தேவதைகள் அணிவகுத்தால்...



        வெற்றிகரமாக 15வது சீசனை நிறைவு செய்துள்ளது சென்னை ஓபன். இந்தியாவில் நடக்கும் ஒரே ஏடிபி டென்னிஸ் போட்டி... அதிலும், புத்தாண்டு தொடக்கத்தில் நடக்கும் முதல் போட்டி என்பதால், ரசிகர்களுக்கு மட்டுமல்ல வீரர்களுக்கும் ரொம்பவே ஸ்பெஷல்.

‘டார்லிங்’ கார்லோஸ் மோயா சமீபத்தில் ஓய்வு பெற்றதால் சென்னை ரசிகர்கள் கொஞ்சம் அப்செட். போட்டி ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கார்த்தி சிதம்பரத்திடம், ‘‘கிரிக்கெட் பிடிக்கும். அதிலும் சச்சின் ஆட்டத்தை மிஸ் பண்ணவே மாட்டேன்’’ என்று ஒரு இளைஞர் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். விசாரித்ததில், பெல்ஜியத்தில் இருந்து வந்திருக்கும் டென்னிஸ் வீரர் என்ற தகவல் கிடைத்தது.

சரி... நம்ம பசங்களுக்கு ஃபுல் சப்போர்ட் கொடுக்கலாம் என்று வந்த ரசிகர்களுக்கு முதல் சுற்றிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. யுகி பாம்ப்ரி, போபண்ணா என்று ஒவ்வொருவராய் கழன்று கொள்ள, ஒற்றையர் பிரிவில் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாய் சோம்தேவ். உலக அளவில் 106வது ரேங்க். எதிர்த்து களமிறங்கிய டேவிட் காபின் 229வது ரேங்க். காலையில் கார்த்தி சிதம்பரத்திடம் பேசிக் கொண்டிருந்த அதே இளைஞர்.

ஊதித் தள்ளிவிடலாம் என்று சோம்தேவ் அலட்சியமாய் ஆட, ஓட ஓட விரட்டி தண்ணி காட்டினார் காபின். ஸ்டிரெய்ட் செட்டில் ஜகா வாங்கினார் சோ(க)ம்தேவ். ஹாட்ரிக் அடிக்கலாம் என்று வந்த சாம்பியன் மரின் சிலிக்கும் ஜப்பானின் நிஷிகோரியிடம் முதல் ரவுண்டிலேயே நாக் அவுட்.

டாப் 100ல் இருக்கும் வீரர்கள் அதிக அளவில் பங்கேற்றாலும், இந்திய நட்சத்திரங்கள் முதல் சுற்றிலேயே உதிர்ந்ததால் ரசிகர்கள் செம மூடு அவுட். ‘ரத்த சரித்திரம்’ ஹீரோ சூர்யாவும் வில்லன் விவேக் ஓபராயும் மோதிய காட்சிப் போட்டிதான் கலகலப்பூட்டி ரிலாக்ஸ் செய்தது. பாகிஸ்தான் வீரர் அய்சம் குரேஷியுடன் விவேக்கும், போபண்ணாவுடன் சூர்யாவும் ஜோடி சேர்ந்து ஆட, ரசிகர்களுக்கு டபுள் குஷி. ஆட்டோ ரிக்ஷாவில் அவர்கள் கொடுத்த என்ட்ரியால் நுங்கம்பாக்கம் ஸ்டேடியம் குலுங்கியது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள பயஸ் & பூபதி ஜோடி முதல் சுற்றில் தலை தப்பியதே பெரிய விஷயம். திக் திக் டை பிரேக்கரில் போராடி கரை சேர்ந்தது. முன்னாள் நம்பர் 1 ஜோடிக்கு இது வெள்ளோட்டம்தான். ஆஸ்திரேலிய ஓபனில் டாப் கியரில் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியா  பாக். எக்ஸ்பிரஸ் போபண்ணா & குரேஷி ஜோடி கால் இறுதியில் தடம் புரண்டதும் பெரிய ஏமாற்றம். நிஷிகோரி, காபின் இருவரும் பெரிய அளவில் ரீச் ஆவார்கள் என்பதுதான் சென்னை ஓபனில் ஹாட் டா(பி)க் ஆக இருந்தது. டிக்கெட் விற்பனை சூடாக இருந்தாலும், மார்கழி குளிருக்கு பயந்து ரசிகர்கள் போர்வைக்குள் முடங்கிக் கொண்டதால் ஸ்டேடியம் வெறிச். பிற்பகலிலேயே போட்டிகளை தொடங்குவது பற்றி யோசிக்க வேண்டியது அவசியம்.

‘அப்படியே மகளிர் டென்னிஸ் போட்டியையும் சேர்த்து நடத்தினால் நன்றாக இருக்கும்’ என்று அங்கலாய்த்தார் ஒரு ரசிகர். நினைத்தாலே இனித்தாலும் சானியா, ஷரபோவா, வோஸ்னியாக்கி... என்று தேவதைகள் அணிவகுத்தால் நுங்கம்பாக்கம் தாங்குமா?
 பா.சங்கர்