பட்டிமன்றமும் இந்த பாப்பையாவும்!





     ஹா
ல் டிக்கெட் இருந்தாத்தான் பல்கலைக்கழகத் தேர்வு எழுத முடியும். திடீர்னு எனக்கு மட்டும் ஹால் டிக்கெட் தரமுடியாதுன்னு சொல்றாங்க. ஒண்ணுமே புரியலே. ‘கவலைப்படாதீங்க பாப்பையா... வாங்க பிரின்சிபலை பாத்துப் பேசுவோம்’னு அழைச்சுக்கிட்டுப் போனார் நண்பர் அருணாசலம். பிரின்சிபல் அறையில இல்லே. ‘துறைத் தலைவரையாவது பாத்துப் பேசுவோம்’னு அவரோட வீட்டுக்குப் போனோம்.

     எனக்கு ஸ்காலர்ஷிப் வாங்கித் தாரேன்னு சொன்னவரு இவருதான். அதனால ரொம்ப நம்பிக்கையோட போறேன். வீட்டுக்குள்ள போயி, ‘அய்யா வணக்கம்’னு சொன்னேன். நிமிர்ந்து பார்த்தவரோட முகம் திடீர்னு மாறிப்போச்சு. பட்டுன்னு முகத்தைத் திருப்பிக்கிட்டாரு. என் பக்கம் திரும்பவே இல்லே. அருணாசலத்தைப் பாத்து, ‘என்னப்பா’ன்னாரு. ‘அய்யா, பாப்பையாவுக்கு ஹால் டிக்கெட் தரமுடியாதுன்னு சொல்றாங்கய்யா’ன்னாரு அருணாசலம். பட்டுன்னு என் பக்கம் திரும்பின துறைத்தலைவரு, ‘எப்பிடித் தருவாங்க. உனக்கு எப்படிய்யா தருவாங்க? நீதான் ரொம்ப பெரிய மனுஷன் ஆகிட்டியே. வெளியே என்னைப் பத்தியும் என் வகுப்பைப் பத்தியும் தப்புத்தப்பா பேசுறே. உன் நடவடிக்கையே சரியில்லே. யார் யார்கிட்ட நீ என்னென்ன பேசினேன்னு எனக்குத் தெரியும். போ... போ... என்னால ஒண்ணும் பண்ணமுடியாது’ன்னு வெடிக்கிறாரு.

         பெரிசா ஒரு மலை சரிஞ்சு எம்மேல விழுகிற மாதிரி இருந்துச்சு. கலங்கிப் போயிட்டேன். அழுகையை அடக்கிக்கிட்டு, ‘அய்யா... இப்படில்லாம் நான் பேசுனேன், நடந்துக்கறேன்னு உங்களுக்கு யாருய்யா சொன்னது’ன்னு கேக்குறேன்.

      ‘ஏன்... அந்த நூலகர்தான் சொன்னாரு. நீதான் எல்லார்கிட்டயும் என்னைப் பத்தி தப்புத்தப்பா பேசுறியாமுல்ல’ன்னாரு. எனக்கு கண்ணுல இருந்து நீர் தாரையா ஊத்துது. ‘அய்யா, நான் ஏழைப்பய. எந்தப் பின்புலமும் இல்லாத ஆளு. நீங்க சொல்ற மாதிரியெல்லாம் எனக்குப் பேசத்தெரியாதுய்யா... யாரோ தப்பா உங்ககிட்ட சொல்லியிருக்காங்க’ன்னு கெஞ்சுறேன்.
அவர் எதையும் காதுல வாங்கறமாதிரி தெரியலை... ‘இந்தா... சும்மாருப்பா நீ’ன்னு எடுத்தெறிஞ்சு பேசிட்டாரு.

        திரும்பவும் பொறுமையாச் சொன்னேன். ‘அய்யா, சத்தியமா நான் இப்படியெல்லாம் பேசலே. நான் சொல்ற வார்த்தைகளை நீங்க நம்ப மறுக்கிறீங்க. என் வார்த்தையை நம்பாம என்னைப் புறக்கணிக்கிற ஒரு வாத்தியாருகிட்ட படிக்கிறதை நான் விரும்பலே. வர்றேங்கய்யா’ன்னு சொல்லிட்டு விறுவிறுன்னு வெளியில வந்திட்டேன். அவரு வீட்டுக்குப் பக்கத்தில ஒரு வேப்பமரம். அந்த மரத்து நிழல்ல நின்னுக்கிட்டு அழுறேன்.

