வாசகர் கவிதைகள்





கொண்டாட்டம்


இந்தப் பொங்கல்
மிகக் கொண்டாட்டமாய்
கழிந்துவிட்டது,
வயல்வெளியை
விற்றுவந்த பணத்தில்!
 பெ.பாண்டியன்,
காரைக்குடி.

பலன்    

வாய் விட்டுச் சிரித்தால்
நோய் விட்டுப் போகுமாம்!
ஆனால், பலமுறை
சிரித்தும் பயனில்லை
பைத்தியக்காரனுக்கு!
அதிரை புகாரி,
அதிராம்பட்டினம்.

பயன்

பேருந்துக்கு வெளியில் நின்று
கையேந்தும் சிறுமிக்கு
பயன்படவேயில்லை,
கரம், சிரம் புறம்
நீட்டாதீர்கள் என்று
பேருந்துக்கு உள்ளே
எழுதியிருந்த வாசகம்...
 கமருதீன், தஞ்சை.

கண்ணீர்

தாலி ஏறி திருமணம் முடிய,
கண்ணீர் துளிர்க்கிறது
மணமகளை
பக்கத்திலிருந்து பார்க்கும்
தாயின் கண்களிலும்,
தூரத்திலிருந்து பார்க்கும்
காதலன் கண்களிலும்!
ஸ்ரீநிவாஸ்பிரபு, சென்னை90.

கவலை

இந்தப் பொங்கலுக்கு
அம்மாவின் கவலையெல்லாம்,
புக் செய்த சிலிண்டர்
பொங்கல் வைக்க
வந்துவிட வேண்டுமே
என்பதுதான்!
பெ.பாண்டியன்,
காரைக்குடி.

ஜாதகம்

மனிதன் பொல்லாதவன்
ஆடுகளுக்குக்கூட
ஜாதகம் பார்க்கிறான்.
மாசி மாதம்
பதினெட்டாம் தேதி
முனியசாமி கோயிலுக்கு
வெட்டப்படுமாம்!
 சு.கலைச்செல்வன்,
குண்டுகுளம்.

மனசு

வரன் தேடி
தரகர்களிடம் கொடுக்க
நகலெடுத்து நகலெடுத்தே
நைந்து போயிருந்தது
அக்காவின் ஜாதகக் குறிப்பு,
அவள் மனசைப் போலவே!
 எஸ்.சங்கர்,
திருப்பரங்குன்றம்.