தேனிக்கு நியூட்ரினோ... தஞ்சைக்கு மீத்தேன்!



தமிழகத்தை மிரட்டும் திட்டங்கள்

தமிழகத்தின் மிக முக்கிய விவசாய கேந்திரங்கள் தஞ்சையும், தேனியும். இரண்டையும் அழித்துவிட்டால் தமிழகத்தை உணவுக்குக் கையேந்த வைக்கலாம். காவிரிப் பிரச்னையும் இல்லை. முல்லைப் பெரியாறு பிரச்னையும் இல்லை... இப்படித்தான் காய் நகர்த்துகிறது மத்திய அரசு. தேனியை அழிக்க நியூட்ரினோ தொழிற்சாலை. தஞ்சையை அழிக்க மீத்தேன் திட்டம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக காட்டையும் மேட்டையும் திருத்தி, கால்வாய்களை நீட்டி வார்த்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை கரிக்களஞ்சியமாக்கி தமிழர்களின் முகத்தில் கரியைப் பூச நினைக்கிறார்கள். அந்த வேலையை செவ்வனே செய்து முடிக்க ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்’ நிறுவனத்தை அழைத்து வந்திருக்கிறார்கள். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் துணையோடு வயற்காடுகளை அகழ்ந்து ஆயிரம் அடி ஆழத்துக்கும் மேல் குழாய்களைச் சொருகும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது இந்நிறுவனம்.
அது என்ன மீத்தேன்?

கொள்ளிவாய்ப் பிசாசு கேள்விப்பட்டிருக்கிறார்களா? அதை உயிர்ப்பிப்பது இந்த மீத்தேன்தான். இது ஒருவகை எரிவாயு. இயற்கையாக இது வெளிப்பட்டு எரிந்து அணைவதைப் பார்த்துத்தான் கிராமங்களில் கொள்ளிவாய்ப் பிசாசு உலவுகிறது என்பார்கள். உயிரினங்களின் கழிவுகள், குப்பைகளை நுண்ணுயிரிகளால் சிதைத்து இந்த வாயுவை எளிதாக உற்பத்தி செய்யலாம். பூமியின் அடி ஆழத்தில் புதைந்துள்ள நிலக்கரிப் பாளங்களுக்கு இடையிலும் இந்த வாயு நிறைந்திருக்கிறது. இதை ‘நிலக்கரிப் படிம மீத்தேன்’ என்பார்கள். உலகெங்கும் 850 டிரில்லியன் கனமீட்டர் நிலக்கரிப் படிம மீத்தேன் இருப்பதாக கணக்கிட்டுள்ளார்கள். இதற்கு உலக அளவில் நல்ல மார்க்கெட். எரிபொருளாகவும், மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.

புதுச்சேரியை ஒட்டியுள்ள பாகூர் முதல் மன்னார்குடி வரையிலான டெல்டா பகுதியில் 500 அடி முதல் 1650 அடி ஆழம் வரைக்கும் நிலக்கரி படிமங்கள் புதைந்து கிடக்கின்றன. அதன் ஊடாக 0.98 டிரில்லியன் மீத்தேன் இருப்பதாக சொல்கிறது ஆய்வு. அதை உறிஞ்சுவதே திட்டம்.

இதை எப்படி எடுப்பார்கள்?

‘‘முதலில் ஒரு உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் இலக்கு மீத்தேன் மட்டுமல்ல... கீழே பாளம் பாளமாக புதைந்திருக்கிற நிலக்கரியும்தான். இவர்கள் மீத்தேன் எடுக்கிற முறையே இதயத்தை உலுக்குகிறது. பூமிக்குக் கீழே 500 அடியிலிருந்து 1650 அடி வரை நிலக்கரிப் படிமம் இருக்கிறது. அதன் இடுக்குகளில் மீத்தேன் இருக்கிறது. இந்த அடுக்குகளுக்கு மேலே, லட்சக்கணக்கான ஆண்டுகளான, கதிரியக்கப் பொருட்களும் உலோக மாசுக்களும் மிகுந்த, கடல்நீரைப் போல 5 மடங்கு உப்புத்தன்மை கொண்ட தண்ணீர் இருக்கிறது. இவர்கள் ராட்சத இயந்திரங்கள் மூலம் அடி ஆழத்துக்கு, ஒன்றின் உள்ளே ஒன்றாக இரண்டு குழாய்களைச் சொருகுவார்கள்.

