‘‘நான் ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தேன். சட்டென திரும்பியபடி ‘என் பெயர் ஆனந்த்’ என்றேன். அந்தக் காட்சி முடிந்ததும் சுற்றிப் பார்க்கிறேன். ஆண்களும் பெண்களும் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். அந்தக் கைதட்டல் இன்றுவரை கிடைத்து வருகிறது. இதற்கு ஆண்டவனுக்கும் ரசிகர்களுக்கும் நான் நன்றி சொல்கிறேன்’’ என்கிற சிவராஜ்குமாரின் சினிமா பயணம் எப்படி ஆரம்பித்தது... திடீரென்று நிகழ்ந்ததா? திட்டமிட்டு நடந்ததா?
‘‘கல்லூரி முடித்ததும் கெமிக்கல் தொழிற்சாலை அமைக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தந்தை மற்றும் ஆண்டவன் உத்தரவால் சினிமாவில் நுழைந்தேன். ‘மற்ற கம்பெனிக்காரர்களின் பணத்தில் சோதனை செய்ய வேண்டாம்’ என்று எங்கள் குடும்பமே எனது முதல் படத்தைத் தயாரித்தது. கன்னட முத்து டாக்டர் ராஜ்குமார் அவர்கள் மகன் படம் என்று எனக்கு முத்திரை குத்தாமல், என் நடிப்பை ரசிகர்கள் ரசித்தார்கள். அடுத்து நான் நடித்த 3 படங்களும் வெற்றிபெற்று ஹாட்ரிக் ஹீரோ என்ற பெயரைப் பெற்றுத் தந்தது. அன்று முதல் எனது கலைப்பயணம் தொய்வின்றி தொடர்கிறது’’ என்கிற சிவராஜ்குமார், மாறிவரும் திரையுலகில் எப்படி ஈடுகொடுத்து எவர்க்ரீன் ஹீரோவாக வலம் வருகிறார்?
‘‘சினிமா உலகில் தினமும் ஒவ்வொரு நுட்பம் நுழைகிறது. சிலர் நடிப்பில் சிகரம் தொடுகிறார்கள். சிலர் டச்சப்பில் மாற்றம் காட்டி நடிக்கிறார்கள். நான் தினமும் ஹோம் ஒர்க் செய்கிறேன். ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து என்னை நானே மாற்றிக்கொள்கிறேன். உடலை ட்ரிம்மாக வைத்திருக்கிறேன். மாற்றத்துக்கு ஏற்ப என்னை நானே மாற்றிக்கொண்டு இப்போதும் நான் ஒரு மாணவன் என்ற நினைப்புடன் செயலாற்றுவதே இதற்கு காரணம்’’ என்கிறார் சிவண்ணா.
சிவாஜி குடும்பத்துடன் தலைமுறை தாண்டி ராஜ்குமார் குடும்பத்துக்கு நட்பு தொடர்கிறது... ‘‘எங்கள் தந்தை காலத்திலிருந்தே நீளும் நட்பு இப்போதும் தொடர்கிறது. பிரபு சார் என்னிடம் பேசும்போது, ‘சிவராஜ், நாம ரெண்டு பேரும் எப்போ சேர்ந்து நடிக்கலாம்’ என்று அடிக்கடி கேட்பது வழக்கம்’’ என்கிற சிவராஜ்குமார் மொழிப் பிரச்னைக்குத் தாவுகிறார்.
‘‘கலைஞர்கள் மொழி என்ற சிறிய வட்டத்துக்குள் சிக்கிவிடக்கூடாது. அப்படி முடங்கினால் கலை வளர்ச்சி அடையாது. பெங்களூரு, சென்னை, மும்பை, ஐதராபாத் போன்ற நகரங்களில் பல மொழி பேசும் மக்கள் வசிக்கிறார்கள். ரசிகர்கள் மத்தியில் எந்தப் பிரச்னையும் ஏற்படக்கூடாது. இரண்டு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னையை அரசியல்வாதிகள் பேசித் தீர்த்துக்கொள்ளவேண்டும். சினிமா தொடர்பான பிணக்குகளை ஃபிலிம் சேம்பர் நிர்வாகிகள் பேசித் தீர்க்க வேண்டும். மொழிப் பிரச்னை நடிகர்களுக்குள் எப்போதும் இல்லை’’ என்கிறார்.
