
‘‘சுப்பண்ணா! நான் ராமய்யர் பேசறேன்...’’
‘‘ஐயர்வாள். நான் காத்துண்டிருக்கேன் உமது விமர்சனத்துக்கு.’’
‘‘ஓய்! மியூஸிக் அகாடமியில சஞ்சய் சுப்ரமணியம் பாட்டு. ஆம்பளை பாட்டுல ‘காய்தா’ பாட்டு அது.’’
‘‘ஐயர்வாள். இது என்ன கிண்டல்? எனக்கு நீங்க சொல்லச் சொல்ல ‘காய்து’, இப்படிப்பட்ட பாட்ட கேக்கமுடியாம...’’
‘‘அபிஷ்டு. நான் சொல்ற ‘காய்தா’வுக்கு, பிகுசுகு உள்ள பாட்டுன்னு அர்த்தம். அந்தக் காலத்துல ஜி.என்.பி, செம்மங்குடி பாட்டெல்லாம் ‘காய்தா’ பாட்டுன்னு சொல்வா. கர்நாடக சுத்தமா பாடி, பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை வசப்படுத்தற ஆம்பளை பாட்டுல சஞ்சய் பாட்டும் ஒண்ணு...’’
‘‘ஐயர்வாள். கலர்கலரா ஜிப்பா போட்டுண்டு பாடினா, ஆம்பளை பாட்ட கேட்கவும் கூட்டம் வருமே.’’
‘‘ஓய்! ஒரு கலரும் கிடையாது. வெறும் வெள்ளை சட்டை & வேட்டிதான். சஞ்சய் பாட்டுலதான் கலர் இருக்கும். ராகத்த பாடினா, அந்த ராக தேவதைய நகை, நட்டோட முழுசா அலங்கரிச்ச மாதிரி இருக்கும். கூட வாசிச்ச வயலின் வரதராஜன்கூட பளீர் வெள்ளைதான். ரெண்டு பேரும் மாத்தி மாத்தி போட்டு வாங்கிண்டு இருந்தா அன்னைக்கு மேடையில. சஞ்சய் கச்சேரியில விசேஷமே, அவருடைய ராகம் பாடும் கற்பனைதான். தைரியமா பேகடா, யதுகுலகாம்போதி, சுருட்டின்னு யாரும் அதிகமா பாடாத ராகங்கள அனாயாசமா பாடுவார். அகாடமியில அவர் பாடின யதுகுலகாம்போதிய கேட்டபோது, ‘இது ஒண்ணும் ஆயர்குலகாம்போதி சொத்து இல்ல, சஞ்சய் குலகாம்போதி சொத்துதான்’னு தோணிச்சு. அவர் பாடின, ‘நின்னு ஸேவிஞ்சின’ பாட்டு நம்ம திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி மேல எழுதினது.’’
‘‘இது சுப்பராய சாஸ்திரி எழுதினதுதானே?’’
‘‘ஆமாம் ஓய்! மும்மூர்த்திகளான ஸ்யாமா சாஸ்திரியோட மகன்தான் இவர். மும்மூர்த்திகள்கூட இந்த பெருமாள் மீது பாட்டு எழுதினதா தெரியல. சஞ்சய் தவிர இந்தப் பாட்ட அதிகம் யாரும் பாடறதா தெரியல. இந்தப் பாட்டுக்கு முன்னாடி டைகர் வரதாச்சாரி எழுதிய ‘சரியோ நீ’, ராமலிங்க அடிகளாரோட ‘அப்பா நான்’... இப்படி எல்லாரோட சாகித்தியத்தையும் பாடினார்...’’
‘‘ஐயர்வாள்! இப்படி பல வெளில வராத பாட்டுக்கள் சஞ்சய் மூலமாதான் வருதோ?’’
‘‘உழைக்கணும் ஓய்! தேடித் தேடிப் பிடிச்சு, மெருகேத்திப் பாடணும். அன்னிக்கு கச்சேரில அவர் பாடின பைரவி ராகம், அடுத்து வந்த ‘சுருட்டி’ போல அவர்கிட்ட சுருண்டு கிடந்தது. குருவாயூர் துரை மிருதங்கம் ராஜ நடைபோட்டுண்டு வந்தது. ‘சுருட்டி’ ராகம் தானம் பல்லவி அன்னிக்கு மகுடம்தான்.’’
