கடைசி பக்கம்



நன்றாகப் படிக்கும் இளைஞன் அவன். அவனை மேற்படிப்பு படிக்க வைக்கும் அளவுக்கு பெற்றோருக்கு வசதியில்லை. பகுதிநேரமாக வேலை பார்த்தபடி படித்து வந்தான். தங்குமிடம், படிப்பு தொடர்பான இதர செலவுகளுக்கு அந்த வருமானம் போதுமானதாக இருந்தாலும், செமஸ்டர் ஃபீஸ் கட்டும்போது திணறிப் போவான். யாரிடமாவது கடன் வாங்கிக் கட்டி விட்டு, மாதா மாதம் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து அடைப்பான்.

வழக்கமாக அவனுக்குக் கடன் கொடுக்கும் நண்பன் வேறு ஊர் போய்விட, இம்முறை என்ன செய்வது என தவித்தான். கிராமத்தில் இருக்கும் தாத்தா ஞாபகம் வந்தது. அவனது அப்பா வழியில் தூரத்து உறவு. வசதியானவர். மனைவி இறந்து விட, பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்க, அவர் தனியாக வசிக்கிறார். மகா கஞ்சன் என்பதால் உறவினர்கள் யாருமே அவரைப் பார்ப்பதில்லை. ஒரு முயற்சி செய்து பார்ப்போம் என போனான். கிழவர் என்ன நினைத்தாரோ, இவனுக்குப் பணம் கொடுத்தார்.

மாதா மாதம் சம்பளம் வாங்கியதும் அவருக்கு அன்போடு ஒரு கடிதம் எழுதி, ஒரு செக்கும் இணைத்து அனுப்பி வைப்பான். ஆறு மாதங்களில் கடனை அடைத்தும் விட்டான். நெகிழ்ச்சியோடு அவருக்கு நன்றி சொல்லிக் கடிதமும் அனுப்பி இருந்தான். அடுத்த மாதம் திரும்பவும் ஃபீஸ் கட்ட வேண்டும். என்ன செய்வது என அவன் தவித்த நேரத்தில் தாத்தாவிடமிருந்து ஒரு கடிதம். கூடவே ஒரு செக். ‘ஃபீஸ் கட்ட பணத்தை வைத்துக் கொள். வழக்கம் போல மாதா மாதம் திருப்பிக் கொடு. மறக்காமல் எனக்குக் கடிதம் எழுது. பிள்ளைகள்கூட நலம் விசாரிக்காத தனிமையை நீக்குவது உன் அன்புக் கடிதங்கள்தான்’ என கடிதமும் எழுதியிருந்தார்.  அன்பைக் கொடுப்பவர்கள் எல்லாம் பெறுகிறார்கள்!

நிதர்ஸனா