சிவராஜ்குமாருக்கும் சென்னைக்கும் நிறையவே தொடர்பு உண்டு.
‘‘கல்யாணி ஆஸ்பத்திரியில் பிறந்தது முதல் கல்லூரிப் படிப்பு வரை சென்னையே என்னை வளர்த்தது. நடிப்புப் பயிற்சியை சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில்தான் முடித்தேன். இன்றும் சென்னையில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போது அவர்கள் இங்கே வருகிறார்கள். நினைக்கும்போதெல்லாம் நான் சென்னைக்கு சென்று அவர்களைச் சந்திக்கிறேன். விரைவில் எனது நண்பர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் சந்தித்து கெட் டுகெதர் நடத்த திட்டமிட்டு இருக்கிறேன். இந்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும்’’ என்கிறவரின் 99&வது படம் ‘மைலாரி’ பெரும் வெற்றி பெற்றுள்ளது. அடுத்து வரும் 100வது படமான ‘ஜோகையா’வுக்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பதாக தகவல் வந்துள்ளது. அதுபற்றிக் கேட்டோம்.
‘‘எனது ‘ஜோகி’ படத்தின் இரண்டாவது பாகம்தான் ‘ஜோகையா’. அதன் கதையை இப்போது சொல்ல இயலாது. அந்தப் படத்தில் ரஜினி சார் கெஸட் ரோலில் நடிப்பதாக வந்த செய்தி உண்மை அல்ல. நானே அதை பத்திரிகையில் படித்துத்தான் தெரிந்து கொண்டேன்! நான் நடிக்கும் படங்களில் ஹீரோயின் யார் என்பதை நான் முடிவு செய்வதில்லை. தயாரிப்பாளர்
மற்றும் இயக்குனர்தான் முடிவு செய்கிறார்கள். அதில் நான் தலையிடுவது இல்லை. தமிழ்சினிமா உலகில்தான் பெரிய பட்ஜெட் படங்கள் வெளி வருகின்றன. அந்த அளவுக்கு கன்னட சினிமாவில் முதலீடு செய்ய யாரும் முன்வருவதில்லை’’ என்கிறவருக்கு, தமிழ் சினிமா ஆசை உண்டா?
‘‘பிறமொழிப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. போதிய நேரம் கிடைக்கவில்லை. பாரதிராஜா, மணிரத்னம் போன்ற இயக்குனர் சிகரங்கள் அழைத்தால் அதைவிட பாக்கியம் வேறு இல்லை. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்வேன். சாண்டல்வுட்டிலும் தமிழர்கள் பலர் பணியாற்றி வருகிறார்கள். தமிழ்த் திரையுலகில் சேரன், அமீர், தங்கர்பச்சான் உள்பட பல இளம் இயக்குனர்கள் தரமான படங்கள் கொடுக்கிறார்கள். இளம் நடிகர்களின் திறமையும் சிறப்பாக உள்ளது. குடும்பப்பாச பின்னணி கொண்ட திரைப்படங்கள் தமிழக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுகின்றன. இதே பாணியை நானும் ‘அண்ணா தங்கி’, ‘தவருக்கு பா தங்கி’ உள்பட பல படங்களில் வெளிப்படுத்தி பாராட்டு பெற்றேன்.
தமிழில் எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், கார்த்திக், விஜய், அஜீத் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படங்களை ரீமேக் செய்து கன்னடத்தில் நான் நடித்துள்ளேன். கன்னட மக்கள் அந்த கேரக்டர்களில் என்னை முழுமையாக ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி!’’