      ‘இந்தப்பய திமிரைப் பாருப்பா. எவ்வளவு ரோஷமா பேசிட்டுப் போறான் பாரு. நூலகர்தான் இவனைப் பத்திச் சொன்னாருல்ல. அவரு சொன்ன மாதிரிதான் நடந்துக்கறான்’னு அருணாசலம்கிட்ட சொல்றாரு துறைத்தலைவர். ஹால் டிக்கெட் கிடைக்கலையேங்கிற வருத்தத்தை விட, இவர் இவ்வளவு எடுத்தெறிஞ்சு பேசிட்டாரேங்கிற அவமானம் என்னைப் பெரிசா பாதிச்சுச்சு.    
‘அய்யா... இவரு அப்படிப்பட்ட ஆளு இல்லே. உங்களுக்கு தவறான தகவல் வந்திருக்கு’ன்னு எனக்கு ஆதரவா பேசிட்டு வெளியில வந்த அருணாசலம், ‘பாப்பையா... உங்களை நான் நம்புறேன். நீங்க அப்படியெல்லாம் பேசுற ஆளில்லே. ஆனா, இந்த ஆளு உறுதியா நிக்கிறாரு. நான் கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க... இவரைப்பத்தி யாருக்கிட்டயாவது விளையாட்டாப் பேசுனீங்களா’ன்னு கேட்டாரு.

       ‘சார், நான் பேசினேனா, இல்லையாங்கிறதை இனிமே நான் சொல்லக்கூடாது. அந்த நூலகர்கிட்ட போவோம். அவர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்குங்க’ன்னு சொல்லிட்டு நூலகரோட வீட்டுக்கு அவரை அழைச்சுக்கிட்டுப் போறேன்.

       ஆத்துக்கு அக்கரைல அவர் வீடு. எங்களப் பாத்தவுடனேயே நூலகரோட மூஞ்சி வெளிறிப்போச்சு. ‘என்னப்பா... ரெண்டு பேரும் வந்திருக்கீங்க’ன்னு தடுமாற்றமா கேக்குறாரு.
‘அய்யா... இவரு துறைத்தலைவரைப் பத்தி உங்ககிட்ட தப்பா பேசுனாரா... வேற எங்காவது தப்பாப் பேசினதா உங்ககிட்ட யாரும் சொன்னாங்களா’ன்னு கேட்டாரு அருணாசலம்.
‘இல்லையே... இவரு ஏம்பா அவரைப் பத்தி தப்பாப் பேசப் போறாரு. நல்ல பையனாச்சே...’ன்னு சமாளிக்கிறாரு நூலகர்.

         ‘அய்யா, இவரு தப்பாப் பேசினார்னு துறைத்தலைவர்கிட்ட நீங்கதான் சொல்லியிருக்கீங்க. நீங்க சொன்னது, இவரோட வாழ்க்கையையே பாதிச்சிருச்சுங்கய்யா’ன்னு அருணாசலம் சொல்ல, ‘அந்தாளு பொய் சொல்றாருய்யா... நான் யாருக்கிட்டயும் பாப்பையாவைப் பத்தி பேசவேயில்லே’ன்னு சாதிச்சிட்டாரு. ‘சரிய்யா, எங்ககூட வந்து துறைத்தலைவர்கிட்ட சொல்லுங்க’ன்னு கூப்பிட்டா வரமாட்டேங்குறாரு.

           ‘அய்யா... நான் மனசறிஞ்சு உங்களுக்கு எந்தத் துரோகமும் பண்ணலே. ஆனா, நீங்க பண்ணுன காரியத்தாலே என் படிப்பே பாழாகிப் போச்சு. நல்லாயிருங்கய்யா’ன்னு சொல்லிட்டு வெளியில வந்துட்டேன். அருணாசலத்துக்கு எம்மேல இருந்த சந்தேகம் தீர்ந்துபோச்சு.

         நேரா வீட்டுக்கு வந்தேன். மனசே சரியில்ல. ‘சரி... இதுதான் விதின்னு இருக்கும்போது யாரு மாத்த முடியும்... நடக்குறது நடக்கட்டும்’னு விட்டுட்டேன். சரியா சாயங்காலம் 6 மணி. ஒருத்தர் சைக்கிள்ல வந்து இறங்கி, ‘பாப்பையா வீடு எதுங்க’ன்னு விசாரிக்கிறாரு. நான் வெளில வந்தேன். ‘நான் அருணாசலத்தோட தம்பி... அண்ணன் இதை குடுக்கச் சொன்னார்’னு சொல்லி ஒரு ரசீதைக் குடுத்தாரு. அது தேர்வுக்கட்டணம் கட்டின ரசீது. நன்றிப்பெருக்குல என் கண்ணு திரும்பவும் கலங்குது. இதெல்லாம் எப்பிடி நடக்குது? இப்படி அக்கறை காட்டற தன்மையான நண்பர்கள் எனக்கு மட்டும் எப்படிக் கிடைக்கிறாங்க? எல்லாமே ஒரு காரண காரியத்தோட என்னை மீறி நடக்குது.

        நேரா அருணாசலம் சார் வீட்டுக்குப் போனேன். ‘அந்த நேரத்தில கையில பணம் இல்லே பாப்பையா. மனைவியோட நகையை அடகு வச்சுத்தான் பணம் கட்டினேன். நீங்க எதைப்பத்தியும் யோசிக்காம நல்லாப் படிங்க’ன்னு சொல்லி தோள்ல தட்டிக் குடுத்தாரு. அப்பிடியே அவரு கையப்புடிச்சு கண்கள்ல ஒத்திக்கிட்டேன். வேற ஒண்ணும் சொல்லத் தெரியலே.