‘‘ஐயர்வாள்! என்னிக்குமே ‘சஞ்’ஜெயம்தான்னு சொல்லும்!’’
‘‘சரியா சொன்னீர்! கலாக்ஷேத்ரால நடந்த இசை விழால பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத் கச்சேரி...”
‘‘ஐயர்வாள். அவங்களோட ‘வசீகர’ பாட்டைக் கேக்க கொடுத்து வச்சுருக்கணுமே!’’
‘‘ஆமாம் ஓய்! அத்தனை ரசிகர்களையும் வசியப்படுத்தற திறமை அவருக்குத்தான் உண்டு. ‘ஒன்றா இரண்டா’ அவர் பாடிய பாடல்கள். அவர் வந்த வழி அப்படி. திருமதி பாலாமணி, திரு.லால்குடி ஜெயராமன் அவங்களோட பாணின்னா சும்மாவா? அன்னிக்கு கச்சேரில வயலின் பாஸ்கர், மிருதங்கம் பத்ரி சதீஷ்குமார், உடுப்பி ஸ்ரீதர் கடம். ‘மோக்ஷமுகலதா’ பாட்டுலேர்ந்து ஆரம்பிச்சு, கச்சேரி பிச்சுண்டுது. அடுத்தது ‘பவநுத நா’ மோகன ராக பாட்டு. தியாகராஜர், ‘உன் களைப்பு தீர என் இதயத்தில் விளையாடுவாயாக’ என்கிறார்.’’
‘‘உண்மைதான் ஐயர்வாள். ஜெயஸ்ரீ பாட்ட கேட்டா, ரசிகாளோட களைப்பு தீர்றது மட்டுமில்லாம, இதயத்தையும் வருடறா மாதிரிதான் இருக்கும்.’’
‘‘அடுத்து பூர்விகல்யாணி ராகத்தை ஜெயஸ்ரீ பாடிக் கேட்டபோது, கலாக்ஷேத்ராவுல அந்தக் காலத்துலேயிருந்து சங்கீதம் கத்துக் குடுத்தவா ஞாபகம் வந்துடுத்து...’’
‘‘ஆமா... ருக்மணி அருண்டேல், மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை, தண்டாயுதபாணி பிள்ளை, டைகர்வாள், எம்.டி.ராமநாதன், பாபனாசம் சிவன் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் இருந்த இடமாயிற்றே ஐயர்வாள்.’’
‘‘சரியா சொன்னீர்! ஜெயஸ்ரீ ‘நின்னுவினா’ பாட்டு பாடி சொக்க வைச்சார். ‘பன்னகசயனுடைன’ இடத்துல நிரவல். ஆனா ஸ்வரம் பாடினது, ‘நின்னுவினா’வுல!’’
‘‘ஓ! அது நாலு தள்ளி. இது சமம்தானே?’’
‘‘ஓய் சுப்பண்ணா! அன்னிக்கு கச்சேரில பிரளயம் வந்தாமாதிரி ஒரு கூட்டம். ஒக்கார இடமில்லை. ஒரு ஒரு பாட்டுக்கு 10 பேர் உள்ள வந்து நெருக்கிண்டே இருந்தா. நாலு இடம் தள்ளி பாடறத விட, அந்த இடத்தை விட்டு பின்னாடி போய் சமத்துல பாடினா, நாலுபேருக்கு உக்கார இடம் கிடைச்ச மாதிரி ஆச்சு இல்லையா. நம்ம சங்கீதத்துல நிறைய இந்த மாதிரி பாட இடம் உண்டு. அந்தக் காலத்துலேர்ந்தே மகாவித்வான்கள் இப்படித்தான் பாடி இருக்கா. மனச உருக்குற சங்கீதம் ஜெயஸ்ரீயோடது. அதுக்கப்பறம் பாடின கீரவாணி இன்னிக்கும் மணம் வீசிண்டு இருக்கு.’’
‘‘கலிகியுண்டே பாட்டுதானே மெயின்?’’
‘‘ஆமாம்! ‘என் தலையெழுத்து நன்றாக அமைந்திருந்தால் அல்லவா நான் விரும்புவது எனக்குக் கிடைக்கும்’னு தியாகராஜர் சொன்ன மாதிரி, நிறைய பேர் கச்சேரி கேக்க டிக்கெட் கிடைக்காம தலைவிதிய நொந்துண்டு போனது உண்மை. பத்ரி சதீஷ்குமார் கை ரொம்பப் பிரமாதம். கச்சேரிய களை கட்ட வைக்குது. எல்லா வித்வான்களும் அவர் மிருதங்கம்தான் வேணுங்கிறா.’’