அதன்மூலம் சிலிக்கன், பாக்சைட், சிர்க்கோனியம், பெராக்சி டை சல்பேட். உள்பட 600 வேதிப்பொருட்கள் கலந்த ‘பி-டெக்ஸ்’ என்ற கலவையை உள்ளே செலுத்தி, நிலக்கரி படிமத்தை அழுத்தி உடைப்பார்கள். அந்த அழுத்தத்தால் ஒரு குழாயில் தண்ணீரும், மறுகுழாயில் மீத்தேன் வாயுவும் வரும். எடுக்கும் மீத்தேன் வாயுவை குழாய் மூலமாக எந்த நாட்டில் விலை அதிகம் கிடைக்கிறதோ, அங்கு கொண்டு போய் விற்பார்கள். கடும் ரசாயனங்கள், உலோகங்கள், உப்பு கலந்த தண்ணீரை நம் வயற்காடுகளிலும், வாய்க்கால்களிலும் விடுவார்கள். அது நிலத்தடி நீரில் கலக்கும். குடிநீர்த் தட்டுப்பாடு வரும். உப்புப்படிமங்கள் வயலில் படிந்து, சுனாமியால் பாதிக்கப்பட்ட நிலங்களை விட மோசமாக பாதிப்படையும்.

 புல், பூண்டு கூட முளைக்காது. உள்ளே செலுத்தப்படும் ரசாயனக் கலவையில் 30% மட்டுமே வெளியில் எடுக்கப்படும். 70% உள்ளேயே இருக்கும். அதனால் என்ன விளைவு ஏற்படும் என்று தெரியவில்லை. இயல்பான அடுக்குச்சூழல் பாதிக்கப்படுவதால் நிலநடுக்கம் வரலாம். மண் புதைவுகள் ஏற்படலாம்’’ என அதிர்ச்சியூட்டுகிறார் இத்துறையில் மிகுந்த அனுபவம் கொண்ட பொறியாளர் திருநாவுக்கரசு. 

‘‘பல நூற்றாண்டுகளாக வளம் கொழிக்கும் ஒரு நிலப்பரப்பின் தலையில் இவ்வளவு மோசமான ஒரு திட்டத்தைச் சுமத்தும்போது, அதன் விளைவுகள் பற்றி ஏதாவது ஒரு விஞ்ஞானியாவது வாய் திறக்கிறார்களா..?’’ என்று ஆதங்கப்படுகிறார். எங்கே எடுப்பார்கள்?

‘‘தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள்ல 691 சதுர கிலோ மீட்டர் பரப்புல இந்தத் திட்டம் வரப்போகுது. ஒரு ஊருக்கு இரண்டே முக்கால் ஏக்கர் நிலம் போதும்ங்கிறாங்க. 80 ஏக்கருக்கு ஒரு துளை அமைச்சு, கீழே குழாய்களை இறக்குறதோட, பக்கவாட்டில குழாய்களைச் செலுத்தி ஒண்ணோட ஒண்ணு இணைக்கப் போறாங்க. ஆய்வுக்காக இதுவரைக்கும் 50க்கும் மேற்பட்ட துளைகளை அமைச்சுட்டாங்க. 1200 கிராமங்களில் நிலம் வாங்கும் வேலை நடந்துக்கிட்டிருக்கு.

இந்த வேலைகளைத் தொடரக்கூடாதுன்னு தமிழக அரசு தடை விதித்தது. அதோடு ஒரு நிபுணர் குழுவையும் அமைச்சு 3 மாசத்துக்குள்ள அறிக்கை அளிக்கச் சொன்னாங்க. ஏழு மாதமாச்சு... இன்னைக்கு வரைக்கும் அந்தக் குழு அறிக்கை அளிக்கவேயில்லை. ஆனால் இவங்க  வேலை செஞ்சுக்கிட்டுத்தான் இருக்காங்க. காவிரி டெல்டாவில 18 லட்சம் ஏக்கர் நிலத்துல சாகுபடி நடக்குது. காவிரி நீரை நிறுத்தி அநீதி இழைச்சவங்க, அடுத்த கட்டமாக நிலத்தையே மழுங்கடிச்சு விவசாயிகளை விரட்டத் திட்டமிட்டு செயல்படுறாங்க. இதனால தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, விரைவில் தமிழகமே தாகத்தால தவிக்கப் போகுது’’ என ஆதங்கப்படுகிறார் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் தலைவர் கா.ரா.லெனின்.

