ஹங்கேரியில் இசைத்து... ஆம்ஸ்டர்டாமில் எடுத்து...



லைஞரின் கைவண்ணத்தில் அவரது 75வது படைப்பாக உருவாகியிருக்கும் 'இளைஞனி’ல் பாடல்களும் தனிக்கவனம் பெற்றிருக்கின்றன. அனைத்துப் பாடல்களையும் எழுதி படத்தின் ஹீரோவாகவும் நடித்திருக்கும் பா.விஜய் பாடல்களை விவரித்தார்.

‘‘படத்துக்கான கதை, வசனப் பகுதிகளை கலைஞர் ஐயா அற்புதமா எழுதி முடிச்சுட்டார். பாடல்களை எழுதற எனக்கு அதுவே பெரிய பொறுப்பைக் கொடுத்தது. டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா, இசையமைப்பாளர் வித்யாசாகரோட நானும் உட்காந்து பாடல்களை உருவாக்கினோம். இது 1959ல நடக்கிற கதையானதால மொத்தம் அஞ்சு பாடல்கள்ல ரெண்டை சிம்பனி ஆர்கெஸ்ட்ராவோட இசைச்சு ஒலிப்பதிவு செஞ்சுட்டு வந்தார் வித்யாசாகர். அது அழகான ஒலியலைகளோட இருக்கவே, அஞ்சு பாடல்களையும் அப்படியே ஒலிப்பதிவு செய்ய தயாரிப்பாளர் மார்ட்டின் ஒத்துக்கிட்டார். ஹங்கேரி புடாபெஸ்ட் ஆர்க்கெஸ்ட்ராவுடனும் இணைஞ்சு இசையை உருவாக்கிய வித்யாசாகர் அதை ‘அவதார்’ படமெல்லாம் ஒலிப்பதிவு செய்த லண்டன் ஒலிப்பதிவுக்கூடத்தில பதிவு செஞ்சார்.

முந்தைய காலகட்டம் போலவே பாடல்களை எழுதிட்டு அப்புறம் இசையமைக்கலாம்னு சொன்னார் வித்யாசாகர். அப்படியே முதல்பாடலான ‘மழையில் குளித்த மலர்வனம்’ எழுத, அதை அழகான மெலடியா மாற்றினார் அவர். அதோட தன்மைக்கேற்ற மலர்வனம் ஆம்ஸ்டர்டாமில் இருந்தது. அந்த டூலிப் மலர்வனத்தில நானும், ரம்யா நம்பீசனும் ஆட, பாடலைப் படம்பிடிச்சோம். இரண்டாவது பாடலான ‘ஒரு நிலா, ஒரு குளம்’ நான் எழுதி வச்சிருந்த ஹைக்கூ. அதையே மெட்டமைச்சு பாடலாக்கினார் வித்யாசாகர். அதை ஒரு பீரியட் பாடலா காட்ட வெனிஸ் போய் புராதன அழகோட படம்பிடிச்சோம்.

மீரா ஜாஸ்மினோட நான் ஆடற பாடல் ‘இமைத் தூதனே...’ இதை டாங்கோ டான்ஸா இசைக்க, இதுக்கான நடனத்தை அசோக்ராஜாகிட்ட 15 நாள் பயிற்சி எடுத்து ஆடிமுடிச்சேன். ரிங் டோனா மட்டும் இதுவரை 25,000 பேர் இதை டவுன்லோட் செய்திருக்காங்க. அடுத்து படத்தின் மையப்பொருளான கப்பலின் உருவாக்கத்தை ‘தோழா வானம் தூரமில்லை, தோற்றம் மறைவு காற்றுக்கில்லை...’ங்கிற பாடல்ல கொண்டு வந்தோம். இந்த வரிகளைக்கேட்ட கலைஞர் பாராட்டியது உற்சாகம் தந்தது. ‘ஒவ்வொரு பூக்களுமே’ போல எனக்குப் புகழ் தரப்போற பாடலான இதை யானைகள், குதிரைகள், நடனக்காரர்கள், துணை நடிகர்கள்னு 10,000 பேரை வச்சு பிரமாண்டமா 15 நாள் எடுத்தோம். அஞ்சாவது பாடலான ‘நீயா நீயா’ கதையை நகர்த்தற பாடல். திரைக்கதையோட அங்கங்கே பயணப்படற இதை, கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கான செட்லயே எடுத்தோம்.

‘வார் மேக்கிங் பிலிம்’னு சொல்லப்படற யுத்தம் பற்றிய படங்கள் தமிழ்ல குறைவு. அப்படிப்பட்ட படமான இதை, காலத்துக்கும் அழியாத தாய்ப்பாசத்தைக் குழைச்சுக் கல்வெட்டா மாற்றியிருக்கு கலைஞர் ஐயாவோட எழுத்துகள்..!’’
 வேணுஜி