
வீட்டைத் தாங்குவது நிலமல்ல...அதிலுள்ள பெண்ணே! மெக்சிகோ பழமொழிசொத்து விஷயங்களை மிகக்குறிப்பாகவும் மிகத்தெளிவாகவும் குறிப்பிட்டே பவர் ஆவணத்தை தயாரிக்க வேண்டும். குறிப்பிட்ட சொத்தினை வாங்கி, பதிவு செய்வதற்கு மட்டும் எனத் தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.வெளிநாட்டுவாழ் இந்தியரின் முக்கிய பிரச்னை இது. ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துகளை வாங்க வேண்டியிருக்கும்போது தனித்தனியாக பவர் ஆஃப் அட்டர்னி தயாரிக்க முனைவதில்லை. நேரம், அலைச்சல் என பல காரணங்களைச் சொல்லி ஒரே பத்திரத்தின் மூலம் எல்லா அதிகாரங்களையும் கொடுத்துவிட்டு, இறுதியில் ஏமாந்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் வெளிநாடு போவதற்கு முன்பே உறவினர் யாரையேனும் பவர்தாரராக நியமித்து, அவருக்கு எல்லா அதிகாரமும் கொடுத்து விடுகிறார்கள்.
சென்னைவாசி ஒருவருக்கு 2005&ல் அமெரிக்க வேலை கிடைத்தது. 5 ஆண்டுகள் பணிவாய்ப்பு. உறவினர் ஒருவரை பவர்தாரர் ஆக்கிவிட்டு அமெரிக்கா சென்றார். அந்த பவரில் சொத்து வாங்குவதற்கு, விற்பதற்கு, வங்கியில் அடமானம் வைப்பதற்கு, லேஅவுட் போடுவதற்கு என சகல அதிகாரங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. நாடுவிட்டு நாடுபோய் சிரமப்பட்டுச் சம்பாதித்த பணத்தை இங்கே அனுப்பி, பவர்தாரர் மூலம் வளசரவாக்கத்தில் சொத்து வாங்கினார்.
பத்திரப்பதிவு முடிந்த பிறகு பத்திரத்தின் ஜெராக்ஸ் பிரதி ஒன்று அவருக்கு அனுப்பப்பட்டது. இனி எல்லாம் சுகமே என மகிழ்ந்தார். 2 ஆண்டுகள் கழித்து சென்னை வந்தபோது பெரும் அதிர்ச்சி. பவர்தாரரால் அந்தச் சொத்து 3 மாதத்துக்கு முன் விற்கப்பட்டிருந்தது. எப்படி இது நடந்தது என்று புரியவில்லை. பவர்தாரரை நியமிக்கும்போது சொத்து விற்பது உள்பட எல்லாவற்றுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டதுதான் இதற்குக் காரணம். மற்றவர்கள் நம்மை ஏமாற்றுவதற்கு நாமே வழி வகுக்கலாமா?
சரி... பவர் தயாரிப்பது எப்படி? விளக்குகிறார் ட்ரைஸ்டார் ஹவுசிங் நிர்வாக இயக்குனர் பா.ஜார்ஜ் பீட்டர் ராஜ்.
சொத்து விஷயங்களை மிகக்குறிப்பாகவும் மிகத்தெளிவாகவும் குறிப்பிட்டே பவர் ஆவணத்தை தயாரிக்க வேண்டும். குறிப்பிட்ட சொத்தினை வாங்கி, பதிவு செய்வதற்கு மட்டும் எனத் தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
ஆவணத்தை வெள்ளைத்தாளில் தயாரித்தாலே போதும்... முத்திரைத்தாள் தேவை இல்லை.
தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் அங்குள்ள ‘நோட்டரி’யிடம் கையொப்பம் பெற வேண்டும் (இந்தியாவில் ‘நோட்டரி பப்ளிக்’ போல). அதோடு, பவர் கொடுப்பவர் படம் மற்றும் இடது பெருவிரல் ரேகை இருக்க வேண்டும். நோட்டரியின் பெயர், முகவரி, அவருடைய லைசென்ஸ் காலாவதியாகும் நாள், கையெழுத்து ஆகியவை இடம்பெற வேண்டும். முக்கியமாக நோட்டரிக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட அனுமதி முத்திரை இடம்பெற வேண்டும். இரு சாட்சிகள் கையெழுத்திட வேண்டும். அனைத்துப் பக்கங்களிலும் பவர் கொடுப்பவர் கையொப்பம் இருக்க வேண்டும்.
பவர் ஆவணத்தை தபால் அல்லது கொரியர் மூலமாக பவர்தாரராக நியமிக்கப்படுபவருக்கு அனுப்ப வேண்டும். அதனுடன் விசா நகல் அல்லது அங்கு தங்க அனுமதி கிடைத்ததற்கான ஆதாரங்களில் ஏதேனும் ஒன்றும் இணைக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் பவரை பதிவு செய்ய வேண்டும். அதற்கு வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட பவர் ஆவணம், பவர்தாரராக நியமிக்கப்படுபவர் புகைப்படம், அடையாளச் சான்று ஆகியவை தேவை. முத்திரைத்தாள் கட்டணமாக ரூ.105 செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். பவர்தாரரின் புகைப்படம் ஆவணத்தின் ஏதாவது ஒரு பக்கத்தின் பின்புறம் ஒட்டப்பட்டு, மாவட்டப் பதிவாளர் அதில் கையொப்பம் இடுவார். பவர்தாரரால் கட்டணம் செலுத்தப்பட்ட விவரம் குறிப்பிடப்பட்டு, அதிலும் மாவட்டப் பதிவாளர் கையொப்பம் இடுவார்.
மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் எண் ஒன்று தரப்படும். மிக முக்கியமான இந்த எண்ணை சொத்து பதிவுசெய்யப்படும் கிரயப்பத்திரத்தில் மறக்காமல் குறிப்பிட வேண்டும்.
பவர் ஆவணத்தில் வெளிநாட்டில் நோட்டரி கையெழுத்திட்ட தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் இங்கு பதிவு செய்துவிட வேண்டும். அதற்குப் பிறகு செய்ய முடியாது. காலம் கடந்துவிட்டால், புதிய பவர் ஆவணத்தை வெளிநாட்டிலிருந்து அனுப்ப வேண்டும்.
இந்த பவர் முறையில் ஒரு குறைபாடு இருக்கிறது. அது பற்றியும், உங்கள் சொத்தை அடுத்தடுத்த தலைமுறைக்குப் பத்திரமாகக் கொண்டு சேர்க்கும் உயில் பத்திரம் பற்றியும் அடுத்த வாரம்...(கட்டுவோம்!)
தாஸ்