய பங்கு வர்த்தகக் கணக்கை நாமே பராமரித்துக் கொள்வது. அதாவது பங்குத் தரகரிடம் கணக்கு தொடங்கியவுடன், ஒரு பயனாளர் அடையாளமும் அதற்கான ரகசிய குறியீட்டையும் வாங்கி வைத்துக் கொண்டு வீட்டில் இருந்தபடியே இணையத் தொடர்பு மூலமாக அந்தக் கணக்கில் நாமே பங்குகளை வாங்கி விற்று வர்த்தகம் செய்வது. இதில் பங்குத் தரகருடைய துணை நமக்குத் தேவையில்லை. நாமே ஆர்டர் போட்டு வாங்கலாம், விற்கலாம்!
சரி, இரண்டு வகைகளைச் சொன்னாலே அடுத்ததாக இரண்டில் எது பெஸ்ட் என்ற கேள்வி எழுமில்லையா... அதனால், அதற்கும் பதில் சொல்லிவிடுகிறேன். நீங்கள் பங்குச்சந்தை பற்றி ஓரளவே தெரிந்துவைத்திருக்கும் ஆரம்பகட்ட முதலீட்டாளராக இருந்தால், நூறு சதவிகிதம் தரகர் மூலமாக முதலீடு செய்யும் ஆஃப்லைன் டிரேடிங்தான் சிறந்தது. ஏனென்றால், முடிவுகளை எடுக்கும்போது தரகர்களின் வழிகாட்டுதல் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
அதோடு முதலீடு சார்ந்த பல தகவல்களைப் பெற்று அதன் மூலம் முதலீட்டு முடிவுகளை எடுக்க முடியும். அடுத்ததாக, பதற்றத்தில் எடுக்கும் தவறான முடிவுகளைத் தவிர்க்க முடியும். நாம் ஒரு விஷயத்தை யோசித்துவிட்டு அதைச் செயல் படுத்தும் விதமாக தரகரிடம் சொல்லும்போது, அந்த முடிவில் ஏதாவது குறை இருந்தால் சட்டென்று அவர் சுட்டிக் காட்டுவார். புரிந்துகொண்டு அதைத் தவிர்க்கலாம். ஆன்லைனில் இந்த விஷயங்கள் எல்லாமே மைனஸ்தான்!
அதுவே நன்கு தேர்ந்த முதலீட்டாளராக இருந்தால் நீங்கள் ஆன்லைன் வாய்ப்பைப் பயன்படுத்தலாம். பல தரகு நிறுவனங்கள் ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு கம்பெனிகளின் நிதிநிலை அறிக்கைகள், துறை சார்ந்த அலசல் கட்டுரைகள், சந்தை நிலவரம், அதன் போக்கு போன்ற பல கட்டுரைகளை அனுப்புவார்கள். அதன்மூலம் சந்தையின் நிலையை அறிந்து முதலீட்டு முடிவை எடுக்கமுடியும். இதையெல்லாம் படித்துப் பார்த்து அலசி ஆராயும் அளவுக்கு நமக்கு நேரமும் பொறுமையும் இருந்தால் ஆன்லைன் முறையைப் பயன்படுத்தலாம்.
இந்த ஆன்லைன் வர்த்தகத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை... உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் மட்டுமே இந்த பங்கு வர்த்தகக் கணக்கைப் பயன்படுத்துங்கள். என்ன அவசரம் என்றாலும், பொதுவாக எல்லோரும் பயன்படுத்தும் பிரவுசிங் சென்டரில் போய் பங்கு வர்த்தகக் கணக்கைப் பார்க்காதீர்கள். அது ஆபத்தானது.