இதைத் தடுக்க முடியாதா?


‘‘பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, செக் குடியரசு உள்ளிட்ட பல நாடுகளில் நிலக்கரிப்படிம மீத்தேன் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எல்லாக் கதவுகளும் திறந்திருக்கின்றன. மீத்தேனையும், நிலக்கரியையும் சுரண்டுவதில் ஆர்வம் காட்டுகிறார்களே ஒழிய, கழிவாக வரும் பிறவற்றை என்ன செய்வது என்று கவலைப்படவில்லை. உலகெங்கும் தடை செய்யப்படுகிற பேரபாயங்களை தொடர்ந்து தமிழகத்தின் தலையில் கட்டுகிறது மத்திய அரசு. இதில் ஆழ்ந்த உள்நோக்கம் உள்ளது’’ என்கிறார் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் சுந்தர்ராஜன்.
யாராவது கண்களை விற்று சித்திரம் வாங்குவார்களா..?

என்ன விளைவுகள்


* தமிழகத்தின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளில் கடும் குடிநீர்ப் பஞ்சம் வரும்.
* கடும் உப்புத்தன்மையும், வேதிப்பொருட்களும் கலந்த நில ஆழ நீரால் நிலங்களில் உப்பு படிந்து மலடாகும். காலப்போக்கில் டெல்டா பாலைவனமாகும்.
* கடல் நீர் நிலத்தடி நீரோடு கலக்கக்கூடும். நிலநடுக்கம், மண் உள்வாங்குதல் போன்ற அபாயங்களும் நேரலாம்.
* நிலக்கரி படிமத்தை நொறுக்குவதற்காக உள்ளே செலுத்தப்படும் ரசாயனங்கள் உணவிலும், நீரிலும் கலந்து புற்றுநோய் உள்ளிட்ட கதிரியக்க நோய்களை ஏற்படுத்தலாம்.

எவ்வளவு லாபம்?

டெல்டாவில் புதைந்துள்ள மொத்த மீத்தேனின் அளவு  0.98 ட்ரில்லியன் கனஅடி
30 ஆண்டுகளில் எடுக்க வாய்ப்புள்ள அளவு (60%)  0.59 ட்ரில்லியன் கனஅடி
மொத்த மதிப்பு (1 கன மீட்டர் விலை 30 ரூபாய்) ரூ.4 99 989 கோடி
இதன் மூலம் அரசுக்குக் கிடைக்கும் ராயல்டி (20%) ரூ.10 ஆயிரம் கோடி

டெல்டா புலிகள்


மீத்தேன் திட்டத்துக்கு எதிராக டெல்டா பகுதி இளைஞர்கள் ‘டெல்டா புலிகள்’ என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்கள். விழிப்புணர்வு பிரசாரங்கள், போராட்டங்கள் நடத்துவதோடு, வேலை நடக்கும் இடங்களில் அகற்றி வீசும் வேலையையும் செய்கிறது இந்த அமைப்பு. ‘‘வெளிநாட்டுல வேலை செஞ்ச பத்து நண்பர்கள் சேர்ந்து தொடங்கின அமைப்பு இது. ஃபேஸ்புக், டிவிட்டர்ல இயற்கை விவசாயம் பத்திப் பிரசாரம் பண்ணிக்கிட்டிருந்தோம். மீத்தேன் திட்டத்தால எங்க வாழ்க்கையே அழியும்னு நம்மாழ்வார் அய்யா மூலமா தெரிஞ்சுக்கிட்டோம். எல்லாரும் வேலையை விட்டுட்டு ஊருக்கு வந்துட்டோம். இப்போ 600 பேருக்கு மேல அமைப்புல இருக்காங்க’’ என்கிறார் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி.

- வெ.நீலகண்டன்