
புதுப்படத்துக்கு வடநாட்டு அழகி ஒருத்தியைத்தான் கதாநாயகியாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் டைரக்டர் சிவா.
மும்பை, கொல்கத்தா என்று பல இடங்களில் கல்லூரி வாசல்களில் காத்திருந்தும், அவரால் தனது கனவுக்கன்னியைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
கவலையோடு ஆபீஸில் அமர்ந்திருந்தார் சிவா. அப்போது உதவி இயக்குனர் அமிர்தம் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தான். அவளைப் பார்த்தவுடன் டைரக்டருக்குப் பிடித்துப் போயிற்று.
‘‘சார்... மும்பையிலே ஒரு கல்லூரியிலிருந்து அழைச்சிக்கிட்டு வாறேன். நடிக்கிறதுக்கு ஓகே சொல்லிட்டாங்க...’’
‘‘வெரி குட்...’’
‘‘ஆனா, தமிழ்தான் கொஞ்சம்...’’
‘‘கொஞ்சம் குதறிப்பேசினாக்கூட போதும். ஆனா, டிரஸ் மட்டும்...’’
‘‘நோ ப்ராப்ளம் சார். டூ பீஸ்னா கூட ஓகேன்னுட்டாங்க...’’
‘‘தட்ஸ் குட்... இந்தா அட்வான்ஸ் பத்தாயிரம். அக்ரிமென்ட் ரெடி பண்ணிடு. நாளைக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டி வந்துடு!’’அமிர்தம் சந்தோஷத்தோடு வெளியே வந்தான். கூடவே புதுக் கதாநாயகி.
‘‘அப்புறம் கருப்பாயி... நான் சொன்ன மாதிரியே உனக்கு சான்ஸ் வாங்கிக் கொடுத்திட்டேன். வாங்கின அட்வான்சில் எங்கே என் கமிஷன்?’’ கேட்டான் அமிர்தம்.
‘‘மொத்தத்தையும் நீங்களே வைச்சிக்கங்க... எங்க குப்பத்திலே பணத்துக்குப் பாதுகாப்பில்லே. எனக்கு வேணுங்கிறபோது வாங்கிக்கறேன்’’ கூறிவிட்டு நகர்ந்தாள் கருப்பாயி!
செல்வராஜா