குறை



‘‘ஏண்டா மகேஷ்... டல்லாயிருக்கே?’’ - நண்பன் சாரதி கேட்டான்.
‘‘என் மனைவி ஆனந்தி என்கிட்ட கோவிச்சுக்கிட்டு அவங்கம்மா வீட்டுக்குப் போயிட்டாடா...’’ - மகேஷின் குரலில் சலிப்பு. சாரதி எதுவும் பேசவில்லை.

‘‘கல்யாணமாகி ஒரு வருஷம் கூட ஆகலை. மாசத்துக்கு நாலு தடவை இப்படி பொசுக் பொசுக்னு கோவிச்சிட்டு அம்மா வீட்டுக்கு ஓடிப் போயிடறா. ஒவ்வொரு முறையும் அவங்க சமாதானப்படுத்தி கூட்டி வந்து விட்டுட்டுப் போறாங்க. இப்படி ஒண்ணுமேயில்லாத விஷயங்களுக்கு இவ்வளவு கோபம் வருதுன்னா... அவளுக்கு மனரீதியா ஏதாவது கோளாறு இருக்கலாம்னு நான் சந்தேகப் படறேன். அதனால ஒரு நல்ல மனநல மருத்துவர்கிட்ட அழைச்சிட்டுப் போலாம்னு இருக்கேன்...’’ - மகேஷ் வருத்தத்தோடு பேசினான்.

‘‘அப்படியே நீயும் ட்ரீட்மென்ட் எடுத்துக்கோ!’’ என்றான் சாரதி.
‘‘என்னடா சொல்றே...’’ ‘‘ஆமாடா... அடிக்கடி கோவிச்சிக்கிட்டுப் போறது மனநோய்ன்னா, கோபம் வர்ற மாதிரி குற்றம் சொல்லிட்டே இருக்கறதும் ஒரு நோய்தான். அதுக்கு நீ ட்ரீட்மென்ட் எடுத்துக்கணும்தானே?’’ என்றான் சாரதி.

மகேஷ் திகைத்து நின்றான்.    

சுபாகர்