அறுவடைத் திருநாள் கொண்டாடும் என் அருமைத் தமிழ் மக்களே!நல்லா இருக்கீகளா? நான்தான் உங்க களத்து மேடு. ‘மேடு பள்ளம்னுட்டு யார்ரா இவன்’னு கேக்குறீகளா?
‘ஒருத்தன் சேத்துல கை வச்சாதான் நாமெல்லாம் சோத்துல கை வைக்க முடியும்’னு டாம்பீகமாச் சொல்வீங்களே... அவனோட சேற்று உழைப்பை அரிசியாவும் பருப்பாவும் மாத்தி சாப்பாட்டுக்குத் தயார் பண்ற இடம்ங்க நான். ‘மாடு கட்டிப் போரடிச்சா மாளாது நெல்’னு நம்ம பாட்டன், முப்பாட்டன் எல்லாம் யானை கட்டிப் போரடிச்சாங்களே... அதே களத்துமேடுதாங்க. ‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ங்கிற அருமையான சொலவடையை உங்களுக்குத் தந்த இடம்னா, புரிஞ்சுக்கிடுவீங்களா?
விதைச்ச பயிர் அறுவடைக்கு ரெடியாகுதுன்னு தெரிஞ்சதுமே, சந்தோஷமா என்னைத் தயார் பண்ண ஆயத்தமாகிடுவான் விவசாயி. ஊருக்கு வெளியில, காத்து வீசற இடமாப் பார்த்து, புல் பூண்டுகளை வெட்டி, புழுதி அமுங்கத் தண்ணி தெளிச்சு, ராக்காவலுக்கு குச்சல் (குடிசை) போட்டு, தலபூஜை பண்ணி... அட... அட... களம் செதுக்கறதே ஒரு கலைய்யா!
களம் தயாரானதும் வண்டி வண்டியா கம்மங்கருதும் கட்டுக்கட்டா உளுந்தஞ்செடியும் வந்து குவியும். நஞ்சையில் நெற்கதுர அறுத்து, கட்டு கட்டி தலைச்சுமையா தூக்கிட்டு வரப்பு மேல பெண்கள் நடந்து வர்ற அழகே அழகு! ஜோடி ஜோடியா மாடுகள் ரோதக்கல்லை இழுத்தபடி ரவுண்டு வர, ராப்பகலா நடக்கும் பிணையல். கதிரடிச்சு, தூத்தி, துடைச்சா மலைபோலக் குவிஞ்சிருக்கும் விளைபொருள். பார்க்கற விவசாயிக்கு மச்சைப் பிளக்கற மார்கழிக் குளிருல பட்ட அவஸ்தையெல்லாம் பறந்தே போயிடும். முதல் விளைபொருள இஷ்ட தெய்வத்துக்குப் படைச்சிட்டு அத்தனை நாளும் பாடுபட்டவங்களுக்கு ‘படி’ அளப்பாங்க. மறக்காம அடுத்த வருஷ விதைப்புக்கும் எடுத்து வைப்பாங்க. எல்லாம் போக மிச்சம்தான் வீட்டுப்பாட்டுக்காக குலுக்கைகளுக்கோ, காசாக்கறதுக்காக வியாபாரிகள்கிட்டயோ போகும்.
ம்ம்... இதெல்லாம் பழம்பெருமை. நினைச்சு நினைச்சு இப்ப பெருமூச்சு வேணும்னா விட்டுக்கலாம். இன்னும் கொஞ்சநாள் போனா, அந்த மூச்சையுங்கூட அடக்கிடுவாங்க போல. பின்ன..? நெல்லும் சோளமும் கம்பும் விளைஞ்ச நிலங்களையெல்லாம்தான் இப்ப ஃபிளாட்டுகளாக்கிட்டீங்களே சாமி. இருபது வருஷத்துக்கு முன்னால கிராமங்கள்ல நான் இருந்த இடமெல்லாம் இன்னிக்குப் பசங்களுக்குக் கிரிக்கெட் கிரவுண்டு. இப்பெல்லாம் கவருமென்டு ரோடுதாங்க களம். ‘வர்ற விளைச்சலுக்கு அது போதும்’னு சொல்லிடுறீங்க.
‘இனிமே மழையை நம்பியெல்லாம் விவசாயம் பண்ண முடியாது’ங்குறீங்க. பூமி சுத்தற வரைக்கும் மழைங்கிறது பெய்ஞ்சிட்டேதாங்க இருக்கும். உங்களுக்கு ஏதாச்சும் காரணம் வேணும்ல. ஏன்னா, உங்க மனநிலைதான் மாறிடுச்சே! ‘பையன் டாக்டராகணும், இன்ஜினியராகணும், கலெக்டராகணும்னுதான சொல்றீங்க. ஒருத்தர் சொல்லுங்க பார்ப்போம், ‘எம்பையன் விவசாயி ஆகணும்’னு! ஒருத்தராவது வயல்ல இறங்கி விதைச்சாதானுங்க பயிர் முளைச்சு எல்லாரும் சாப்பிட முடியும்! அதுக்கு யாரும் தயாரா இல்லையே...
வெங்காய விலை ஏறிடுச்சுன்னு ‘குய்யோமுறையோ’னு கத்தறீங்களே, ‘விவசாயம்’ங்கிற வார்த்தையையே தீண்டத்தகாததா நினைச்சா வெங்காயம் மட்டுமில்ல, அரிசி, பருப்பு, காய்கறின்னு எல்லா விலையும் ஏறத்தான் செய்யும்.நல்ல நாளும் அதுவுமா சாபம் விடறேன்னு நினைக்காதீங்க, ஏனோ சொல்லணும்னு தோணுச்சு... என்னோட ஆதங்கத்தையெல்லாம் கொட்டித் தீர்த்துட்டேன்.
கடைசியா ஒண்ணே ஒண்ணு...
வாழ்க்கை முறையும் வாழற இடமும் என்னதான் நவீனமானாலும், வயிறு பசிக்கிறபோது வேண்டியிருக்கே இரை.அதை விளைய வைக்க ஆளும் விளையறதுக்கு இடமும் இருந்தாத்தாங்க, ஜனம் பூமியில் பொழச்சுக் கெடக்க முடியும். உழவர் திருநாள் விடுமுறையில, டி.வியில பாக்கற சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு நடுவுல இதை மட்டுமாவது மனசுல வச்சுக்கோங்க என் மக்களே!
இப்படிக்கு,
காணாமல் போய்க் கொண்டிருக்கும்
களத்துமேடு
தொகுப்பு: அய்யனார் ராஜன்