வீரப்பெண்!



பெண்களின் உரிமைக்காக போராடும் பெண்களுக்கு ‘வீரப்பெண்’ விருதை அமெரிக்கா வழங்குகிறது. இந்த ஆண்டு இந்த விருதை வாங்கிய லட்சுமியைக் கொண்டாடிவிட்டார், அமெரிக்க அதிபர் மனைவி மிச்செல்லி ஒபாமா. நிராகரித்த காதலுக்காக நிகழ்ந்த ஆசிட் வீச்சில் முகம் சிதைந்து உயிரையும் இழந்த காரைக்கால் வினோதினியைத் தெரியும்;

ஆதம்பாக்கம் வித்யாவைத் தெரியும். இப்படித்தான் லட்சுமிக்கும் நேர்ந்தது. எல்லோரையும் போல மூலையில் முடங்கி, சூரியனையோ மனிதர்களையோ பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கவில்லை அவர். பிடிக்காத காதலை ஏற்க மறுக்கும் எத்தனையோ இளம்பெண்களின் முகம் இப்படி சிதைக்கப்படுவதை நிறுத்தும் போராளியாக மாறினார்.

தெருமுனை பெட்டிக் கடைகளில்கூட சுலபமாக வாங்க முடிகிற பொருளாக ஆசிட் இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதிக்கக் காரணமாக இருந்தது, லட்சுமி போட்ட வழக்குதான். ‘‘ஆசிட் வீச்சில் பாதிக்கப்படும் பெண்கள் எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இதற்கு சிகிச்சை எடுக்க ஏராளம் செலவாகிறது. இந்த செலவை அரசு ஏற்க வேண்டும்’’ என இன்னமும் சட்டப் போராட்டங்களைத் தொடர்கிறார் அவர்.

லட்சுமிக்கு டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆவதே இளம் வயது ஆசையாக இருந்தது. 16 வயதில் முகம் சிதைக்கப்பட்டபோது, அந்த ஆசையும் சிதைந்தது. ஒரு போராளியாக இப்போது 25 வயதில் அந்த ஆசை நிறைவேறி இருக்கிறது. பெண்கள் பிரச்னைகள் தொடர்பான ஒரு டாக் ஷோவுக்கு அவர்தான் தொகுப்பாளர்!

அகஸ்டஸ்