பொதுவாகச் சொல்வதாக இருந்தால் ஆன்லைனை விட ஆஃப்லைன் முறை முதலீடுதான் பல வழிகளில் சிறந்தது. ஆனால், அதைச் செய்வதற்கு முன் பங்குத் தரகர்களைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு முடிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் வீண் சிக்கல்கள் வந்து சேர வாய்ப்பு இருக்கிறது.முறையாகப் பதிவு பெற்று, செபியால் கண்காணிக்கப்படும் தரகு நிறுவனம்தானா என்பதை முதலில் கவனிக்க வேண்டும் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். நீங்கள் தாராளமாக, ‘செபி கொடுத்த கடிதத்தின் நகலைக் காட்டுங்கள்’ என்று கேட்கலாம். அதோடு நீங்கள் வர்த்தகம் செய்யும் கிளை நிறுவனம் உரிய அனுமதி பெற்றுத்தான் நடத்தப்படுகிறதா என்பதையும் கவனித்துக் கொள்ளவேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். இந்த அடிப்படையான விதிகளைத் தாண்டி சில விஷயங்களில் நாம் கூடுதல் கவனத்தோடு இருக்கவேண்டும்.
தரகர் நமக்குச் சொல்லும் பங்குகள் குறித்த தகவல்கள் எல்லாமே வெறும் ஆலோசனைகள்தான் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். அதை அப்படியே கடைப்பிடிக்க வேண்டிய எந்தக் கட்டாயமும் நமக்குக் கிடையாது. நல்ல லாபம் ஈட்டித் தருகிறேன்... நான் சொல்லும் பங்குகளை வாங்குங்கள் என்றெல்லாம் யாராவது சொன்னால் உடனே நீங்கள் உஷாராகிவிடுங்கள். தங்களுடைய சுயலாபத்துக்காக நம்மைப் பலியாக்கிவிடும் சில தரகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால், எந்தச் சூழ்நிலையிலும் முதலீட்டு முடிவு என்பது நூற்றுக்கு நூறு நீங்கள் எடுக்கும் முடிவாக இருக்கட்டும்.
அதேபோல பங்குப் பரிவர்த்தனைக்கு அடையாளமாக டெலிவரி நோட், ஆர்டர் புக் போன்ற சில பேப்பர்களில் நீங்கள் கையெழுத்துப் போட வேண்டும். நீங்கள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால்தான் உங்கள் பெயரில் உள்ள பங்குகளை தரகர்களால் விற்கவே முடியும். அப்படிப்பட்ட சூழலில் சில தரகர்கள் மொத்தமாக ஒரு புத்தகம் முழுக்க நம்மிடம் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்வார்கள். ‘ஒருவேளை அவசரமான சூழலில் நீங்கள் போன் மூலம் தகவல் சொன்னால்கூட நாங்கள் உங்கள் பங்கை விற்று லாபம் ஈட்டமுடியுமே’ என்று அதற்கு அவர்கள் ஒரு காரணமும் சொல்வார்கள். ஆனால், நம்முடைய கவனத்துக்கு வராமலே நம் பங்குகளை அவர்கள் விற்க இந்த முன் கையெழுத்து விஷயம் அவர்களுக்கு உதவி விடும். அதனால், இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. நீங்கள் ஆரம்பகட்ட முதலீட்டாளராக இருக்கும்போது, நன்கு யோசித்துத்தான் பங்குகளில் முதலீடு செய்கிறீர்கள். அதனால் இப்படிப்பட்ட அவசரமான சூழல் என்பது உங்களுக்கு நேராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!
அதேபோல முதலீடு செய்யும் தொகை எவ்வளவோ, அதற்கான காசோலையை மட்டும் தரகரிடம் கொடுங்கள். மொத்தமாகக் கொடுத்து வைத்துவிட்டு, தேவைப்படும்போது நீங்கள் போனில் சொன்னால் அவர் முதலீடு செய்து விடுவார் என்றெல்லாம் நினைத்தால் முதலுக்கே மோசம் வந்துவிடலாம்.
இவை எல்லாமே ஒரு சில தரகர்கள் செய்யும் செயல்களால் ஏற்படும் விளைவுகள்தான். ஒட்டுமொத்த தரகர் அமைப்பையே குறை சொல்வதாக ஆகாது. சில அப்படி இருப்பதால் பொதுவாக எச்சரிக்கை செய்ய வேண்டியது கடமையாக இருக்கிறது.
கணக்குத் தொடங்கி தரகர் அலுவலகம் வரைக்கும் வந்துவிட்டோம்... அடுத்து என்ன பங்கை வாங்கலாம் என்ற கேள்வி வரும்... அதைப் பற்றிப் பேசலாம். காத்திருங்கள்... சொல்கிறேன்.