ஆயிரம் பொய் சொல்லியே கல்யாணம் பண்ணலாம்னு இருக்கையில, ‘களவாணி’த்தனமா கல்யாணம் பண்ணிட்டாலும் தப்பில்லைதான். விடுங்கய்யா விமலை. சந்தோஷமா வாழ்ந்துட்டுப் போகட்டும் புதுத் தம்பதிகள்.
மீ.மகாநந்தினி, திருவண்ணாமலை.
வி.ஐ.பி.க்களின் புத்தாண்டு சபதத்தைவிட அந்த மேட்டர்ல ஸ்ரேயா தர்ற போஸ்தான் சாரே கிறங்கடிச்சிடுச்சு. பொண்ணுங்கன்னா மட்டும் பெரிசா இடம் ஒதுக்கறதை விடணும்னு நீர் எப்பத்தான் சபதம் எடுக்கப் போறீரோ?
மிக்கேல்ராஜ், சாத்தூர்.
கண்ணுல சிக்க(ண்)ன்குன்யாவா..! அடி ஆத்தாடி... படிக்கறபோதே பயத்துல கண்ணெல்லாம் சிவந்துடுச்சே!
டி.சுப்ரமணியன், திருச்சி.
‘குங்குமம் ஜங்ஷன்’ பகுதி தகவல் பூங்காவாகத் திகழ்கிறது. படிக்க பரபர, சுறுசுறுன்னு நெறையச் சேதிகள் கிடைக்கிறது.
மயிலை கோபி, சென்னை 83.
குழந்தைகளுக்கு பிரபலத் தலைவர்களின் பெயர்களைச் சூட்டிப் பெருமைப்படுத்தியிருப்பது மனதைக் கவர்ந்தது. பின்னாளில் அந்தக் குழந்தைகள் அந்தப் பெயர்களுக்கு ஏற்ற மாதிரி புகழ் பெறட்டும் என வாழ்த்துகிறோம்!
ஏ.எஸ்.யோகானந்தம், கோபி.
வரிசையா மூணு படங்களோட விமர்சனம் தந்து அசத்திட்டீங்க. கடைசி ரெண்டு வரியில ஒட்டுமொத்த விமர்சனத்தையும் உள்ளடக்கிடுற உம்ம ஸ்டைலே ஸ்டைல்தான்.
யோக அக்ஷயா, கோயம்புத்தூர்.
தமிழர்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்திவந்த பல இசைக்கருவிகள் இன்று சாம்பிளுக்குக்கூட கிடைப்பது அரிதாக உள்ளது. ஒவ்வொன்றாகத் தேடிப்பிடித்துத் தகவல்கள் தருகிறது உமது கட்டுரை.
ஆர்.பிருந்தா, பெங்களூரு.
காசிக்குப் போனால் புண்ணியம் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கஞ்சாவும் பாங்கும்கூட கிடைக்குமென்று புகைப்படக்காரர் புதுவை இளவேனில் சொல்வது அதிர்ச்சியளிக்கிறது. பழமை வாய்ந்த நகரத்தின் பெருமையைக் காப்பாற்றுவார்களா?
எஸ்.ராமசாமி, சித்தோடு.
புத்தகக் கண்காட்சி பற்றிய உமது முன்னோட்டம் பயனுள்ளதாக இருந்தது. வாங்கிட்டோம்ல புத்தகங்களை!
பிரபாலிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.
பொங்கல் சிறப்பிதழ் காணோமேன்னு எதிர்பார்த்திட்டிருந்தோம். ‘எக்ஸ்ட்ரா பக்கங்களோட வருது’ங்கிற உம்ம அறிவிப்பு எக்ஸ்ட்ரா சந்தோஷத்தைத் தந்திடுச்சு.
ராணிமோகன், புளியங்குடியிலிருந்து தொலைபேசியில்...
வாரா வாரம் ‘சுட்ட கதை சுடாத நீதி’ தருகிற கதைகளை வாழ்க்கையில் கடைப்பிடித்தாலே போதும். வாழ்வு மேம்படும்.
டி.வி.சாந்தி, புதுச்சேரியிலிருந்து தொலைநகலில்...
‘ஒரே சீன்ல ஓடுது வாழ்க்கை’ கட்டுரை, மற்றவர்களைச் சிரிக்க வைக்கும் நடிகர்களின் வாழ்க்கையின் இன்னொரு
புறத்தைத் தெரிந்து கொள்ளச் செய்தது.
ஆர்.பெருமாள், திருவள்ளூரிலிருந்து தொலைநகலில்...