        பணம் கட்டிட்டாலும் கூட கையில ஹால் டிக்கெட் இல்லே. வாங்கவும் அவகாசம் இல்லே. நல்லவேளையா தேர்வு நடந்தது அமெரிக்கன் கல்லூரியில. என்னை அங்கே எல்லாருக்கும் தெரியும்ங்கிறதால யாரும் ஹால் டிக்கெட் கேட்கல. ஆனா, என்னைத் தேர்வு எழுதவிடக்கூடாதுங்கிறதுல அந்த நூலகர் உறுதியா இருந்திருக்காரு. அமெரிக்கன் கல்லூரி ஹெட்கிளார்க்குக்கு போன் பண்ணி, ‘சாலமன் பாப்பையாங்கிற பையன் அங்கே தேர்வு எழுதுறானே... அவன்கிட்ட ஹால் டிக்கெட் இருக்கானு பாருங்க’ன்னு சொல்லியிருக்காரு. அதுக்கு ஹெட்கிளார்க், ‘அவன் எங்க பையன்... எங்கே என்ன படிக்கிறான்னு எங்களுக்குத் தெரியும்’னு சொல்லிட்டாரு. தேர்வு முடிஞ்சபிறகு ஹெட்கிளார்க்கே வந்து இந்த தகவலை என்கிட்ட சொன்னாரு.

             
இப்படி எல்லாம் என்னை ஆளாக்கிய கல்லூரி அமெரிக்கன் கல்லூரி. அந்தக் கல்லூரிக்கு ஒரு ஆபத்து வரும்போது அந்த ஆபத்தை எதிர்த்து நான் நிக்கலைன்னா, அந்தக் கல்லூரி எனக்குக் கத்துக் கொடுத்த கல்விக்கு அர்த்தம் இல்லாம போயிறாதா?

எல்லாத்துக்கும் மேல ஒரு வியப்பு என்னன்னா, ரெண்டாவது ஆண்டு கல்லூரி திறந்து நாங்கள்லாம் வகுப்புக்கு வந்தபோது, துறைத்தலைவரும் அங்கே இல்லே... நூலகரும் அங்கே இல்லே... மாறுதலாகிப் போயிட்டாங்க. படிப்பு முடிச்சு வேலைக்குப் போனபிறகு, வேலூர் ஊரிஸ் கல்லூரி முத்தமிழ் விழாவில வச்சு அந்தத் துறைத் தலைவரைப் பாத்தேன். அப்போ அவரு கொஞ்சம் தெளிவாகிட்டாரு. ‘என்ன பாப்பையா... நல்லாயிருக்கியா? எங்கேயோ தப்பு நடந்திருக்கு. என்னை தப்பா நினைக்காதே’ன்னு சொன்னாரு. அவரு ரொம்ப நல்ல மனிதர்.
                  என்னைத் தப்புத் தப்பா சொன்ன நூலகர், ஒருமுறை திருநெல்வேலியில பிரமாண்டமான கூட்டத்துக்கு மத்தியில நடந்த பட்டிமன்றத்தில நான் பேசுறதைப் பார்த்து பிரமிச்சு நின்னாரு. பகையும் பழிவாங்குதலும் என்னோட உள்ளத்தில என்னைக்கும் வந்ததில்லே!

                   நான் முதல் வருட தேர்வை எழுத முழுக்காரணமும் அருணாசலம்தான். அவரு மட்டும் இல்லேன்னா ஹார்வி மில்லுக்கு கிளார்க்கா போயிருப்பேன். இப்போ அருணாசலம் சார் இல்லே... அவரு குடும்பம் மதுரையிலதான் இருக்கு. இப்பவும் அவர் குடும்பத்தில நானும் ஒரு ஆளுதான். நான் இல்லாம எதுவும் நடக்காது.

                 அருணாசலம் மாதிரியே, என் துன்ப நேரங்கள்ல தோள்கொடுத்து தாங்கி நின்ன, இப்பவும் நிக்கிற இன்னொரு நண்பர் ராமமூர்த்தி. படிச்சு முடிச்சு அமெரிக்கன் கல்லூரி வேலைல சேர்ந்தபோது நண்பரானவர். வணிகவியல் துறைப் பேராசிரியர். நல்ல படிப்பாளி. கம்ப ராமாயணத்தில ரொம்ப புலமையான ஆளு. மிகச்சிறந்த ஆலோசகர். நட்பு வட்டத்தைத் தாண்டி என் குடும்பங்களுக்கு உள்ளே ஏற்பட்ட சோதனைகள்லயும் கூட நின்னவரு. இன்னைவரைக்கும் உற்ற துணையா, சகோதரனா இருக்கிறவர். இவரைப் பத்தி சொல்லாம என் வாழ்க்கையைப் பத்தி சொல்ல முடியாது.
சரி... அடுத்த வாரம்  சந்திப்போமா!
சாலமன் பாப்பையா