கேள்வி பதில்கள்
பிரசவத்துக்குப் பிறகு எக்கச்சக்கமாக பெருத்து விட்டேன். சில மாதங்களாக உடல் இளைப்பதற்காக கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன். மாதவிலக்கின்போது மட்டும் செய்வதில்லை. அந்த நாளிலும் செய்யலாமா? காய்ச்சல் இருந்தால் உடற்பயிற்சி செய்யலாமா? அதையும் சேர்த்து அடுத்தடுத்த நாள்களில் செய்யலாமா? டி.மாலினி, சென்னை 90. பதில் சொல்கிறார் உடற்பயிற்சி ஆலோசகர் சுசீலா. பிரசவத்துக்குப் பிறகு கண்டிப்பாக 3 மாத ஓய்வு முக்கியம். அதன்பிறகே உடற்பயிற்சியைத் தொடர வேண்டும். மாதவிடாய் நாள்களில் தாராளமாக உடற்பயிற்சி செய்யலாம். அது அவரவர் உடல்நிலையைப் பொறுத்தது. தலைகீழாகச் செய்கிற பயிற்சிகள் மட்டும் வேண்டாம். காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது சிறந்தது. ஜூஸ் அல்லது மிதமான பிரெட் எடுத்துக்கொண்டு அரை மணி நேரம் கழித்துச் செய்யலாம். மதிய உணவு முடித்து 2 & 3 மணி நேரம் கழித்துத்தான் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை பயிற்சி செய்தாலே போதும். காய்ச்சலோ, உடல்நலக் கோளாறோ இருந்தால் செய்யக் கூடாது. அப்போது உடலின் உள் உறுப்புகள் பலவீனமாக இருக்கும். கர்ப்பிணிகள், முதுகுவலிக்காரர்கள், பிபி உள்ளவர்கள், தசை நோய் மற்றும் மாரடைப்பு பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர்கள் எல்லாம் மருத்துவரின் அறிவுரை இல்லாமல்எந்தப் பயிற்சியையும் செய்யக் கூடாது. ஒருநாள் செய்யாமல் விட்ட பயிற்சியை அடுத்த நாள் சேர்த்துச் செய்ய வேண்டாம். ஒருநாள் சாப்பிடவில்லை என்பதற்காக அடுத்த நாள் அதற்கும் சேர்த்தா சாப்பிடுகிறோம்? அதுபோலத்தான் உடற்பயிற்சியும்!புதிதாக மைக்ரோவேவ் அவன் வாங்கியிருக்கிறோம். கேஸ் அடுப்பில் செய்கிற எல்லா சமையலையும் அதில் செய்யலாமா? வெறுமனே சூடுபடுத்த மட்டும்தான் பயன்படுமா? வேறு எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?எம்.கே.அருள்ராஜா, முனியங்குறிச்சி. பதில் சொல்கிறார் சமையற்கலை நிபுணர் விஜி வரதராஜன்.காபி, டீ சூடு பண்ணுவதிலிருந்து, சாதம் வடிப்பது, உருளைக்கிழங்கு, வெண்டைக்காய் ரோஸ்ட் செய்வது, கீரை மசியல், கேசரி, பாயசம்... இப்படி எல்லா வகை சமையலையும் மைக்ரோவேவ் அவனில் தாராளமாகச் செய்யலாம். சாதா அடுப்பில் செய்வதைவிட ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இதில் சமைக்க முடியும்.மைக்ரோவேவில் சமைப்பதற்கென்றே விற்கப்படுகிற கண்ணாடிப் பாத்திரங்கள்தான் பெஸ்ட். எவர்சில்வர், அலுமினியப் பாத்திரங்களை வைக்கக் கூடாது. சாதம் வடிக்க மொத்தமே 7 நிமிடங்கள்தான் ஆகும். அந்த 7 நிமிடங்களில் இடையில் 2 முறையாவது பாத்திரத்தை வெளியே எடுத்து கிளறிவிட்டு மறுபடி உள்ளே வைக்க வேண்டும். கிளறி விட்டுச் சமைக்கிற இந்த டெக்னிக் மைக்ரோவேவில் சமைக்கிற எல்லாவற்றுக்கும் பொருந்தும். வழக்கத்தைவிட இதில் மிகக் குறைந்த எண்ணெயே செலவாகும். வெண்டைக்காய், பீன்ஸ், கீரை என காய்கறிகள் கலர் மாறாமல் வெந்திருக்கும்.மைக்ரோவேவில் சமையல் முடிந்துவிட்டதற்கான ஒலி வந்ததும், பாத்திரத்தை வெளியே எடுத்து விட வேண்டும். உள்ளேயே இருந்தால் சூடாக இருக்கும் என வைத்திருந்தால், நேரம் முடிந்த பிறகும், மைக்ரோவேவ் சமையலைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். பாத்திரங்கள் அடிபிடிப்பதோ, சமைக்கிற உணவு பொங்கி வழிவதோ இருக்காது. சமையல் முடிந்ததும், உள்ளே இருக்கும் சுழலும் தட்டை எடுத்து சோப்புத் தண்ணீரில் கழுவித் துடைத்தால் போதும். அவனின் உள்பகுதியை ஈரத்துணியால் துடைத்துக் காய வைத்தாலே சுத்தமாகி விடும்.
|