அப்பாவைக் கொன்றவனைத் தேடிப்பிடித்துப் பழிவாங்கும் மகனின் சீரியஸான முயற்சிகளைச் சிரிக்கச் சிரிக்கக் காமெடியில் சொல்ல முடியுமா..? ‘‘முடியும்...’’ என்று ஒரு ஆக்ஷன் காமெடிப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் மைக்கேல் கான்ட்ரி. அந்தப்படம் கொலம்பியா பிக்சர்ஸின் ‘தி கிரீன் ஹார்னட்’. இதில் இயக்குநருக்கு இருக்கும் பங்கைவிட படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டர், ஹீரோ ‘சேத் ரோகனு’க்குத்தான் பங்கு அதிகம். நம்மூர் உலகநாயகன் போல தானே எழுதி தானே நடிக்கும் உலகப்பட நாயகன் சேத் ரோகன்.
‘தி கிரீன் ஹார்னட்’ என்கிற டைட்டிலுக்கு எண்பது ஆண்டுகள் வரலாறு இருக்கிறது. ஜார்ஜ் டபிள்யூ டிரெண்டிஸ் எழுதிய இந்தக் கதை, முப்பதுகளில் அமெரிக்க வானொலியில் தொடராக வந்தது. இதன் பிரபலம் அடுத்த முப்பது ஆண்டுகளில் காமிக்ஸ், டிவி தொடர் என்று நீண்டது. தொழில்நுட்ப வளர்ச்சியின் நீட்சியில், மக்கள் சாதனங்களின் தோளில் அமர்ந்து கொண்டு காலத்துக்குக் காலம் வெவ்வேறு வடிவங்களில் வெளியான இந்த கிரீன் ஹார்னட் அறுபதுகளில் டிவி தொடராக வந்தபோது இதில் இரண்டாவது ஹீரோவாக வந்தவர் ‘புரூஸ் லீ’ என்பது ஒரு அதிசயிக்க வைக்கும் செய்தி.
இதெல்லாம் பல காலமாக சேத் ரோகனின் மூளைக்குள் சுற்றிச் சுழன்று, இப்போது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திரைப்படமாகி உலகை வலம் வரவிருக்கிறது. சின்னதாக ஒரிஜினலில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு ‘இவான் கோல்ட்பெர்க்’குடன் இணைந்து இந்தப்படத்துக்கான ஸ்கிரிப்டை எழுதி முடித்தபோது கூட இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கப்போவது தான்தான் என்று ரோகனுக்குத் தெரியாது. ஆனால் முழு ஸ்கிரிப்ட்டையும் மூளைக்குள் வைத்திருப்பவர் என்கிற தகுதியில் புரட்யூசர் இவர் பெயரை முன்மொழிய, இயக்குநரும் வழிமொழிந்தார். ஒத்துக்கொண்ட ரோகன் அதையும் காமெடியாக, ‘‘இந்தப்படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு சிறப்பான எந்தத் தகுதியும் தேவையில்லை. அதனால்தான் நான் ஹீரோவாகி விட்டேன்...’’ என்றார். அவர் சொன்னதும் கொஞ்சம் நிஜம்தான். ஹீரோவைவிட அவருடனேயே பயணப்படும் இரண்டாவது ஹீரோதான் தற்காப்புக்கலையில் சிறந்தவராகவும், புதுப்புது கண்டுபிடிப்புகளுடன் எதிரிகளை துவம்சம் செய்பவராகவும் வருகிறார்.
அந்த வேடத்தில் ‘ஜே சௌ’ என்ற ஆசிய பாப் நட்சத்திரம் நடித்திருக்கிறார். ஹாலிவுட் கனவுக்கன்னிகளில் ஒருவரான கேமரூன் டயஸும் நடித்திருக்கும் படத்தில் அனைவரின் கவனத்தையும் கவரப்போவது ‘பிளாக் பியூட்டி’ என்கிற நவீன வசதிகளும், தளவாடங்களும் உள்ளடக்கிய ஓல்டு மாடல் கார். அது செய்யும் அமளிதுமளிகளை 3டி யில் பார்க்கப்போகிறோம் என்பது கூடுதல் சுவாரஸ்யம். உலகமெங்கும் படம் வெளியாகும் அதேநாளில் தமிழிலும் இதே தலைப்புடன் வெளியிடுகிறது சோனி பிக்சர்ஸ்.
கருப்புக் கண்ணாடி தயாரா பாஸு..? ஜி