‘‘அப்போ அவரோட பத்து மிருதங்கத்த ஒவ்வொரு கச்சேரிக்கும் அனுப்பிச்சுடலாமே?’’
‘‘ஓய்! நக்கலா? அவா வெறும் மிருதங்கத்த கேக்கல. அவரே வந்து வாசிக்கணும்னு விரும்பறா!’’
‘‘நமக்கென்ன, கச்சேரி நன்னா இருக்கணும்.’’
‘‘சுப்பண்ணா! நாத இன்பம் சபையில வி.வி.சுப்ரமணியம் வயலின் கச்சேரி. என்ன ஸ்ருதி சுத்தம். என்ன அமைதி. வயலின்னா அதுதான் வயலின்.’’
‘‘நீங்க கேட்டேளா ஐயர்வாள்?’’
‘‘ஆமாம்! கேட்டேன். வயலினை தர முடியாதுன்னு சொல்லிட்டார். ஓய்! அவர் வாசிப்புல ‘தில்லையே’ ஆனந்த நடனமாடினார்னா பார்த்துக்குமே. அதுக்கு ‘தத்ஜம் தகஜம் தகதிமி’ன்னு டி.வி.கோபாலகிருஷ்ணன் மிருதங்கம். ‘தளாங்குதக ததிங்கிணதொம்’ அப்படின்னு திருப்புணித்துறை ராதாகிருஷ்ணன் கடம். அதக் கேட்டு அண்டமும் பிண்டமும் ஆடி, எண் திசையும் அவா புகழ் பாடியது. டி.வி.ஜியோட அரை சாப்பு ‘பளீர் பளீர்’ என, அதைக் கேட்ட ரசிகாளோட மனசு ‘கலீர் கலீர்’ன்னு ஒலிக்க, அரங்கமே ஆனந்தமாயிடுச்சு. அன்னிக்கு வி.வி.எஸ் வாசிச்ச ‘ஸ்மரஸதா’ பிலஹரி, ‘சக்கனிராக’ கரகரப்ரியா வெரிவெரி ஸ்வீட். (வி.வி.எஸ்). டி.வி.ஜி தனி வாசிச்ச உடனே, ‘இனிமே டி.வி.ஜி நிறைய மிருதங்கம் வாசிக்கணும்’னு வி.வி.எஸ் சொன்னார். ரசிகா மனசுலேயும், வி.வி.எஸ்ஸும் நிறைய கச்சேரி வாசிச்சா தேவலையோன்னு தோணிச்சு.’’
‘‘ஐயர்வாள்! வி.வி.எஸ்ஸோட தம்பிதானே வி.வி.ரவி, அவருடைய பிள்ளை வி.வி.எஸ்.முராரியும் நல்ல வயலின் வித்வான் ஆச்சே?’’
‘‘ஆமாம்! அவருக்கு ஸ்ரீராம்குமார், சந்திரமௌலி, கணேஷ் ப்ரசாத்னு நிறைய நட்சத்திரங்கள் சிஷ்யாளா இருக்கா...’’
‘‘ஓஹோ!’’
‘‘பிரம்ம கான சபையில மஹதி பாட்டு...’’
‘‘ஐயர்வாள். நல்ல குரல். இனிமையா பாடுவாரே. நிறைய பின்னணி இசை பாடியிருக்காளே சினிமாவில!’’
‘‘ஆமாம் ஓய்! அன்னிக்கு கச்சேரில கீரவாணி பாடி அசத்திட்டா. அவரோட இரட்டை ராக பல்லவி, சினிமாவும் கச்சேரியும் இரண்டாக இருந்தாலும், முதல்தரமா பாடுவேன்னு நிரூபிச்சா மாதிரி இருந்தது ஓய். கீரவாணி ராகத்துலதான் எத்தனை சினிமா பாட்டு. ‘ஜானி’யில ‘காற்றில் எந்தன் கீதம்...’ ‘மூன்றாம் பிறை’ல ‘கண்ணே கலைமானே’... இப்படி பல பாடல்கள்...’’
‘‘நமது இசையோட மகிமையே மகிமை. ஐயர்வாள்! காத்திண்டு இருக்கேன் உம்ம விமர்சனத்துக்கு...’’
(தொடரும்)
சங்கீத சமுத்திரன்