கால்நடைகளை கடவுளாக வணங்கிப் பார்த்திருப்பீர்கள். கால்நடைகளே கடவுளை வணங்கிப் பார்த்திருக்கிறீர்களா? பிணி நீங்க, கருத்தரிக்க, நீண்ட ஆயுள் வேண்டி என விதவிதமான கோரிக்கைகளுடன் வந்து கோபிநாத சுவாமியை தரிசித்துச் செல்கின்றன கால்நடைகள். திண்டுக்கல் பழனி நெடுஞ்சாலையில் இருக்கும் ரெட்டியார் சத்திரத்தில்தான் இந்த அதிசயம். இங்கு மலைமீது வீற்றிருக்கும் கோபிநாத சுவாமி, தமிழகத்திலேயே கால்நடைகளுக்கு உகந்த, அவற்றின் பிணி போக்கி நலன்காக்க அருள்பாலிக்கும் ஒரே கடவுள்.
தர்ப்பைப் புற்கள் ஓங்கி வளர்ந்திருக்கிற காடுகள். அவற்றைக் கோடு கிழித்து மேல்நோக்கிச் செல்கின்றன 619 படிகள். இதமாக வீசும் காற்று நிசப்தமான அந்தச் சூழலுக்கு மேலும் அழகூட்டுகிறது. 20 நிமிடப் பயணத்தில் அடைய முடிகிறது கோயிலை. மாட்டுப் பொங்கல் வைபோகத்திற்காகத் தயாராகிக் கொண்டிருந்தது ஆலயம். அன்றைய தினம் வரும் மாடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி விடுமாம்.
‘‘பசுவும் காளையுமா சேர்ந்து பதினைந்துக்கு மேல இருந்திச்சு. ‘வெக்கை நோய்’ வந்து ஒண்ணொண்ணா இறந்துச்சு. அப்பத்தான் உறவுக்காரர் ஒருத்தர் கோபிநாத சாமி கோயில் பத்திச் சொன்னார். எஞ்சியிருந்த ஒரேயொரு பசுவை வேன் பிடிச்சு தூக்கிப் போட்டு வந்து, கோயில் மலையடிவாரத்துல இறக்கி விட்டுச் சாமி கும்பிட வச்சோம். இன்னிக்கோ நாளைக்கோன்னு கிடந்த பசு ரெண்டு நாள்ல எழுந்து நடக்க ஆரம்பிச்சிருச்சு. இப்ப பொட்டைக் கன்னு போட்டிருக்கு. முதல் பாலை அபிஷேகத்துக்குக் கொண்டு வந்திருக்கோம். அப்படியே கன்னுக்குட்டிக்காகவும் ‘மண் உரு’ வாங்கி வச்சுட்டுப் போகலாம்னு இருக்கோம்’’ என்று தான் ரெட்டியார்சத்திரத்துக்கு வந்திருந்த காரணத்தைக் கூறினார் வேடச்சந்தூர் விவசாயி முருகேசன். மாடு, ஆடு மாதிரியே மண்ணால் செய்த குட்டி உருவங்களை கோயில் அடிவாரத்தில் விற்கிறார்கள். குறைந்தது 5 ரூபாய்; அதிகபட்சம் 25 ரூபாய் விலைக்கு மண் உரு கிடைக்கிறது.
‘‘ஊருல ஆடு, மாடுகள் அப்பப்ப களவு போயிட்டிருந்திச்சு. யார் செய்றாங்கன்னே தெரியாம நடந்தது. ஊரு ஒண்ணுகூடி பேசுனதுல, கோபிநாதர்கிட்ட தேங்காய் & பழம் உடைச்சு ஒரு வேண்டுதலை வைக்கலாம்னு முடிவானது. அடுத்த மாசமே ஊரு எல்லையில வெளியூர்காரங்க ரெண்டு பேர் கையில கயிறோட, குடல் சரிஞ்சு போய்க் கிடந்தாங்க. பிடிக்கப் போன காளை முட்டித் தூக்கியிருக்கு. அதோட நின்னுடுச்சு திருட்டு’’ என்கிறார்கள் ரெட்டியார் சத்திரத்துக்கு அருகேயுள்ள ஜி.புதுப்பட்டி கிராம மக்கள்.
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயிலின் ஊழியர்களிடம் பேசினோம்.
‘‘இது 18ம் நூற்றாண்டுக் கோயில். தங்களுக்காக வர்றாங்களோ இல்லையோ, வீடுகள்ல வளர்க்கற கால்நடைகளுக்காவே வர்றாங்க மக்கள். ‘பசு பால் தரமாட்டேங்குது’, ‘காளைக்குக் கால் ஒடிஞ்சிடுச்சு’ என்கிற மாதிரியான பிரச்னைகளை கோயில்ல முறையிட்டு ‘மண் உரு’ வாங்கி வச்சுட்டுப் போனா உடனடியா பிரச்னை சரியாகிடுதுன்னு நம்புறாங்க. இரை திங்காத கால்நடைகளுக்கு இந்த மலையில வளர்ற தர்ப்பைப் புல்லைக் கொடுத்தா சரியாகிடுது. கிருஷ்ண ஜெயந்தியும் மாட்டுப் பொங்கலும்தான் இங்கு விசேஷ நாட்கள்’’ என்கிறார்கள்.
கோபிநாதர் கால்நடைகளுக்காக இங்கு அவதரித்த கதை நெகிழ்ச்சியானது. வடக்கே ஏற்பட்ட கடும் வறட்சியை அடுத்து, ஒரு தாயும் மகனும் தங்களது கால்நடைகளோடு இப்பகுதிக்கு வருகின்றனர். அவர்கள் வந்த நேரம் இப்பகுதியும் வறட்சிக்குள்ளாகிறது. தீனி கிடைக்காமல் கால்நடைகள் ஒவ்வொன்றாக இறக்க, கடைசியாக மிஞ்சும் ஒரு பசுவுக்கும் அதன¢ கன்றுக்காகவும் தன் உயிரைக் காணிக்கை தர முன் வருகிறான் அந்த மகன். அந்த இரண்டு ஜீவன்களும் பிழைத்தால் தன் உயிரைத் தருவதாக வேண்டுகிறான். வேண்டுதல் நிறைவேறியதும், அந்தப் பசுவின் கொம்பிலேயே பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்ட அந்த இளைஞனே கோபிநாதன் என்றும், அவனது தாய்தான் ஆலயத்தில் கோபிநாதனுக்கு வலப்புறம் இருக்கும் கோப்பம்மாள் என்றும் கூறுகிறது ஆலயத்தின் தல வரலாறு.
பரம்பரை அறங்காவலரும் பூசாரியுமான சேதுபதியிடம் பேசினோம்.
‘‘மாடு, கன்னு வளர்க்கறவங்க எங்க இருந்தாலும் வந்துட்டுப் போறாங்க. மாட்டுப் பொங்கல் அன்னிக்கு வரிசைகட்டி வர்ற மாடுகளை அடிவாரத்துல நின்னபடியே பகவானைத் தரிசிக்க விடுவாங்க. பிறகு தேங்காய் & பழம் கொடுத்து கொஞ்ச நேரம் படுக்க வச்சு எழுப்பிக் கூட்டிட்டுப் போவாங்க. நல்ல பலத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும்தான் இந்த வேண்டுதல். பார்க்கறதுக்குப் பெரிய சந்தை போலக் கண்கொள்ளாக் காட்சியா இருக்கும்’’ என்கிறார் சேதுபதி.
அய்யனார் ராஜன்